Showing posts with label #tnfisherman. Show all posts
Showing posts with label #tnfisherman. Show all posts

Thursday, February 3, 2011

நல்லுறவு அல்ல... கொல்லுறவு - தமிழ்நாட்டு வார இதழ்


வன விலங்கின் உயிர் மீதே இத்தனை அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நம் அரசு, எல்லை பிடிபடாத கடல் பிரதேசத்தில் மீனவனின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதை 'இருநாட்டு நல்லுறவு' என்ற பெயரால் இன்னும் எத்தனை காலம் பேடித்தனமாக வேடிக்கை பார்க்குமாம்?

இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஆனந்தவிகடன்' வார இதழ் தனது தலையங்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளது. அந்த தலையங்கத்தின் முழுவிபரமாவது,

'இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்... தமிழக மீனவர்கள் கொலையைத் தடுக்க, இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடுவோம்' என்று கொழும்பு செல்லும் வழியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறிவிட்டுச் சென்றார்.

இலங்கைக் கடற்படையின் அராஜகத் தாக்குதலில் ஐந்நூறாவது மீனவர் சாகட்டும் என்று காத்திருந்து, அதைக் கொண்டாடவா இந்தப் பயணமும் அறிவிப்பும்? ஒருவரையும் சாகவிடாத அளவுக்கு ஓர் ஒப்பந்தத்தைப் போட முடியும் என்பது உண்மையானால், ஏன் இத்தனை தாமதம்?

இலங்கை - இந்திய அரசுகளுக்கு மத்தியில் நிலவி வரும் விநோதமான நட்பு உணர்வு, சாமானியர்கள் தொடங்கி தலைவர்கள் வரையில் எத்தனையோ உயிர்களுக்குச் சமாதி கட்டியிருக்கிறது. உலகமே கொதித்துக் கண்டித்தபோதும், துளிகூட அலட்டிக்கொள்ளாமல், தோளில் கை போட்டுக்கொண்டு பொருத்தமான பொய்களைச் சொல்லிச் சமாளிப்பதில் இந்த இரு அரசுகளின் ஒற்றுமை உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

இறந்த மீனவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை, அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை என்பதுதான் எப்போதும் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயம். இப்போது தேர்தல் நெருக்கம் என்பதால், வீடு தேடிச் சென்று ஆறுதல் சொல்வதும், 'மீனவ சமுதாயத் தலைவர் சிங்காரவேலரின் 151-வது பிறந்த நாள் விழாவை அரசே கொண்டாடும்' என்று அறிவிப்பு செய்வதுமாக, சற்றே விசேஷக் காட்சிகள்கொண்ட அரசியல் நாடகங்கள் அரங்கேறுகின்றன!

தனியார் நிலத்தில் மேய வரும் காட்டு விலங்குகள், மின்வேலியால் தாக்குண்டு இறந்துபோனால், நிலத்தின் உரிமையாளரைக் கைது செய்து, நீதியின் முன் நிறுத்துகிறது அரசாங்கம்.

வன விலங்கின் உயிர் மீதே இத்தனை அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நம் அரசு, எல்லை பிடிபடாத கடல் பிரதேசத்தில் மீனவனின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதை 'இருநாட்டு நல்லுறவு' என்ற பெயரால் இன்னும் எத்தனை காலம் பேடித்தனமாக வேடிக்கை பார்க்குமாம்?

http://www.puthinappalakai.org/view.php?20110203103091

தமிழ்நாட்டு மீனவர்கள் 378பேர் இதுவரை சிறிலங்கா கடற்படையால் படுகொலை


1983ம் ஆண்டுக்கும் 2005 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சம்பவங்களின் விளைவாக 378 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோல தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினர் துப்பாக்கிகளுக்கு இரையாகும் சம்பவங்கள் 83ம் ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.

இவ்வாறு இந்தியாவின் ஆங்கில ஊடகமான The Times of India வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அந்த செய்திக் கட்டுரையின் முழுவிபரமாவது,

டிசம்பர் 08 2008 அன்று பாபு என்ற இந்த மீனவன் கடலுக்குச் சென்றபோது இதுதான் தனது இறுதிப்பயணம் என்பனை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் கடலுக்குப் புறப்பட்ட சில மணிநேரங்களின் பின்னர் பாக்கு நீரிணையிலுள்ள கச்சதீவுப் பகுதியில்வைத்து பாபு சிறிலங்காவினது கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கினைப் பதிவுசெய்த நாகபட்டினம் காவல்துறையினர் சிறிலங்காவினது கடற்படையினரே இந்தக் கொலைக்குப் பொறுப்பு என தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழ்நாட்டு மீனவன் சுடப்பட்ட செய்தி வெளியே வந்தபோது வழமைபோலவே அரசியல் கட்சிகள் அனைத்தும் வரிந்துகட்டிக்கொண்டு எழுந்தன. ஆனால் முன்னர் இடம்பெற்றதைப் போலவே ஒரு சிலமாதங்களின் பின்னர் இந்த வழக்கும் மூடப்பட்டது.

நாகபட்டினத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்ந்துவரும் பாபுவினது மனைவி சரஸ்வதி தனது கணவன் கொலைசெய்யப்பட்டமைக்கான பதிலுக்காக இன்றும் காத்திருக்கிறாள். "எனது கணவர் இறந்தபோது 20,000 ரூபாய்களை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனால் எனது கணவரின் உயிருக்கு எதுவும் ஈடாகாது. குறித்த அந்த நாளில் நான் அனைத்தையுமே இழந்துவிட்டேன்" என்கிறாள் சரஸ்வதி.

1983ம் ஆண்டுக்கும் 2005 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சம்பவங்களின் விளைவாக 378 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோல தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினர் துப்பாக்கிகளுக்கு இரையாகும் சம்பவங்கள் 83ம் ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.

"கச்சதீவு சிறிலங்காவிற்குத் தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்கள் 1975ம் ஆண்டு ஆரம்பித்தன" என ஆய்வாளரும் ஒளிப்படக் கலைஞருமான செல்வபிரகாஸ் கூறுகிறார். இராமேஸ்வரத்தினை அண்டியிருக்கும் கச்சதீவு 1974ம் ஆண்டு சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

ரைம்ஸ் ஒவ் இந்தியாவிற்குக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் இடம்பெறும் போதெல்லாம் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்களிலுள்ள காவல்நிலையங்களில் இந்திய துப்பாக்கிகள் சட்டத்தின் 307ம் பிரிவின்கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

பெரும்பாலான வழக்குகளில் குறிப்பட்ட இந்தச் சம்பவமானது "கச்சதீவுக்கு அருகாக இந்தியக் கடல் எல்லையில் இடம்பெற்றது" என்றும் இதற்குச் சிறிலங்காவினது கடற்படையினர்தான் பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வாறு தொடரப்பட்ட பெரும்பாலான வழக்குகள் போதிய தகவலின்மையினாலும் தாக்குதலாளிகள் தொடர்பான ஆதாரங்கள் இன்மையினாலும் கைவிடப்பட்டிருக்கிறது.

"மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு எதிரான வழக்குகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச உதவிகள் கிடைப்பதற்கு வழிசெய்கிறதே தவிர வேறெதற்குமில்லை. சிறிலங்காக் கடற்படையினரின் தாக்குதலினால் காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட பல நூற்றுக்கண்க்கான மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் போதிய எதனையும் செய்யவில்லை" என ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாஸ் கூறுகிறார். கச்சதீவுக் கடற்பிராந்தியத்திலேயே அதிக இறால் பிடிபடுவதால் அதிகளவிலான மீனவர்கள் இந்தப் பகுதியினை அதிகம் நாடிச்செல்கிறார்கள்.

சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுடனான போர் இடம்பெற்றுவந்த காலப்பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் 2009ம் ஆண்டு புலிகளமைப்பு இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் சம்பவங்களின் அளவு சற்றுக் குறைந்திருப்பதாகவும் கல்விமானங்களும் செயற்பாட்டாளர்களும் கூறுகிறார்கள்.

"இதுபோல போர் முடிவுக்குவந்துவிட்ட பின்னரும் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதானது மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விடயத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது" என்கிறார் பீப்பிள் வோச் என்ற தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்த ராஜன். "புதுடில்லியினைப் பொறுத்தவரையில் சிறிலங்கா, பாகிஸ்தானைப் போல் அல்லாமல் அதன் நட்பு நடாகும். ஆனால் பாகிஸ்தான்கூட இதுவரை இந்திய மீனவர்கள் ஒருவரையேனும் சுட்டுக்கொன்ற வரலாறு கிடையாது" என்றார் அவர்.

சிறிலங்கா கடற்படையினரின் செயற்பாடுகள் அவர்கள் அனைத்துலக நெறிமுறைகளின் வழி ஒழுகுகிறார்கள் என்பதைக் காட்டவில்லை என வன்னிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கான வல்லுநர்கள் குழுவில் அங்கம் வகித்த வி. சூரியநாராயணன் கூறுகிறார். அனைத்துலக ரீதியில் நோக்குமிடத்து தொடர்புடைய நாடுகளில் கடல்சார் எல்லைகளைக் கவனத்தில்கொண்டு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை. எல்லைதாண்டிய மீன்பிடி என்பது அடிக்கடி இடம்பெறும் ஒரு சம்பவமாகும்.

"சிறிலங்காவினைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்கிறார்கள். அதுபோலவே இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் மற்றும் சிறிலங்காவின் கடற்பிராந்தியத்திலும் பங்களாதேஸ் மீனவர்கள் மியன்மார் கடற்பிராந்தியத்திலும் நுழைந்து எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். ஐ.நாவின் கடல்சார் சட்டத்தின் 73 மற்றும் 145வது சரத்துக்களின் அடிப்படையில் இதுபோல எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவது ஒரு குற்றமாகும்" எனச் சூரியநாராயணன் தொடர்ந்தார்.

அனைத்துலக சட்ட ஆணையத்தின் படி, அயல் நாடுகளின் கடற்பிராந்தியத்திற்குள் சென்று மீன்பிடியில் ஈடுபட முனைவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இதுபோல எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடாத்தக்கூடாது என இந்த ஆணையகம் கூறுகிறது.

சரி குறிப்பிட்டதொரு மீனவர் படுகாயமடைந்துவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் அதற்கான நட்டஈட்டினை எந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் என்பதில் எந்தவிதமான தெளிவான பதிலும் இல்லை. "கரையோரச் சமூகங்களின் மத்தியில் அளவில் பெரிய வாக்கு வங்கிகள் இருக்கின்றபோதும் அரசியல் வாதிகள் உருப்படியான காரியங்கள் எதனையும் முன்னெடுப்பதில்லை" என மூலோபாய மற்றும் பாதுகாப்புக் கற்கைகள் என்பதற்கான அமைப்பின் தலைவர் வாசன் கூறுகிறார்.

