Thursday, February 3, 2011

நல்லுறவு அல்ல... கொல்லுறவு - தமிழ்நாட்டு வார இதழ்


வன விலங்கின் உயிர் மீதே இத்தனை அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நம் அரசு, எல்லை பிடிபடாத கடல் பிரதேசத்தில் மீனவனின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதை 'இருநாட்டு நல்லுறவு' என்ற பெயரால் இன்னும் எத்தனை காலம் பேடித்தனமாக வேடிக்கை பார்க்குமாம்?

இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஆனந்தவிகடன்' வார இதழ் தனது தலையங்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளது. அந்த தலையங்கத்தின் முழுவிபரமாவது,

'இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்... தமிழக மீனவர்கள் கொலையைத் தடுக்க, இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடுவோம்' என்று கொழும்பு செல்லும் வழியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறிவிட்டுச் சென்றார்.

இலங்கைக் கடற்படையின் அராஜகத் தாக்குதலில் ஐந்நூறாவது மீனவர் சாகட்டும் என்று காத்திருந்து, அதைக் கொண்டாடவா இந்தப் பயணமும் அறிவிப்பும்? ஒருவரையும் சாகவிடாத அளவுக்கு ஓர் ஒப்பந்தத்தைப் போட முடியும் என்பது உண்மையானால், ஏன் இத்தனை தாமதம்?

இலங்கை - இந்திய அரசுகளுக்கு மத்தியில் நிலவி வரும் விநோதமான நட்பு உணர்வு, சாமானியர்கள் தொடங்கி தலைவர்கள் வரையில் எத்தனையோ உயிர்களுக்குச் சமாதி கட்டியிருக்கிறது. உலகமே கொதித்துக் கண்டித்தபோதும், துளிகூட அலட்டிக்கொள்ளாமல், தோளில் கை போட்டுக்கொண்டு பொருத்தமான பொய்களைச் சொல்லிச் சமாளிப்பதில் இந்த இரு அரசுகளின் ஒற்றுமை உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

இறந்த மீனவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை, அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை என்பதுதான் எப்போதும் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயம். இப்போது தேர்தல் நெருக்கம் என்பதால், வீடு தேடிச் சென்று ஆறுதல் சொல்வதும், 'மீனவ சமுதாயத் தலைவர் சிங்காரவேலரின் 151-வது பிறந்த நாள் விழாவை அரசே கொண்டாடும்' என்று அறிவிப்பு செய்வதுமாக, சற்றே விசேஷக் காட்சிகள்கொண்ட அரசியல் நாடகங்கள் அரங்கேறுகின்றன!

தனியார் நிலத்தில் மேய வரும் காட்டு விலங்குகள், மின்வேலியால் தாக்குண்டு இறந்துபோனால், நிலத்தின் உரிமையாளரைக் கைது செய்து, நீதியின் முன் நிறுத்துகிறது அரசாங்கம்.

வன விலங்கின் உயிர் மீதே இத்தனை அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நம் அரசு, எல்லை பிடிபடாத கடல் பிரதேசத்தில் மீனவனின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதை 'இருநாட்டு நல்லுறவு' என்ற பெயரால் இன்னும் எத்தனை காலம் பேடித்தனமாக வேடிக்கை பார்க்குமாம்?

http://www.puthinappalakai.org/view.php?20110203103091

No comments:

Post a Comment