Thursday, February 3, 2011

தமிழ்நாட்டு மீனவர்கள் 378பேர் இதுவரை சிறிலங்கா கடற்படையால் படுகொலை


1983ம் ஆண்டுக்கும் 2005 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சம்பவங்களின் விளைவாக 378 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோல தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினர் துப்பாக்கிகளுக்கு இரையாகும் சம்பவங்கள் 83ம் ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.

இவ்வாறு இந்தியாவின் ஆங்கில ஊடகமான The Times of India வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அந்த செய்திக் கட்டுரையின் முழுவிபரமாவது,

டிசம்பர் 08 2008 அன்று பாபு என்ற இந்த மீனவன் கடலுக்குச் சென்றபோது இதுதான் தனது இறுதிப்பயணம் என்பனை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் கடலுக்குப் புறப்பட்ட சில மணிநேரங்களின் பின்னர் பாக்கு நீரிணையிலுள்ள கச்சதீவுப் பகுதியில்வைத்து பாபு சிறிலங்காவினது கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கினைப் பதிவுசெய்த நாகபட்டினம் காவல்துறையினர் சிறிலங்காவினது கடற்படையினரே இந்தக் கொலைக்குப் பொறுப்பு என தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழ்நாட்டு மீனவன் சுடப்பட்ட செய்தி வெளியே வந்தபோது வழமைபோலவே அரசியல் கட்சிகள் அனைத்தும் வரிந்துகட்டிக்கொண்டு எழுந்தன. ஆனால் முன்னர் இடம்பெற்றதைப் போலவே ஒரு சிலமாதங்களின் பின்னர் இந்த வழக்கும் மூடப்பட்டது.

நாகபட்டினத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்ந்துவரும் பாபுவினது மனைவி சரஸ்வதி தனது கணவன் கொலைசெய்யப்பட்டமைக்கான பதிலுக்காக இன்றும் காத்திருக்கிறாள். "எனது கணவர் இறந்தபோது 20,000 ரூபாய்களை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனால் எனது கணவரின் உயிருக்கு எதுவும் ஈடாகாது. குறித்த அந்த நாளில் நான் அனைத்தையுமே இழந்துவிட்டேன்" என்கிறாள் சரஸ்வதி.

1983ம் ஆண்டுக்கும் 2005 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சம்பவங்களின் விளைவாக 378 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோல தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினர் துப்பாக்கிகளுக்கு இரையாகும் சம்பவங்கள் 83ம் ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.

"கச்சதீவு சிறிலங்காவிற்குத் தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்கள் 1975ம் ஆண்டு ஆரம்பித்தன" என ஆய்வாளரும் ஒளிப்படக் கலைஞருமான செல்வபிரகாஸ் கூறுகிறார். இராமேஸ்வரத்தினை அண்டியிருக்கும் கச்சதீவு 1974ம் ஆண்டு சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

ரைம்ஸ் ஒவ் இந்தியாவிற்குக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் இடம்பெறும் போதெல்லாம் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்களிலுள்ள காவல்நிலையங்களில் இந்திய துப்பாக்கிகள் சட்டத்தின் 307ம் பிரிவின்கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

பெரும்பாலான வழக்குகளில் குறிப்பட்ட இந்தச் சம்பவமானது "கச்சதீவுக்கு அருகாக இந்தியக் கடல் எல்லையில் இடம்பெற்றது" என்றும் இதற்குச் சிறிலங்காவினது கடற்படையினர்தான் பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வாறு தொடரப்பட்ட பெரும்பாலான வழக்குகள் போதிய தகவலின்மையினாலும் தாக்குதலாளிகள் தொடர்பான ஆதாரங்கள் இன்மையினாலும் கைவிடப்பட்டிருக்கிறது.

"மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு எதிரான வழக்குகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச உதவிகள் கிடைப்பதற்கு வழிசெய்கிறதே தவிர வேறெதற்குமில்லை. சிறிலங்காக் கடற்படையினரின் தாக்குதலினால் காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட பல நூற்றுக்கண்க்கான மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் போதிய எதனையும் செய்யவில்லை" என ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாஸ் கூறுகிறார். கச்சதீவுக் கடற்பிராந்தியத்திலேயே அதிக இறால் பிடிபடுவதால் அதிகளவிலான மீனவர்கள் இந்தப் பகுதியினை அதிகம் நாடிச்செல்கிறார்கள்.

சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுடனான போர் இடம்பெற்றுவந்த காலப்பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் 2009ம் ஆண்டு புலிகளமைப்பு இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் சம்பவங்களின் அளவு சற்றுக் குறைந்திருப்பதாகவும் கல்விமானங்களும் செயற்பாட்டாளர்களும் கூறுகிறார்கள்.

"இதுபோல போர் முடிவுக்குவந்துவிட்ட பின்னரும் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதானது மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விடயத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது" என்கிறார் பீப்பிள் வோச் என்ற தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்த ராஜன். "புதுடில்லியினைப் பொறுத்தவரையில் சிறிலங்கா, பாகிஸ்தானைப் போல் அல்லாமல் அதன் நட்பு நடாகும். ஆனால் பாகிஸ்தான்கூட இதுவரை இந்திய மீனவர்கள் ஒருவரையேனும் சுட்டுக்கொன்ற வரலாறு கிடையாது" என்றார் அவர்.

சிறிலங்கா கடற்படையினரின் செயற்பாடுகள் அவர்கள் அனைத்துலக நெறிமுறைகளின் வழி ஒழுகுகிறார்கள் என்பதைக் காட்டவில்லை என வன்னிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கான வல்லுநர்கள் குழுவில் அங்கம் வகித்த வி. சூரியநாராயணன் கூறுகிறார். அனைத்துலக ரீதியில் நோக்குமிடத்து தொடர்புடைய நாடுகளில் கடல்சார் எல்லைகளைக் கவனத்தில்கொண்டு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை. எல்லைதாண்டிய மீன்பிடி என்பது அடிக்கடி இடம்பெறும் ஒரு சம்பவமாகும்.

"சிறிலங்காவினைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்கிறார்கள். அதுபோலவே இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் மற்றும் சிறிலங்காவின் கடற்பிராந்தியத்திலும் பங்களாதேஸ் மீனவர்கள் மியன்மார் கடற்பிராந்தியத்திலும் நுழைந்து எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். ஐ.நாவின் கடல்சார் சட்டத்தின் 73 மற்றும் 145வது சரத்துக்களின் அடிப்படையில் இதுபோல எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவது ஒரு குற்றமாகும்" எனச் சூரியநாராயணன் தொடர்ந்தார்.

அனைத்துலக சட்ட ஆணையத்தின் படி, அயல் நாடுகளின் கடற்பிராந்தியத்திற்குள் சென்று மீன்பிடியில் ஈடுபட முனைவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இதுபோல எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடாத்தக்கூடாது என இந்த ஆணையகம் கூறுகிறது.

சரி குறிப்பிட்டதொரு மீனவர் படுகாயமடைந்துவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் அதற்கான நட்டஈட்டினை எந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் என்பதில் எந்தவிதமான தெளிவான பதிலும் இல்லை. "கரையோரச் சமூகங்களின் மத்தியில் அளவில் பெரிய வாக்கு வங்கிகள் இருக்கின்றபோதும் அரசியல் வாதிகள் உருப்படியான காரியங்கள் எதனையும் முன்னெடுப்பதில்லை" என மூலோபாய மற்றும் பாதுகாப்புக் கற்கைகள் என்பதற்கான அமைப்பின் தலைவர் வாசன் கூறுகிறார்.

குறிப்பிட்டதொரு தேர்தலின் முடிவையே மாற்றக்கூடிய 37 தேர்தல் தொகுதிகள் கரையோர மீனவர் சமூகத்தினைக் கொண்டது. ஆனால் சரஸ்வதி போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமைதான் என்ன?

http://www.puthinappalakai.org/view.php?20110203103091

No comments:

Post a Comment