குறிப்பிட்டதொரு தேர்தலின் முடிவையே மாற்றக்கூடிய 37 தேர்தல் தொகுதிகள் கரையோர மீனவர் சமூகத்தினைக் கொண்டது. ஆனால் சரஸ்வதி போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமைதான் என்ன?

http://www.puthinappalakai.org/view.php?20110203103091

Wednesday, February 2, 2011

த‌கவல் நதி பாய்ந்து ஓட‌ட்டும்;டிவிட்டர் பிரகடனம்.

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் போது உருவாகியிருப்பது தற்செயலானது என்றாலும் பொருத்தமானது என்றே தோன்றுகிற‌து.
இதற்கான காரணம் மிகவும் சுலபமானது.மீனவர் ஆதரவு இயக்கம் போலவே எகிப்து மக்கள் போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது டிவிட்டர் மற்றும் அதன் சகோதர சேவைகள் தான்.(பேஸ்புக்,யூடியூப்).
எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து போன டுனிசிய மக்கள் டிவிட்டர் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்துவங்கியது அரசுக்கு எதிரான மக்கள் இயக்கமாக உருவானது.
டுனிசியாவின் புரட்சி தீ மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவலாம் என்று கணிக்கப்பட்டதற்கு ஏற்பவே எகிப்தில் பதவி நாற்காலியில் பல ஆண்டுகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் முபாரக் அரசுக்கும் எதிரான‌ போராட்டம் வெடித்தது.எதிர்பார்க்க கூடியது போலவே எகிப்து அரசு முதல் வேலையாக டிவிட்டருக்கு தடை விதித்து இண்டெர்நெட் பயன்பட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.
போராட்டத்தை நசுக்க எப்போதுமே ஆதக்க சக்திகள் பல்வேறு அடக்கு முறைகளை கடைபிடித்து வந்துள்ளனர்.தகவல் யுகத்தில் மக்கள் போராட்டத்திற்கான மாபெரும் ஆயுதமாக இணையம் உருவாகி இருப்பதால் போராட்டம் என்று வரும் போது அரசுகள் முதலில் செய்வது இண்டெர்நெட்டின் குரல் வலையை நெறிப்பது தான்.
அதிலும் குறிப்பாக இப்போது டிவிட்டரில் கை வைக்கின்றனர்.
டிவிட்டர் செய்திகள் மூலம் போராட்டத்திற்கு தூண்டுகோளாக இருக்ககூடிய‌ தகவல்கள பகிர்ந்து கொள்ளப்பட்டு பரஸ்பர ஆதரவு திரட்டப்படுகிற‌து.வெகுஜன ஊடகங்கள் தனிக்கை மற்றும் லாப நஷ்ட கணக்கின் அடிப்படையில் செய்திகளை சீர் தூக்கி பார்த்து வெளியிடும் நிலையில் இணையவாசிகள் எந்தவித அச்சமோ தய‌க்கமோ இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டு ஆதரவு திரட்ட டிவிட்டரும் பேஸ்புக்கும் கை கொடுக்கின்றன.
எனவே தான் செஞ்சீனமும் சரி மதாடிப்படைவாத ஈரானும் சரி மக்கள் அதிருப்தியை எதிர் கொள்ளும் போது டிவிட்டர் நதியின் மூலம் எதிர்ப்பு தகவல்கள் பாய்ந்தோடுவதை தடுக்க வேண்டும் என நினைக்கின்றன.
இப்போது எகிப்திலும் இது தான் நடந்திருக்கிறது.
உண்மையில் எந்த ஒரு நாட்டில் டிவிட்டருக்கு தடை விதிக்கப்படுகிறதோ அங்கு நிலைமை சரியில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு டிவிட்டர் மக்கள் சாதனமாக உருவாகியுள்ளது.
வர்த்தக நிறுவனமாக இருந்த போதிலும் டிவிட்டர் நிர்வாகம் இதனை உணர்ந்திருப்பது நல்ல விஷ‌யம்.அதைவிட இந்த புரிதலை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள‌ அறிக்கை வரவேற்கத்தக்கது.
டிவிட்டர் நதி பாய்ந்தோடட்டும் என்னும் தலைப்பிலான பதிவில் டிவிட்டர் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன்,தங்களுக்கு அர்த்தமுள்ள வகையில் எந்த இடத்தில் இருப்பவரும் உடனடியாக தொடர்பு கொள்ள வழி செய்வதே டிவிட்டரின் நோக்கம் என்றும் இதற்கு கருத்து சுதந்திரம் மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சில டிவிட்டர் செய்திகள் அடுக்குமுறை தேசங்களில் முற்போக்கான மாற்றத்தை கொண்டு வர வல்லவை என்றும் கூறியுள்ள ஸ்டோன் டிவிட்டரின் உள்ளடக்கத்தில் உடன்பாடு  இல்லாவிட்டாலும் கூட அந்த தகவல்கள் பாய்ந்தோட செய்து வருவதாக கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரத்தை அடிப்படை ம‌னித‌ உரிமை என்று குறிப்பிட்டுள்ள ஸ்டோன் எந்த கருத்தையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதை தடுக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
டிவிடரின் தணிக்கை கொள்கை பற்றியும் விரிவாக விளக்கியுள்ள ஸ்டோன் கருத்து சுதந்திரம் தொடர்பான டிவிட்டரின் கருத்துக்களை பின்தொடர்வதற்கான முகவரியையும் கொடுத்துள்ளார்.
டிவிட்டர் ஒரு போராட்ட கருவியாக உருவாகியுள்ள நிலையில் டிவிட்டரின் இந்த தன்னிலை விளக்கம் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான ஆதரவு வரவேற்கத்தக்கதது.
சில ஆண்டுகளுக்கு முன் ஈரானில் எதிர்ப்பு அலை எழுந்த போது டிவிட்டரே அதன் மையமாக விளங்கியது.அப்போது டிவிட்ட தளத்தின் பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டிருந்த‌து.இந்த நேரத்தில் டிவிட்ட மூடப்பட்டால் போராட்டக்காரகளின் குரல் கேட்காமல் போய் விடும் என் க‌ருதி அமெரிக்க அரசே டிவிட்டரிடம் பராமரிப்பு பணிகளை தள்ளிவைக்க கேட்டுக்கொண்டது நினைவிருக்கலாம்.
———-
http://blog.twitter.com/2011/01/tweets-must-flow.htm
———-
(தமிழக மீனவர்களுக்கான டிவிட்டர் இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்)


 cybersimman

Tuesday, February 1, 2011

மீனவர் துயரம் தீயாக பரவியது

 


இலவச வேட்டியை கட்டி கலர் டிவி பார்க்கும் தமிழனுக்கு கடலில் செத்து மிதக்கும் தமிழனை பற்றி கவலை இருக்காது
என நினைத்த தமிழரசுக்கும் இந்திய அரசுக்கும் இணைய தோழர்கள் ஆப்பு வைத்து வருகிறார்கள்.
நூற்று கணக்கான டிவிட்டுகளால் குத்தி வருகிறார்கள் இந்தியா எனும் ஆனைக்கு டிவிட் எனும் அங்குசம் சின்னதுதான்
இருந்தாலும் அது நேராக குத்தவேண்டிய இடத்தில் குத்துகிறது .

வழக்கமாக மொக்கை, சில பொழுதுபோக்கு எழுத்தாளர்களை பற்றிய சண்டை சில கவிதைகள் சில முற்போக்கு கட்டுரைகள் சில வசவுகள் என மிதக்கும் இந்த வெளி இப்போது போர்குரலுடன் திமிரி எழுகிறது .

தேர்தல் என்பது கந்துடைப்பு அதற்கு இலவசம் என்பது ஏமாற்று என்பது சாதாரணமக்களுக்கே புரிந்துவிட்ட நிலையில் இணைய வாசிப்பாளர்கள்
அடுத்த கட்டமாக மத்திய மாநில அனைத்து ஓட்டு கட்சி அரசியல் வாதிகளையும்
டிவிட்டரில் தோலுரிக்கிறார்கள்

மீனவர்கள் கடல் எல்லை தாண்டி போவதுதான் பிரச்சனை என யாரும் சொல்லமுடியாது ஏனெனில் இந்தியாவின் கடல் எல்லை எது இலங்கையின் கடல் எல்லை எதுவென்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்கிறது போதும்

மீனவர்கள்  எல்லைகளை கடந்தவர்கள் என்கிற நமது வாதம் வருகிறது

மொத்தத்தின் இந்த மீனவர் பிரச்சனை என்பது ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்து தனியாக பார்க்க முடியாது

ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுதமிழர்கள் கொல்லப்படும்போது போர்குரல் எழுப்பனும்


இணையத்தில் பற்றவைக்கப்பட்டுள்ளது ஒரு புரட்சி தீ நிச்சயமாகவே அதை அணையாமல் கொண்டு செல்ல வேண்டும்

நிறைய நண்பர்கள் மீனவர் பிரச்சனை குறித்த கட்டுரைகளை தேடி படித்து கீச்சுகிறார்கள்
இது ஒரு விசயத்தின் மீது முன்பிருந்த அசட்டையான மனப்பான்மையை போக்குகிறது
மேலும் நடைமுறை விசயத்தின் தீவிரத்தை விடுத்து கதை கவிதை எனும் கற்பனை குதிரைகளை தற்காலிகமாகவேணும் நிருத்தி வைக்கிறது .

சாதி , இன , வர்க்க வேறுபாடின்றி நாமனைவரும் மீனவ நண்பனுக்காக ஒன்று சேர்கிறோம் என்பதே ஒரு பெரிய புரட்சிதான்

புரச்சியை ஆகாத விசயமாக அதை புர்ச்சி என கேலி செய்தவர்கள் தமிழக மீனவர்களுக்காக நடக்கும் புரட்சியை கண்டுகொள்ளட்டும்

மறுபுறம் நாங்கள் களத்தில் இருக்கிறோம் நீங்கள் மத்தியதரவர்க்கம் இணையத்தில் சும்மா வாள் சுழற்றுகிறீர்கள் என சொன்ன போலி முற்போக்குவாதிகளே இது புரட்சிகரமானது என
சொல்ல வைத்து இருக்கிறது

இணையமோ மற்றெவ் ஊடகமோ அதனளவில் பிற்போக்குதனமில்லாதவை
அதை உபயோக்கிறவனவே அதை தீர்மானிக்கிறான் என்பதை இந்த நபர்கள் இப்போதாவது புரிந்து கொண்டமைக்கு நன்றி

மனிதன் மிக கொடூரமாக ஒடுக்கப்படும்போது புரட்சி வரும் என்பதை இது காட்டுகிறது

பிரச்சனையை விரிவாக அறிய  சொடுக்கவும்

http://inioru.com/?p=16420
--
தியாகு

தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?

ராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் என்பது தனித்த பிரச்சனையல்ல. இலங்கையின் இனவாதப் போக்கிற்கும் அதை எதிர்த்துக் கிளம்பிய ஈழ மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கும், இப்போது மாபெரும் இனப்படுகொலை ஒன்றின் மூலம் போர் முடித்து வைக்கப்பட்டிருப்பதற்கும், இலங்கைக்கு வெளியே தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை நசுக்குவதற்கும், மீண்டும் ஒரு போராட்டம் ஈழத்தில் வேர் விடாத படி அதன் அஸ்திவாரங்களில் ஒன்றாக பாம்பன் பகுதியை தங்களின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும், தனியார் – தாராளமயத்திற்காக கடலையும் கரையோரங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காய் இந்திய, இலங்கை அரசுகளின் இந்த கூட்டுக்கொலை இராமேஸ்வரத்தில் நடத்தப்படுகிறது.
இக்கொலைகளை இலங்கை கடற்படைகள் முப்பதாண்டுகளாய் செய்தது. இப்போது மீனவர்களைக் கொல்லவென்றே கூலிப்படைகளை நிறுவியிருக்கிறது இலங்கை. இந்தியா இக்கொலைகளை மறைமுகமாக ஆதரிக்கிறது. விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட இந்திய அரசும், பௌத்த சிங்கள பேரினவாத அரசும் இணைந்து தங்களின் சொந்த சுயலாப வர்த்தக, அரசியல் நலன்களுக்காய இக்கொலைகளை செய்து கொண்டு, கண் துடைப்பு நாடகங்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றது.

இரு நாட்டு தமிழர்களிடையே பிளவு?

இராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் கடந்த முப்பதாண்டுகளாய் நடக்கிறது. சுமார் 500- க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் போர், ஈழ மக்களின் துயரம், ஈழம் என்கிற அளவிலேயே தங்களின் தமிழார்வத்தை வெளிப்படுத்திய தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அதே அளவுக்கு தமிழக மீனவப் படுகொலைகளைக் கண்டித்ததில்லை.
ஈழ விவாகரம் தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்ட அளவுக்கு இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்டதில்லை. மாபெரும் இன அழிப்பின் பின்னர், ஈழ மக்கள் இராணுவ நிழலில் அமைதியான பின்னர் இப்போது அதிகமாக இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை பேசப்படுகிறது. அதுவும் சிறிய அளவில்தான். திராவிட இயக்க அரசியலிலும் மீனவ மக்கள் பிரச்சனை பேசப்பட்டதும் இல்லை. அதற்கு அக்கறையான எந்த முடிவுகளும் எடுக்கப்பட்டதும் இல்லை.
ராஜீவ் கொலைக்கு முன்னர் இலங்கைக் கடற்படைக் கொலைகள் என்று மட்டுமே (அதுதான் உண்மை) சொல்லப்பட்ட மீனவர் படுகொலைகள், ராஜீவ் கொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் நிகழ்த்தும் கொலைகள் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது. போர் காலத்தில் மரியா என்ற படகில் வந்து புலிகள் சுட்டுக் கொன்றதாகச் சொன்னார்கள். இந்த நிலையில்தான் 2009 – மே மாதம் போர் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது புலிகள் இல்லை. ஆனால் மீனவர் படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போது சொல்கிறார்கள், “இலங்கை மீனவர்களின் வளங்களை இந்திய மீனவர்கள் கொள்ளையடிக்கிறார்கள், வலைகளை இந்தியப் படகுகள் சேதப்படுத்துகின்றன” என்கிறார்கள். இது தொடர்பாக இந்திய இலங்கை மீனவர்களிடையே நடந்த பேச்சு வார்த்தை தொடர்பாக ஆழமானதும் அவசியமானதுமான இக்கட்டுரையைப் படியுங்கள், பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். (இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? – அகில். http://inioru.com/?p=16420 )
அதாவது நாம் தமிழக மீனவர்களைக் கொல்கிறது இலங்கை கடற்படை என்கிறோம். அவர்களோ “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள், மீன் வளங்களை அழிக்கிறார்கள், வலைகளை அறுத்தெரிகிறார்கள்” என்று தமிழக, ஈழத் தமிழ் மீனவர்களிடையே பிளவை உண்டு பண்ணுகிறார்கள். உண்மையில் தமிழக, ஈழத் தமிழ் மீனவர்களிடையே பிளவை உருவாக்கும் நோக்கம் யாருடையது? இரு நாட்டு மீனவர்களுடையதா? இரு நாட்டு அரசுகளுடையதா?
அந்த வகையில் கடைசியாக இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி இதழ் ( யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27971 ) இப்படி  ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. ஈழ மக்கள் அமைதியாக்கப்பட்டு விட்ட நிலையில் அறிவுஜீவித்தளத்தில் இலங்கை அரசின் அரசியல் நிலைகளை முன்னெடுக்க விரும்பும் சிலர் பருத்தித்துறை மீனவர் குரலில் இப்போது பேசத் துவங்கியிருக்கிறார்கள்.
பருத்தித் துறைப் பகுதியைச் சார்ந்த மரியகுணஸ்டீன்,  // “இது சிங்க இறால் பிடிக்கும் காலம். இந்தக் காலத்தில் தெற்கிலிருந்து சிங்கள மக்களும் முனைப்பகுதிக்கு மீன்பிடிக்க வருகிறார்கள். கடல்மார்க்கமாகவே வந்து, அந்த வழியிலேயே அவர்கள் செல்கிறார்கள். இந்திய மீனவர்களால் தான் தொழிலில் எமக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. நாம் வலை விரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன. இதன் காரணமாக நாம் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்கிறோம். கடந்த வாரம்கூட சுமார் ஒன்றரை லட்சம் ரூபா விரயமானது. இதுகுறித்து நாம் அதிகாரிகள் பலரிடமும் முறையிட்டோம். ஆனால் சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருவேறு நாடுகள் எனச் சொல்லிப் பிரிவினைவாதத்துடன் நாம் பார்க்கவில்லை. மனிதாபிமானம் வேண்டும் என்பதையே நான் கூற விரும்புகிறேன்” // என்று சொல்கிறார். இந்த அப்பாவி மீனவரை தன்னைப் போன்ற ஒரு ஒடுக்கப்பட்ட இனமான தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டிய சக்தி எது?
விசைப்படகுகளால் வலைகள் கிழிக்கப்படுவதும், விரித்து வைக்கப்பட்டிருக்கும் வலைகளை விசைப்படகுகள் இழுத்துச் செல்வதும், மீன் பிடி எல்லைகளை தீர்மானிப்பதில் வரும் குழப்பங்களும் மீன்பிடித் தொழிலில் மிக மிக சாதாரணமானது. இது தொடர்பான பிரச்சினை தமிழக மீனவர்களிடையே கூட அடிக்கடி நடப்பதுண்டு. மேலும் இந்தப் பிரச்சினை உலகெங்கும் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மீனவர்கள் அடிக்கடி சந்திக்கக் கூடியதுதான்.
இலங்கையில் தெற்கில் இருந்து வரும் சிங்கள் மீனவர்கள் வடக்கில் தமிழ் மீனவர்களின் மீன் பிடி உரிமையை கட்டுப்படுத்தவில்லையா? கடல் மீன் பிடி உரிமையில் இலங்கையின் பெருந்தேசிய சிங்கள வெறி கடலில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவில்லையா?  இலங்கைக்குள்ளேயே நிலைமை இப்படி இருக்கும் போது ஒரு அப்பாவி மீனவனை தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டும் குரல் இலங்கை அரசின் குரலல்லாமல் வேறு என்ன?

மீனவர்களின் நட்பு கடலின் ஆழத்தை விட அதிகமானது.

இந்திய இலங்கை மீனவர்கள் நட்பு மட்டுமல்ல உயிருக்கு உத்திரவாதமில்லாத உலகிலேயே உயிராபத்து அதிகமுள்ள தொழில்களில் ஒன்றாக மீன் பிடித்தொழிலில் மீனவர்கள் பேதம் பார்த்து பழகுவதில்லை. ஒரு சுரங்கத் தொழிலாளியின் உயிர் நாடியில் கசிந்து கொண்டிருக்கும் மரணம், அவனது எல்லையற்ற அன்பிற்கு அடையாளமாக இருப்பது போலதான் மீனவனின் அன்பும். அவன் உணர்வுகளால் உந்தப்படுகிறவன். சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவன். தான் அன்பு செலுத்தும் ஒன்றுக்காக உயிரைக் கூடக் கொடுக்க அஞ்சாதவன்.
இதுதான் மீனவர்களின் உணர்வுபூர்வமான வாழ்வு. அதே நேரம் அவர்களுக்குள்ளே எந்தப்பிரச்சினைக்காக மோதிக்கொண்டாலும் அது மூர்க்கமாக இருக்குமளவு அப்பாவித்தனமாகவும் இருக்கும். அவர்கள் சமவெளியின் கறைபடியாத எளிய மனிதர்கள். தமிழக மீனவனாக இருந்தாலும் இலங்கை தமிழ் மீனவனாக இருந்தாலும் இதுதான் உண்மை. பாரம்பரிய மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் ஒரு மீனவனின் கருணையையும் அன்பையும் வேறெந்த சமூகங்களிடமும் காண்பது அரிது. அப்படி ஒரு நீண்ட கால அன்பும் நட்பும் கலந்துதான் தமிழக ஈழத் தமிழ் மீனவர்களின் நட்பு. கச்சத்தீவும் அந்தோனியார் கோவிலும் அந்த நட்பிற்கு நீண்டகால சாட்சியமாக நிற்கின்றன.
இது போக எல்லை தாண்டி புயல் மழையில் சிக்கி தத்தளிக்கும் மீனவர்களை, பரஸ்பரம் காப்பாற்றி கரை சேர்த்து உணவு கொடுத்து உறவு வளர்த்த கதை மீனவனுடையது. வேதாரண்யத்திலும் , பேசாலையிலும், மன்னாரிலும்,  யாழ்பாணத்திலும், பாம்பனிலும், தூத்துக்குடியிலும், கன்னியாகுமரியிலும், என்று இரத்தமும் சதையுமாக இரு நாடு மீனவர்களின் உறவுகளையும் எந்த அழிவு சக்திகளின் எல்லைகளும் பிரித்து விட வில்லை. ஆனால் இன்று?
இரண்டு அரசுகளின் எண்ணங்களை ஈடேற்றவும் இந்த இரு நாட்டு மீனவர்களும் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசின் ஆதரவாளர்களோ அதை ஊதி விட்டு இந்த பிரிவினையை முன்னெடுக்கிறார்கள். தமிழக மீனவர்களைப் பொறுத்தவரையில் தடை செய்யப்பட்ட மடியை பயன்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் இந்த மடிகள் முதலில் அழித்தது மீன் வளத்தை அல்ல, ஏழை கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை. அது உள்ளூர் சிறு கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை நசுக்குவது உண்மைதான். ஆனால் பிரச்சனை இதுவல்ல. தங்களின் சொந்த நலனை முன்னெடுக்க விரும்பும் அரசுகள் பழியை இவர்கள் மீது போட்டு, இவர்களை மோத விட்டு தங்களின் நலனை இராமேஸ்வரத்தில் முன்னெடுக்கின்றன.
உண்மையில் மீன் வளங்கள் இப்பிராந்தியத்தில் இல்லாது போகக் காரணம் பன்னாட்டு ஏக போக மீன் பிடி நிறுவனங்களே. மீன் வளம் பெருக வருடதிற்கு 45 நாட்கள் மீன் பிடித்தடையை உள்ளூர் மீனவர்களுக்கு கொண்டு வந்துள்ள இரு நாட்டு அரசுகளும் தங்களில் கடல்பரப்பில் ஏக போக பன்னாட்டு நிறுவனங்களை கடல் கொள்ளையில் ஈடுபட அனுமதித்துள்ளன. அவர்களுக்கு தடையும் இல்லை தண்டமும் இல்லை. ஆக இரு நாட்டு மீனவர்களும் போராட வேண்டியதும், எதிரியாக கருத வேண்டியதும்  இந்த பன்னாட்டு நிறுவனங்களைத் தானே தவிர தமிழக மீனவர்களை அல்ல.
பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்காகவும் மீன் பிடி நிறுவனங்களுக்காகவும் சேது சமுத்திரத் திட்டத்தை தமிழனின் வரலாற்றுப் பெருமையாகக் காட்டும் அரசியல் வாதிகள் அதை மீனவர்கள் எதிர்ப்பதை கணக்கில் எடுக்க மறுக்கின்றனர். சேதுக் கால்வாய் திட்டம் இரு நாட்டு மீனவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வணிகச் சூதாட்டம் என்பதுதான் உண்மை. கடலிலே இப்படியான கொள்ளைகள் ஒரு பக்கம் என்றால் கரையில் செயற்கைத் துறைமுகங்கள், கடலோர பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள்,  இறால் பண்ணைகள், என்று கடலோரங்களை தனியாரிடம் ஒப்படைக்க இன்னொரு சுனாமியாய் வருகிறது அடுத்தடுத்த திட்டங்கள்.
இவைகளை முன்னெடுக்கும் இந்திய அரசும், நீண்டகால அரசியல் நோக்கில் மீனவர்களை இராமேஸ்வரத்தில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கும் இலங்கையும்தான் இரு நாட்டு மீனவ மக்களின் எதிரிகளே தவிர கொலை செய்யப்பட்டவனையே எதிரியாகச் சித்தரிப்பது இன்னுமொரு அயோக்கியத்தனமல்லவா? ஆனால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், கொலை செய்யும் இலங்கை கடற்படைக்குமான பிரச்சனையை இந்திய, ஈழ மீனவர்களுக்கிடையிலான பிரச்சனையாக ஹிந்து ராம், பேராசிரியர் சூரியநாராயணன் போன்றவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஹிந்து ராம் யார் என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

இணையத்திலிருந்து களத்திற்கு வாருங்கள்!

துனிசியாவிலும், எகிப்திலும் டிவிட்டர், பேஸ்புக் இணையங்கள் குறிப்பிடத் தக்க செல்வாக்கைச் செலுத்தினாலும் புரட்சியை அவை கொண்டு வந்து விடுவதில்லை. பெருந்திரள் மக்களை வீதிக்குத் திரட்டி வந்து ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதன் மூலமே அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தம். ஆனால் டிவிட்டரிலேயே தொடங்கி டிவிட்டரிலேயே இந்தப் பிரச்சனை தீர்ந்து விடாது நண்பர்களே! ஒன்று திரட்டிய சக்தியை எங்கே எப்படி வெளிப்படுத்தி நெருக்கடியை உருவாக்குகிறோம் என்பதில்தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
இதனால் நாமெல்லாம் உடனே களமிறங்கி வெற்றியை ஈட்டிவிடுவோம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை நோக்கி தெளிவான கொள்கை, நடைமுறையோடு நாம் இந்தப்பிரச்சினையை கொண்டு செல்வது சரியாக இருக்கும். சிலர் மீனவர் பிரச்சினைக்காக எந்த அரசியல் கட்சியையும் எதிர்க்க கூடாது என்றெல்லாம் தவறான கருத்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து பின்னர் எழுதுகிறேன்.
ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரணை வரம்புக்குட்பட்டுதான் பயன்படுத்த முடியும். தண்டகாரண்யாவில் மாவோயிஸ்டுகளும் . காஷ்மீரில் போராடும் சக்திகளும் அப்படி ஓரளவுக்கு பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்துவதுதான் சரியும் கூட, அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. மேலும் அந்த முரண்பாட்டை பயன்படுத்துமளவு அவர்கள் ஒரு சக்திகளாக இருக்கிறார்கள். அப்படி இல்லாத போது நாமும் அப்படி இறங்கினால் நம்மைத்தான் ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்ளும்.
இப்போதே மீனவர் படுகொலை குறித்து பல்வேறு சதிக்கதைகளை இலங்கை அரசு உருவாக்கி தனது எடுபிடிகள் மூலம் பரப்பத் துவங்கியிருக்கிறது. அதிலொன்றுதான் இருநாட்டு மீனவர்களுக்கிடையே மோதல் என்ற கதை. இதையும் நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய அவசியமிருக்கிறது. இதன்றி வெறுமனே மனிதாபிமானத்துடன் மட்டும் இந்தப் பிரச்சினையை எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது சரியல்ல என்பதோடு ஆபத்தானதும் கூட.
____________________________________________________

- வெண்மணி

Monday, January 31, 2011

கண்ணீரில் மிதக்க வைத்தான்:(

மானங்கெட்ட, ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளிருக்கும் நாட்டில் பிறந்ததைத் தவிர வேறென்ன பாவம் செய்தார்கள் மீனவர்கள்? ஒன்றல்ல இரண்டல்ல ஐநூற்றி சொச்சம் மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடைசியாக (இதுவே கடைசியாக இருக்குமென வேண்டுகிறேன்) ஜெயக்குமார் என்ற மீனவரின் கழுத்தில் கயிற்றால் சுருக்கிட்டு கொடூரமான முறையில் சாகடித்துள்ளனர். ஐந்து லட்சமோ ஒரு லட்சமோ, அரசுப் பதவியோ, கட்சிப் பதவியோ எந்த விதத்திலும் அவரின் ஆன்மாவை அமைதிப்படுத்தாது. இணைய நண்பர்கள் தங்களால் இயன்றவரை உங்கள் நட்புலகத்திற்கும், உறவினர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துச்சொல்லுங்கள். http://www.savetnfisherman.org/ என்ற தளத்தினை பரவலாக அறியச்செய்யுங்கள். Lets make a difference.









#tnfisherman இது எப்படி சாத்தியம் ஆனது

#tnfisherman  ஏதோ தொழில்நுட்ப ரீதியில் இந்த வார்த்தையை ட்விட்டர் தளத்தில் இருந்து சேகரிக்கிறது, இதனால் தமிழக மீனவர்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று நினைத்து நான் www.savetnfisherman.org  இந்த தளத்தை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். இதனால் நான் இந்த ட்விட்டர் விஷயத்தில் கூட பங்கு கொள்ளாமல் இரண்டு நாட்களாக  என் வேலையை கவனித்துக்கொண்டு இருந்தேன்.  ஆனால் இன்று #tnfisherman சந்திப்பும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும். இந்த பதிவை படித்தப்பின் எனக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இது எப்படி சாத்தியம் ஆனது என்று.  தொடர்ந்து சமுதாய விஷயங்களில் மவுனம் சாதித்த வலைப்பதிவர்கள் இன்று தமிழக மீனவர்களுக்காக ஒன்று கூடி இருக்கிறார்கள்.


என்னால் இந்த முயற்சிக்கு முடிந்தவரை  உதவி செய்ய இப்போது தயாராக இருக்கிறேன். இனி #tnfisherman  இந்த குழுவினர் எடுக்கும் ஒவ்வொரு  முடிவுக்கும்  பங்கு கொண்டு போராட இருக்கிறேன்.

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள் www.savetnfisherman.org இந்த தளத்தின் சுட்டியை உங்கள் அனைத்து நண்பர்களுக்கு FACEBOOK, TWITTER, மற்றும் EMAIL வழியாக அனுப்பி தெரியப்படுத்துங்கள். 

WWW.SAVETNFISHERMAN.ORG இந்த தளத்தில் இது வரை FOLLOWER ஆகாதவர்கள் உடனே தன்னை இணைத்துக்கொள்ளுங்கள்.  இந்த போராட்டத்தில் நம் பலத்தை காட்ட இது உதவியாய் இருக்கும்.


இதுவரை பெட்டிஷன் அனுப்பாதவர்கள் உடனே அனுப்புங்கள், உங்கள் நண்பர்களையும் இதில் பங்கு பெற செய்யுங்கள்.


 
 
 
 
 

petitiononline தொடர்பான ஒரு விளக்கம் - நீச்சல்காரன்

petitiononline தளத்தில் தயாரித்துள்ள படிவத்தை கையெழுத்திட்டுக் கொண்டிருப்பீர்கள் நன்றி தொடருங்கள்
அதற்கு முன் சில விளக்கங்கள்.

இது எந்த சட்டப் புத்தகத்தையோ வரலாற்று ஆவணத்தை முன்வைத்தோ எழுதப்படவில்லை, சுடப்படும் மீனவர்களைக் கண்டு மன கொதிக்கும் ஒரு சாராசரி மனித மனநிலையில் எழுதப்பட்டது. மேலும் இது மனப் பிரதிப்பளிப்பைத்தான் காட்ட விளைகிறது கூரிய கருத்துக்களைத் தான் பிராதனமாக கொண்டிருக்கும் இதை வைத்து தர்கரீதியாக கேள்விகள் எழுப்பக்கூடாது என நினைக்கிறேன். கடல் வளத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்கிற முறையில் பெட்டிஷன் வடிவமைக்கப்படவில்லை. "//In Our Opinion// {அடுத்த நாட்டு எல்லை இல்லை} சர்வதேச எல்லை கடந்து மீன் பிடிக்க உரிமை வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் "என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அதை மீறி இந்த கோரிக்கை இலங்கை மீனவர்களுக்கு எதிரானது என்று தவறான கருத்தை எடுத்துவைத்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

இந்தப் படிவம் petitiononline என்கிற தளத்தில் நாம் தொடங்கிய படிவமே. கையெழுத்தை உறுதி செய்ய விரும்பி அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல் உங்களுக்கு நன்றி தெரிவிக்கவே, அதில் கோரப்படும் நன்கொடை[donation]க்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த நன்கொடைகள் அந்த தளத்திற்கானவை. நன்கொடை தரவிரும்புகிறவர்கள் இந்த தளத்தை பிரபலப்படுத்தலாம்.

இந்தப் படிவம் எந்தளவிற்கு நம்பகமானது என்பதை வைத்துத் தான் இதன் பலமும் உள்ளது. கையோப்பம் இடுபவர்கள் விருப்பமில்லாதவர்களின் பெயர்களை எழுதி அவர்களுக்கு மனவருத்தம் அளிக்க வேண்டாம். உண்மையான ஆதரவு மட்டும் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

http://neechalkaran.blogspot.com/

தமிழக மீனவர்களின் ரத்தக்கண்ணீர்


இலங்கை ராணுவத்தினரின் ரத்தவெறிக்கு தமிழக மீனவரகளின் பலி தொடர் கதையாகிறது. தமிழக மீனவர்கள் உண்மையில் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை இந்திய அரசு மறந்து விட்டது. பிரான்சு நாட்டில் தன் இனத்தவர்கள் தலை பாகை அணிய தடை விதிக்க பட்டதை கண்டு பொங்கி எழுந்த நமது பாரத பிரதமர், பிரான்சு ஜனாதிபதியிடம் அதை முக்கிய பிரச்ச்னையாக பேசி, தீர்வை காண முயன்றார். ஆனால் இன்று இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் அன்னிய நாட்டு ராணுவத்தால் படுகொலை செய்ய படுவதை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்க நினைக்க கூடவில்லை.

மத்திய அரசு மந்திரி பதவியில் இருக்கும் தமிழக அமைச்சர்கள் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வ காண நினைப்பதையே பாவமாக கருதுகிறார்கள்.தன் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யவும், தன் குடும்பத்தினருக்கு பதவி வாங்கவும் வித விதமான சத்தியாகிரக போராட்டங்களை நடத்தும் தமிழக அரசியல்வாதிகள் நம் மக்கள் மாண்டு வீழவதை பற்றி கவலை கொள்வதே இல்லை.

இதற்கு தீர்வு தான் என்ன. அரசியல்வாதிகளிடம் ரத்தக்கண்ணீர் விட்டால் தீர்வு கிடைக்காது. மீனவர்கள் தங்கள் சாதி மத வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேர்ந்து தங்கள் பலத்தை தேர்தலில் காட்ட வேண்டும். ஒரு 50 தொகுதியிலாவது தாங்கள் ஒற்றுமையின் மூலம் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க முடியும் என்று நிருபித்தால் தான் நீங்கள் சொல்வதை நாளை யாரும் கேட்பார்கள். ஆளும் கட்சியை எதிர்த்து வாக்களித்தால் பிரச்சனை தீரும் என்று சொல்ல வில்லை. ஆனால் தேர்தல் முடிவுகளையும் ஆட்சியாளர்களையும் முடிவு செய்யும் வலிமை உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் நிருபிக்க வேண்டும். இதற்கு தேவை உங்கள் ஒற்றுமை.

ஏனென்றால் ஆட்சியாளர்கள் காதுக்கு கேட்பது இரண்டு ஓசைகள் மட்டும். ஒன்று நோட்டு. மற்றொன்று ஓட்டு.

மீனவர்கள் பிரச்சனை பற்றி எழுத வேண்டுகோள் விடுத்த பதிவர் செந்தழல் ரவிக்கு நன்றி

பதிவர் - சதுக்க பூதம்

தமிழக மீனவன் - ஃபிளாஷ் விட்ஜெட்


<embed src='https://473441265180385674-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/valaimanaiblog/tnfishermanflash.swf' width='320' height='240' wmode='transparent'/></embed>
<br /> <a href="http://www.savetnfisherman.org/" target="_blank">Save TN Fisherman </a>



குறிப்பு : தங்கள் வலைப்பூவிற்கு ஏற்றவாறு கோடிங்கில் இருக்கும் 320 X 240 அளவை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

240 X 180 - 280 X 210 - 360 X 270 - 400 x 300 - 640 X 480 -

பதிவர் சுகுமாரன் சுவாமினாதன்

என் தமிழன்


* அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...

* அரசியல்வாதி என்னும்
பிணம்தின்னி கழுகின் பின்
சாவமாய்த்திரிந்தான் என் தமிழன்...
அவன் எச்சிக்கையில் ஒட்டி
கிடக்கும் ஓற்றை வார்த்தைக்காய்
ஏங்கி தவித்தான் என் தமிழன்..

* ஈழத்தமிழனைத் தான் காவு
கொடுத்தோம் என்றால்,
எஞ்சிய எம் ஏழை மீனவத்தமிழனையும்
சாவுக்கு தாரைவார்க்கவோ
நாம் தரணியில் பிறந்தோம்?



இதயத்தில் இணைந்திட்டவன் ,
தன் சொந்தத்தின் வாழ்வுக்காய்,
கடல் தேடி சென்றானே!!!
கடலோடு போன தந்தை,
நம்மை கரைசேர்க்க, கரைவருவாரோ
என எதிர்ப்பார்த்து நிற்கும்
எந்தன் தாய்க்கும், தவித்து நிற்கும்
எந்தன் பிள்ளைக்கும
என்ன பதில் நாம் சொல்ல...?
சொல் தமிழா என்ன பதில் நாம் சொல்ல...






* முத்தமிழ் பேசுவோம் ...
எம் தமிழுக்கு செம்மொழி
உயர்வு வாங்கித்தர போர்க்கொடி
நீட்டுவோம்...ஆனால்
என் ஏழைத்தமிழனுக்கோ?

* ஏழைத்தமிழன் என்றால்
அத்துணை இளப்பமா?...
ஆறடுக்கு மாளிகையில் நீ இருக்க
உன்னை ஏற்றிவிட்ட
ஏழைக்கரங்கள் செய்வது அறியாமல்
ஏங்கி நிற்க....எச்சரிக்கை
விடுவதாய் ஏமாற்றுதல் நியாயமா?

* பொறுத்திருந்து பொறுத்திருந்து
நாட்களும் நரகமாக,
எங்கள் வாழ்கையும் வீணானது
தான் மிச்சம்...

* எங்கள் எச்சம் தின்னும்
தந்திர நரிகளே...
நாங்கள் மாறினால் நீங்கள்
மண்டியிட்டு வேண்ட காணி நிலமும்
உங்கள் கைக்குள் இருக்காது..
நாங்களும் மாறுவோம்... எத்தனை
நாள் தான் உன்னிடம் ஏமாறுவோம்..

* பொறுத்தது போதும்...
அரசனும் வேணாம்...
அரசியல் வேடதாரியும் வேண்டாம்...
இன்னும் பொறுத்தால்
மிச்சமே
மிச்சும்...
ஒன்று படு தமிழா
நம் தமிழனுக்காய்...
நம் தலைமுறைக்காய்..
இனி ஒரு விதி செய்வோம்..
சாட்டையை சுழற்றி மாற்றம் செய்வோம்
புறப்படு என் தமிழா.....

* அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...

நம் போடும் சத்தம் சென்றடைய http://www.savetnfisherman.orgதளத்தில் நம் ஆதரவை தெரிவிப்போம்

இணைய தள முகவரி- http://www.savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- http://twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

குரல் கொடுப்போம்... நம் உரிமையை நாமே பெறுவோம்...நன்றி___________

பதிவர் - ரேவா கவிதைகள்

#tnfisherman சந்திப்பும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும்.


#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.
இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை.

பங்களிப்பு: நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.

2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)
மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன.

பங்களிப்பு: வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம்.

3. ஊடகங்களோடு தொடர்பு
நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம்.

பங்களிப்பு: தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.

4. ஆன்லைன் பெட்டிஷன்.
பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

பங்களிப்பு: நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.

5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.
இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.

பங்களிப்பு: சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.

6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.
வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும்.

பங்களிப்பு: அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.

==================================================================================
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

நேற்றைய சந்திப்புப் பற்றிய twitlonger
http://www.twitlonger.com/show/8g8uc1

நேற்று நடைபெற்ற கூட்டம் பற்றிய பத்ரியின் பதிவு
http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_31.html

நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :
savetnfisherman@gmail.com
tnfishermancampaign@gmail.com

பெட்டிஷன் அனுப்பும் சுட்டி
http://www.petitiononline.com/TNfisher/petition.html
_____________

பதிவர் - கும்மி

'ரம்' காவடி எடுக்கப் போறேன் ரஜினி காந்துக்கு...!

ராஜபக்க்ஷே :

"தமிழ் நாட்டு
மொள்ளமாறி முடிச்சவிக்கைகளையெல்லாம்
என் சட்டைப் பையில் வச்சிருந்தேன்.
டில்லியிலிருக்கிற மூதேவிகளை
பெட்டிக்குள்ளே வச்சிருந்தேன்.
அந்த தைரியத்துல
ஈழத்தை எரிச்சேன்.
ஐனூறு மீனவர்களை
காவு கொடுத்தேன்; ஆனால் -
இந்த பிஸ்கோத்துகள் கிளர்ச்சியால்
எனக்கு வயித்தைக் கலக்குது.
அவங்க ட்வீட்டறதும், ப்ளாக்குறதும்,
ஏசுறதும், பேசுறதும்...!
ஈனமானமுள்ளவன் இனிமேல்
மீனவனைச் சுடுவானா?
அப்புறம், இந்தப் பக்கம் பார்த்தால்
எகிப்த்து;
அந்தப்பக்கம் பார்தால் துனீசியா...
அதனால் எனக்கு
நல்ல புத்தியைக் கொடு
புத்தம் சரணம் கச்சாமி..!"

***

அன்னை சோனியா :

"வேண்டாம் வேண்டாம்
போட்டுத் தள்ளு எனதருமை ராஜபக்ஷே...
மக்கள் ஸ்பெக்ட் ரத்தை மறக்க வேணும்.
நான் இன்னும் இத்தாலிக்கு
மணி ஆர்டர் செய்ய வேணும்.
என் சந்ததிகளும்
கோடானு கோடிகளைப்
பார்க்கவேணும்.
ரோமாபுரிப் போப்பாண்டவா,
உன் முன்னால் மண்டியிட்டு
வேண்டுகிறேன் - அவனை
இன்னும் 500 பேரையாவது
கொன்றுபோட வரம் கொடு..."

***

கருணா நிதி :

"அந்தப் பொம்பளைக்குப் புத்தியில்லை.
அவங்க் சம்பாதிக்க, நான் நாக்கு வழிக்கவா?
எனக்கு சந்ததிகளில்லையா?

என் திருக்குவளைக் குல தெய்வமே
இந்த தள்ளாத வயதிலும்
மஞ்சத் துண்டில் கோவணம் கட்டி
திருமா என்னைத் தோள் பிடிக்க
சேகர்பாபு கால் பிடிக்க
தட்டுத் தடுமாறியாவது
மூணு சுத்து, சுத்தி வாரேன்.
அந்த ராஜபக்சே ரவுடியை
வரப்போகிற தேர்தல் வரையாவது
கொலை செய்வதை தள்ளிப்போட
கொஞ்சம் தந்தி அடித்துச் சொல்லு...!"

***

ஜெயலலிதா :

"ஆடு, மாடு, கோழி வெட்ட தடை என்று
தப்பான சட்டம் போட்டேன் - என்
பன்னாரி மாரியம்மா!
வேப்பிலை ஆடை கட்டி,
வேண்டியவர்களையும் கூட கூட்டி,
அடி மேல் அடி வைத்து,
உன் கோவிலுக்கு நான் வாரேன்.
ஆயிரத்தெட்டு எருமைமாட்டை
(தமிழர்களைக் குறிக்கவில்லை)
காவு தாரேன்.
ஆனது ஆச்சு - இன்னும் ஒரு மூணு மாசம்.
தேர்தல் வரை பொருத்துக் கொள்ளேன்
முத்துமாரி;
தேர்தல் தாண்டி சுட்டுக்கச் சொல்லு
மாகாளி...!"

***

ராமதாஸ் :

"எஞ்சாமீ, முனீஸ்வரா,
ஆட்டுக்கிடா காவுபோட்டு,
கறியுஞ் சோறும் ஆக்கிவச்சி,
சாராயத்த ஊத்திவச்சி
(ஆபத்துக்குப் பாவமில்ல)
படையல் போட்டு வேண்டிக்குறேன் - நான்
அம்மாவோட கூட்டணின்னா,
மீனவனைப் போட்டுத் தள்ளு;
ஐய்யாவோட கூட்டணின்னா
தேர்தல் வரைக்கும் நிப்பாட்டு1"

***

விஜய காந்த்து, வைக்கோ, வெந்தது, வேகாதது :


"திருப்பதி மலையேறி வாரோம்,
சபரிமலை தேடி வாரோம்,
பழனியிலே மொட்டை போட்டு
பஞ்சாமிர்தம் நக்கப்போறோம்.
அதாவது, வந்து, வந்து, வந்து,
மீனவனைக் கொல்லணும் -
ஆனா கொல்லக் கூடாது...!"

***

சினிமா ரசிகர்கள் :

"மீனவன் செத்து கருவாடா ஆனா
எனக்கென்ன...?
ஈழத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினா
எனக்கென்ன...?
நான் -
'ரம்' காவடி எடுக்கப் போறேன்
ரஜினி காந்துக்கு.
அலகு குத்தி போகப்பொறேன்
அஜீத் குமாருக்கு.
வேல் காவடி எடுக்கப் போறேன்
விஜை படத்துக்கு.
முளைப்பாரி தூக்கப் போறேன்
மாறன் படத்துக்கு.
கோயில் கட்டிக் கும்பிடப் போறேன்
நமீதாக் குட்டிக்கு.
மீனவன் செத்து கருவாடா ஆனா
எனக்கென்ன...?
ஈழத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினா
எனக்கென்ன...?"

***

அப்துல் கலாம் :


"நல்ல வேளை -
என் கனவு நினைவான பிறகு
இந்த ராமேஸ்வரம் பிரச்சினை வந்ததே.
இனிமேல் நீ போட்டல் என்ன,
போடலைன்னா என்ன!
ஆனால் மீனவர்களே.........
நீங்கள் கனவு காணுங்கள் -
மீன் களைப் பற்றியல்ல -
உங்கள் உயிரைப் பற்றி...!"

புதிய பாமரன்

Sunday, January 30, 2011

மாற்றங்களுக்கு அவசியமென்றால்

மாற்றங்களுக்கு அவசியமென்றால்
இந்த மனிதர்களுக்கு
புரியமாட்டேனென்கிறது


ஒரு கூலியின் கைகள் போதும்
கடவுளின் தோலுரிப்பதற்கு
கத்திகளெதற்கு


இழுத்துக் கட்ட நூல்கள் கிட்டும்
இஷ்டம் போல
கடவுள் என்பதால்


நெருப்புக்கெல்லாம் தாங்காது
இது கடவுளின் தோல்
சேரி வெயிலில் போட்டு அடித்தாலே
பூமி அதிரும்


கடவுளின் தோலில் செய்த பறை
நிச்சயம் தேவ இசையாயிருக்கும்


மாற்றங்களுக்கு அவசியமென்றால்
இந்த மனிதர்களுக்கு
புரியமாட்டேனென்கிறது


-ராஜ்குமார் ஸ்தபதி (பொருளற்ற சொற்கள்)


http://www.savetnfisherman.org/

http://www.PetitionOnline.com/TNfisher/

உமா

தமிழக மீனவர் பிரச்சினை: ஆராய்ச்சி மணியடிக்கும் டுவிட்டர்!

இருண்ட காலத்தில்
ஒலிக்கும் பாடல்
இருளைப் பற்றியதாகவே இருக்கும்”
இந்தக் கவிதை எவ்வளவு அர்த்தமும், ஆழமும் கொண்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பேச்சும் மூச்சும் தமிழக மீனவர்களின் பிரச்சனையாகவே இருக்கிறது. துயரத்தையும், வலையையும் மீறிய வார்த்தைகள் திமிறி வந்துகொண்டே இருக்கின்றன. இணையத்தில் தமிழ் எழுத்துக்கள் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்றன. வலைப்பக்கங்களிலும், டுவிட்டரிலும் தங்கள் கருத்துக்களால் ஒரு புயலை மையம் கொள்ள வைத்திருக்கின்றனர். ‘நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என ஆர்ப்பரிப்பாய் நிற்கிறார்கள்.

இவை ஜெயக்குமார் என்னும் ஒரு மனிதனின் கடைசி மூச்சிலிருந்து எழுந்து கொண்டிருக்கும் உணர்ச்சிவசப்பட்ட அல்லது கொந்தளிப்பான மனநிலை என்று குறுக்கிப் பார்த்துவிட முடியாது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களின் மரண ஓலங்கள் கேட்டுக் கேட்டு பொறுமை காத்தவர்கள்தான் இப்போது மௌனத்தைக் கலைத்து வெடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களும், அரசுகளும் இதற்கொரு முடிவு கட்டுவார்கள் என வைத்திருந்த நம்பிக்கைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடையாளங்களே இவை.

இந்த மண்ணில் பிறந்தவன், தங்களோடு வாழ்ந்தவன், ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த அமைப்பில் என்ன இடம் என்பதைக் கவனிக்க முடிந்ததில் எழுந்த வேகம் இது. பிழைப்பு தேடிச் சென்றவனை ஒரு புழு பூச்சியைக் கொல்வது போல, அண்டை தேசத்தின் இராணுவம் கொல்லும்போதும் வேடிக்கைப் பார்க்கிற தன் ராஜாக்களை ‘என்ன மயித்தப் புடுங்குறீங்க’ என்று சாதாரணமானவர்களும் அசாதாரணமாகக் கேட்கவே செய்வார்கள். தங்கள் ராஜாக்களின் மௌனங்களுக்குள் நுரைத்துக் கிடக்கும் சுயநலங்களை அறிந்து, முகம் சுளித்து, ‘கேடு கெட்டவர்களே, விலகிப் போங்கள்’ என முழக்கமிடத்தான் செய்வார்கள்.

இந்த வெற்று இரைச்சல்களால், என்ன செய்துவிட முடியுமென அவர்கள் நினைக்கலாம். இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்கள் கொட்டித் தீர்த்துவிட்டு, பிறகு தத்தம் வீடு, தத்தம் வாழ்க்கைக்குள் புகுந்துகொள்கிற ஆமைகளாகிப் போவார்கள் என அவர்கள் காத்திருக்கலாம். சில வசனங்கள், சில இலவசங்கள், சில காரணங்கள் போதும் இந்த அற்பர்களைச் சமாளிக்க என்று அவர்கள் நப்பாசை கொள்ளலாம். கடந்தகாலங்கள் இப்படித்தானே இருந்திருக்கின்றன என்று கணக்கும் போடலாம். மக்களைப் பற்றி அதிகார பீடங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயங்கள் வேறெதுவுமாய் இருந்துவிட முடியாதுதான். எல்லோருடைய காலடியோசைகளையும் அறிய முடிந்த திருதராஷ்டிரன், காலத்தின் காலடியோசையை அறிய முடியாமல் இருந்தான் என்பதும் ஒரு உண்மைதான்.

டுவிட்டரில் இப்போது அந்தக் காலடியோசை கேட்டுக்கொண்டு இருக்கிறது! அலைகளென பொங்கி வரும் டுவிட்டர்கள் சொல்லும் செய்திகள் முக்கியமானவையாய் இருக்கின்றன.

நடக்கும் துயரங்களைப் பார்த்துக்கொண்டு நாங்கள் மௌனமாயிருக்க மாட்டோம். பொது விஷயத்தில் ஒன்று கூடி நிற்போம். பொதுக்கருத்தை உருவாக்க உரையாடுவோம்.மக்களுக்கெதிரான அரசுக்கும், அமைப்புக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக கேள்விகள் எழுப்புவோம்.ரசிக்கிற, நேசிக்கிற நடிகரோ, எழுத்தாளரோ, எப்பேர்ப்பட்டவரோ இருந்தாலும் இதுபோன்ற விஷயங்களில் மௌனம் காப்பதை அம்பலப்டுத்துவோம். ஊடகங்களின் அரசியலையும், உள்நோக்கங்களையும் தோலுரிப்போம். மேலும் இதுபோன்ற துயரங்கள் நிகழக்கூடாது என அணி திரள்வோம்.நண்பர்களே!
டுவிட்டரில் தமிழக மீனவர்களுக்காக ஆராய்ச்சி மணி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அரியாசனங்கள் அதிரட்டும்!

(தமிழக மீனவர்களை பாதுகாக்க எழுப்பும் குரலாக, இந்த லிங்க்கில் உள்ள பெட்டிஷனில் இன்னும் கையெழுத்திடாதவர்கள், கையெழுத்திடுங்களேன்:
Save Tamilnadu Fishermen Petition )

மாதவராஜ்

மீனவர் பிரச்சினை குறித்த கூட்டம் இன்று சென்னையில்....

மீனவர் பிரச்சினை குறித்த கூட்டம் இன்று சென்னையில்....


தமிழக மீனவர் படுகொலைப் பிரச்சினை குறித்து இணையத்தில் இயங்குபவர்கள் #tnfisherman என்கிற லேபிள் மூலமாக ட்விட்டரில் அகில இந்திய கவனத்தை கடந்த ஐந்து நாட்களாக ஈர்த்து வருகிறார்கள். அடுத்தக்கட்டமாக பெட்டிஷன் ஆன்லைன் மூலமாகவும் இந்திய பிரதமருக்கு நெருக்குதலை தந்து வருகிறார்கள்.

இதுபோன்ற பொதுப்பிரச்சினைகளின் போது பிளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் இயங்குபவர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படலாம் என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் ஒன்று இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வரலாம்.

நாள், நேரம் : 30-1-2011, மாலை 5.30 மணி
இடம் : மெரீனா பீச் (காந்தி சிலை பின்புறம்)


செய்தியாள‌ர்: யுவ‌கிருஷ்ணா

தமிழக மீனவன் இழவுக்காதை-கிழிந்து தொங்கும் முகமூடிகள்

ஈழத்தில் லட்சக்கணக்கில் இனம் அழிக்கப்பட்ட போது பிளாஸ்திரி ஒட்டிக்கொண்ட வாய்கள் இந்திய இறையாண்மை; அயல்நாட்டு விவகாரம் என்ற சாக்குக்குள் ஒளிந்த கதை பழசாகிப்போனது.

அந்த சாக்கு முகமூடிகள் சிங்களவன் சர்வீஸ் செய்த துப்பாக்கிகளை சோதித்துப்பார்க்க தென்தமிழக மீனவன் மார் கொடுக்கும் இந்நாட்களில் பொத்தலாகிக் கிழிந்து தொங்குகின்றன.

இலங்கையில் தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என்ற போது வரிந்து கட்டிக் கிளம்பிய தமிழ் திரையுலகத்திற்கு இந்த இழவுகளால் பெரிய நஷ்டமேதும் இல்லை. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், தான் இதுகாறும் பெரும்பாடு பட்டு சம்பாதித்து வைத்திருக்கும் ’’மெண்ட்டல்’’ இமேஜால் இந்த பிரச்சனையிலிருந்து அவரே அறியாமல் தப்பித்து விடுகிறார். யாரும் பொருட்டாக மதித்து அவர் குறித்து வினவுவதில்லை. சமீபகால தன்னிலை விளக்கங்களின் மூலம் கலைஞ்சரையே விழுங்கிவிடும் ஃபார்மில் உள்ள கமல்ஹாசன் இலங்கைத் தமிழனுக்கு சினிமா பைத்தியம் ’’இமேஜை’’ நிலை நிறுத்தி சாதனை செய்தது போல தமிழக மீனவனுக்கு பெண்பித்தன், மொடாக்குடியன் போன்ற ஏதேனுமொரு கதாபாத்திர மெருகேற்றல் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடும்.

டாக்டர் கேப்டனின் அறிக்கை எங்காவது வந்திருக்கிறதா என்று இணைய செய்தித் தாள்கள் முதல் பிள்ளைகளுக்கு இசி வழித்தெறியும் துண்டுச்சீட்டு வரை துழாவினாலும் கிடைக்கப் பெறவில்லை

ஃபோனுங் கையுமாவே சுத்துறாப்ல; டயலாக் இதுதான்!

''நுப்பத்தஞ்சா அது 2006லனா ஓகே! ஆங்...''

''அம்பத்தி.... மூணா அது போன மாசம்!...... சேலத்துல கூட்டத்த பாத்தீங்கள்ள! பின்ன .... ''

''எலுவதுக்கு மேலன்னா பேச்சு. இல்லாட்டி அய்யா கால்(Call !!!) வெயிட்டிங்கு''

இந்த அரிபரிகளுக்கிடையில் மீனவன் செத்தத லேடி கேப்டனும் கேள்விப்பட்டிருக்க மாட்டாங்க பன்ரொட்டியாரும் சொல்லி இருக்கமுடியாது. எனவே விசயமே தெரியாமல் (எதிர்பாராத காரணங்களால்) போனதால் விசயகாந்த் ஆட்டையிலிருந்து விலகிவிட்டார்.

அடுத்ததாக லெட்டர் பேடில் 2011ன்னு போட்டு புதுசா அடிக்காம பழைய லெட்டர் பேடிலேயே ஒயிட்னர் வைத்து பத்தை பதினொன்றாக்கும் நிலையில் கட்சி நடத்தி வருகிற சரத் குமார்,கார்த்திக் பற்றியெல்லாம் ஜெயா நியூசில் விளக்கமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுறா என்ற படத்தில் மீனவனாக நடித்த இளையதளபதி விஜய் தன் சமகால நடிகர்களில் மீனவனாக நடித்தது தான் மட்டும் தான் என்ற திருப்தியுடன் இவ்விசயத்தில் ஆசுவாசம் கொண்டிருக்கலாம். மீண்டும் கலைஞ்சர் குழும தொலைக்காட்சிகளில் காவலன் தலை காட்டத் தொடங்கி விட்டதால் இழுத்து மூடுவதைத் தவிர அவருக்கும் வேறு வழியேதுமில்லை.

வைகோ டெல்லி சென்று சிங்கிடம் கடிதம் கொடுத்து சிவசங்கர மேனனுக்கு டாட்டா காட்டி ஏர்போர்ட் நெருங்கி இருக்கக் கூடமாட்டார் அடுத்த இழவு சேதி வந்துவிட்டது! அவர் கொடுத்த கடுதாசி நம்பர் 10,ஜன்பத் சாலை வீட்டில் உளுந்தவடைக்கு எண்ணை உறியச் செய்ய அனுப்பப் பட்டு இருக்கலாம். பிப்ரவரி 6ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். நல்லது நடந்தா சரி சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஜூஸ் குடுத்து சிறப்புரையாற்ற செயலலிதாவ கூப்பிடாம இருந்தா பரவால்லைங்க.

ராமதாஸ் கோவாலபுரத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டாராம்.

அதனால் ””ரெண்டு வாரம் முன்னாடி செத்துருந்தானுகன்னா அறிக்க உட்டுருப்பேனே!”” என்கிறார். மேலும் முதல்வரிடம் மீனவர்களுக்கு நல வாரியம் அமைப்பதாக இருந்தால் பாதிப்பேரை வன்னியர்களாகப் போடச்சொல்லி வலியுறுத்தப் போவது உறுதி!

செயலலிதா கொஞ்சம் அதிரடியாக ஹெலிக்காப்டரைக் கிளப்பினார்! ஆஹா! வந்துவிட்டாரய்யா தர்ம தேவதை! அம்மா வருவதற்கு முன்னமே இழவு வீட்டில் தற்காலிகமாக மரக்கட்டையில் படிகள் அமைக்கப்பட்டதாம்; அம்மையீர் உள்ளே நுழைய வசதியாக வாசல் சற்று இடித்து அகலப் படுத்தப்பட்டதாம் விட்டின் முன்புறம் முழுக்க மணல் கொட்டி மேடாக்கப் பட்டதாம் அடடா! இதல்லவா அதிரடி நலத்திட்டம்! இதற்குப் பிறகான காட்சி தான் அற்புதம்! இழவு வீட்டில் இறந்த மீனவரின் மனைவி மற்றும் தாயாரைத் தவிர அத்தனை பேரையும் துரத்திவிட்டார்களாம். மொத்தமாக 8 நிமிடம் அம்மா அந்த வீட்டில் இருந்தார் அழுதவர்களைக் கட்டி அணைத்தார் சில பல ஃப்ளாஷ்கள்! 1,00,000/- நிதி உதவி! முடிந்தது மேட்டர். வெளியே வந்ததும் நீட்டப்பட்டன மைக்குகள்! ‘’அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்’’ என்பதை வேறுமாதிரியாகப் பரப்புரை செய்துவிட்டு கிளம்பி விட்டார் ‘’எனது நல்லாட்சியில் மீன்களே இனி துள்ளிக் குதித்து வந்து கட்டுமரத்தில் விழும் ’’ என்று மட்டும் தான் சொல்லவில்லை.

கலைஞ்சர் டீவிக்காரர்கள் செயா வருகை தெரிந்த உடன், அவசர அவசரமாக மாவட்ட நிர்வாகம் மூலம் இழவு வீட்டில் 5,00,000/- பணம் கொடுத்துவிட்டு, மைக்கை நீட்டி ’’கலைஞ்சர் நல்லவர்;வல்லவர் நாலும் தெரிந்தவர்னு வாக்குமூலம் வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

திருமாவளவனை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் 500 பேர் மறியல் செய்தனர் [இவர்கள் நிலை தான் பரிதாபம்] இந்தச் சிறுத்தை துரோகத்தில் நம் முதல்வருக்கும் கருணாவுக்கும் சற்றும் குறைந்தவரில்லையல்லவா?! அதனால் தான்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் மானமிகு வீரமணியும் இளைஞன் படத்தை ஒவ்வொரு ஷோவும் பார்த்து எப்ப்படியாவது ஹிட்டாக்கும் முயற்சியில் உள்ளனர்! ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சமீபத்திய கிரக நிலை மாற்றங்கள் அவர் எதிர்பார்த்தாற் போலில்லையாதலால் சித்த பிரமையாம். மற்றவர்களுக்கு அறிக்கை எழுதிக் கொடுக்கும் அஸிச்டெண்ட்டுகள் லீவில் சென்றுவிட்டதால் சொல்வதற்கு எதுவுமிருக்காது.

இந்திய ஜனாதிபதிக்கு சேலையை சரியாகக் கட்டுவதே சிரமமாக உள்ள நிலையில் ராஷ்டரபதி பவனில் ரோஜாச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கு இல்லை.



மன்மோகன் சிங்குக்கு நீல டர்பன் வேணாம்னு மஞ்ச டர்பன் கோவாலபுரத்துல இருந்து பார்சல் போயிருக்காம் அத சுத்தி சுத்தி கட்டிட்டு இருப்பார்.


சொக்கத் தங்கம் சோனியா காந்தி நிருபமா ராவ இலங்கைக்கு அனுப்பி இருக்காங்க. ஈழப்படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்கறதா சொல்லி அனுப்புனாங்களே முன்னொரு தடவை கடசீல என்ன ஆச்சு? அதே தான் இப்பவும் ஆகப் போவுது. எனக்கு புரியாத ஒரே விசயம் நேர்ல ஆளனுப்பிச்சு (Nil Report)அறிக்கைய வாங்கிட்டு வரணுமா! இல்ல பொம்பளைய அனுப்பிச்சி தான் இதுக்கு முன்னால எல்லாம் மத்த நாடுகளிலிருந்து அறிக்கை வாங்குனீங்களா?


கொன்னவன் வீட்டுக்குப் போயி மன்னிப்பு கடிதத்துல கையெழுத்து வாங்கற கேவலம் வேற எங்கயும் நடக்காது.




இந்திய ஊடகங்கள் இந்த பிரச்சனைய உப்புசப்பில்லாததுன்னு ஒதுக்கித் தள்ளுவதிலும் நியாயம் இல்லாமலில்லை; பின்ன தெனம் ஒரு கட்சி அறிக்கை உடறதுதான் சென்சிடிவ் பிரச்சன! அதைக் கவர் பண்ணினா காசு பாக்கலாம்; மீனவன் செத்தத உள்ளூர்லயே ஒருத்தனும் கண்டிக்கல இத வெச்சு மயிரா புடுங்கறதுன்னு நெனச்சிருப்பான்.


தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில பாதி மஞ்சத் துண்டுக்கு மணியடிக்கவே கொள்கைச் சபதம் கொண்டவை.மீனவர் படுகொலைன்னு தலைப்பிட்டு செத்தவன் போட்டோ குடும்ப விபரம் எல்லாம் விலாவாரியா போட்டுட்டு தொடர்ச்சி 26ம் பக்கம்னு சொல்லிடுவானுக அடுத்த பக்கத்துல கலைஞ்சரும், அவர்தம் புத்திரச் செல்வங்களும் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும்! இந்த கருமத்துக்கு முரசொலியே பரவால்ல.


தமிழக அரசு கலைமாமணி அறிவிச்சாச்சு! வாங்குனவன்லாம் சேர்ந்து இனி பாராட்டு விழா எடுப்பான். கெழம் அதுல பிஸியாகிடும். பொழப்பத்த வக்கீல் தமிழன் ஹை கோர்ட்ல மீனவன் செத்துட்டான் நடவடிக்கை தேவைனு கேஸ் போடுவான்; ஹை கோர்ட் அரசை கேள்வி கேட்கும். கருணாநிதியின் அல்லக்கை ஐ ஏ எஸ் எவனாவது சிறப்பு அலுவலர்னு வெள்ள அம்பாசிடர தூக்கிட்டு வெட்டிப் பயணம் கெளம்பிடுவார்.


அடுத்த இழவுக்காக தமிழர்கள் காத்திருப்பார்கள்....


டிஸ்கி 1: டுவிட்டரிலும் பதிவுகளிலும் முன்னெடுக்கப் பட்டிருக்கும் பரப்புரையையும்,அதை செய்பவர்களையும் நக்கலடிக்கும் நண்பர்களுக்கு ஒரு :-)


டிஸ்கி 2:இத்தனை பேர ஏன் ஒண்ணும் செய்ய மாட்டீங்கிறீங்கன்னு கேட்டதுக்கு கூடவே இருக்கற சக பதிவர்,டுவிட்டர்கள் சிலரிடம் {பினா பானாஸ்} கேட்கத் தான் நினைத்திருந்தேன் அந்த முகமூடியும் கிழிந்து தொங்கட்டும் என்று
அவர்களுக்கு ஒரு :-)

பதிவர்: ராஜன்

Saturday, January 29, 2011

இது பொறுக்குதில்லை! #TNfisherman

தமிழக மீனவர் படுகொலைச் செய்தி வெளியானதும் எனது உணர்வுகளை "கடுதாசு போடுவோம் வாங்க!" என்ற இடுகையில் முன்னரே வெளிப்படுத்தியிருந்தேன். இது, இரண்டொரு நாட்களாக இணையத்தில் தமிழர்கள் மூட்டியிருக்கிற உணர்வுத்தீயில், ஒரு தமிழனாக நான் செலுத்த வேண்டிய ஆகுதி!

இயல்பில் நான் பெருங்கோபக்காரன். எனது சினத்தை பெரும்பாலும் ஏளனத்தில் பொதிந்து எழுதுகிறவன் என்றாலும், அவ்வப்போது சுருண்டுபடுத்திருக்கிற எனது கோபம் சீறியெழுந்து படமெடுப்பதுமுண்டு. ஒட்டுமொத்த வலைத்தமிழரும் ஒரே இலக்கினை நோக்கி தத்தம் கோபத்தை ஏவுகணைகளாய்ச் செலுத்திக்கொண்டிருக்கையில், ஓரமாக ஒதுங்கியிருக்க என்னால் முடியவில்லை.

இந்த தேசம் தற்கொலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது; அதனால்தான் விருப்பமாக விஷத்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது. தீவிர சிகிச்சைப்பிரிவிலிருப்பவனிடம் "நீ பிழைத்துவிடுவாய்," என்று மருத்துவர் முழுப்புவதுபோல, ரைஸினாக்குன்றின் ராஜதந்திரிகள் பொய்யறிக்கைகளைச் சொல்லிப் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பிட்டுத் தனிமைப்படுத்தி பெருமிதப்பட முடியாத அளவுக்கு, காணும் திசையெல்லாம் மிஞ்சிக்கிடப்பதெல்லாம் பொறுப்பின்மை ஒன்றுதான். இங்கே மனிதனின் உயிர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிற ஆணுறைகளைக் காட்டிலும் மலிவாகிவிட்டது.

அரசியல்- ஊழலை நேரடி முதலீடாகவும், மக்களின் மறதியை மறைமுக முதலீடாகவும் கொண்டு நடத்தப்படுகிற வர்த்தகமாகி விட்டது. எல்லா நம்பிக்கைப் பொறிகளின் மீதும் எச்சிலை உமிழ்ந்து உமிழ்ந்து அவை கொழுந்து விட்டு எரியவிடாமல் கொன்றுவிட்டார்கள். இத்தகைய சூழலில், இணையத்தில் நிகழ்பெறுகிற பெருமுயற்சி ஒரு பெருவேள்வியின் துவக்கம் என்று பெருமை கொள்ளலாம்; தவறில்லை!

உடலில் ஓடுகிற உதிரத்தில் உப்புச்சத்து மிச்சமிருக்கிற அரசியல்வாதி எவனேனும் இருந்தால், அவன் நம்மைச் சற்றேனும் கவனிப்பான் என்ற அற்ப நம்பிக்கை ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

பிணமெண்ணிச் சோர்ந்துபோன விரல்கள் இப்போது ஒருங்குறியில் உம்மைக் குறிவைத்து ஒன்றன்பின் ஒன்றாய்ப் பாணங்களைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. குண்டுதுளைக்காத கற்சுவர்களுக்குப் பின்னால், காகிதக்குழிக்குள் கவிழ்ந்து கிடக்கும் உங்களை நோக்கி, காற்றுவழியாக எங்களது கண்டனக்கணைகள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன.

இன்று இணையத்தில் நடந்து கொண்டிருப்பது, என்றேனும் ஒருநாள், அதிகாரமதில்கள் அதிர அதிர உங்கள் அலங்காரவாயில்களிலும் ஒலித்தே தீரும். இது ஒரு அச்சாரம்!

எரிய மறுக்கிற எல்லா ஈரவிறகுகளுக்குமுள்ளே ஒரு மவுனத்தீ மயக்கமுற்றுக் கிடக்கிறது. எப்போதாகிலும் அது விழித்தெழுகிறபோது அதன் ஆவேசத்தீயின் நாக்குகள் அரசாங்கங்களையே சுருட்டி விழுங்கிவிடுகின்றன. சரித்திரப்பாடத்தின் இந்த சத்தியமான செய்தியை, புது தில்லியின் புத்திமான்களே, புறந்தள்ளி விடாதீர்கள்! இணையத்தில் எங்கோ, யாரோ ஒரு குச்சியைக் கொளுத்தியிருக்கிற ஒலியை, உங்களது குறட்டையொலியின் பேரரவம் கேட்க அனுமதித்திராவிடில், தெறித்துக்கொண்டு வருகிற அதன் பொறிகள் உங்களைப் பொசுக்கிவிடுமென்பது விதி.

எங்களது கடற்புறத்தின் மணல்பரப்பு, எம் சகோதரரை எரித்த சாம்பலை உடுத்தி விதவைக்கோலம் பூண்டிருக்கிறது. காற்றில் அதன் துகள்கள் பறந்து ராஜதானிகளின் கற்கோட்டைகளின் மீது இன்னும் கவியாதிருப்பதற்கு, அந்த சாம்பல்படுகையின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் எம் கண்ணீரின் ஈரப்பதமே காரணம் என அறிக!

துயரமும், ஏமாற்றமும், இழப்புமாய்ச் சேர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிற ரசவாதத்தில், எமது கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும் கருவுற்று பல காலாக்கினிகளை பிரசவிக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. எங்களையே சாணைதீட்டிக்கொண்டிருக்கிறோம்; ஏவுகணைகளாய் உம் மீது வந்து விழுவதற்காக...! அடிவயிற்றுத்தீக்கு எரிபொருளாய் அடக்கமாட்டாத கண்ணீர் ஆறாய்ப்பெருகிக்கொண்டிருக்கிறது.

இந்தியத்தமிழன் இலங்கையை நோக்கி உமிழ்ந்த எச்சிலை விடவும், தென்புலத்திலிருந்து திரண்டுவரும் எமது கண்ணீர்க்கணைகள் வலிமையானவை. இந்த அஸ்திரங்கள் சினமுற்ற தமிழனின் இருதயக்கூட்டுக்குள்ளே குருதிதடவிக் கூர்தீட்டப்பட்டவை! விந்தியத்தைப் பிளந்தபடி வீறுகொண்டு வருகிற எமது சொல்லீட்டிகளை உங்களது காகிதக்கவசங்களால் முனைமழுங்கச் செய்ய முடியாது. தேன்தடவிய வார்த்தைகளால் இனியும் தேற்றிவிடவோ, மாற்றிவிடவோ முடியாது.

இது நிழல்யுத்தமல்ல: நிஜங்களின் கிளர்ச்சி! கேள்விக்குறிகளின் கூனை நிமிர்த்திக் கூர்தீட்டுகிற முயற்சி! மடிந்த மீனவனுக்காகக் கேட்கப்படுகிற மடிப்பிச்சையல்ல இது; உரிமைக்குரல்

இம்முயற்சி தொடரும்! எமது தமிழர் தமது உள்ளக்கிடக்கையை இங்கு
எழுதியெழுதி உம்மைத் துயிலெழுப்புகிற முயற்சியைத் தொடர்வார்கள்.

உதிரிகளாய்ச் சிதறிக்கிடக்கிற குமுறல்களையெல்லாம் இங்கே ஓரிடத்தில் குவித்து அதன் உச்சியில் இருக்கிற எம்மை அரசியல்வியாதிகள் அண்ணாந்து பார்க்க வைப்போம்.

நாங்கள் அனுப்புகிற மனுக்கள் நீங்கள் வாசிப்பதற்கல்ல; இப்போதாவது யோசிப்பதற்கு!

செத்தவன்போல நடித்தது போதும்; சற்றே சொரணை கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் உங்களது இறையாண்மையை ஏதேனும் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்க நேரிடும்

கட்டுரை : சேட்டைக்காரன்

இலங்கையைப் புறக்கணிப்போம் #tnfisherman

விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று நம்பிக்கொண்டிருந்தவன்தான் நான்.

என்னைச் சுற்றி நடக்கும் விடயங்களைப் பார்த்துப் பதைத்து, கவலை கொண்டு, கண்கள் கலங்கி, கண்ணீர் விட்டு அழுது அதன் பின் அதனை மறந்தும் போனவன் நான்.

2010 ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இலங்கை வீரர்கள் திலன் துஷாரவையும், பெரேரவையும் ஏலத்தில் எடுத்துக் கொண்டு வந்ததைக் கண்டித்து சென்னை அணியின் வலைமனையில் நம் எதிர்ப்பைப் பதிவோம் என்று மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்த நண்பர்களிடம் விளையாட்டையும் அரசியலையும் சேர்க்காதீர்கள் என்று சண்டை போட்டவன் நான்.

இயக்குநர் ராமின் எழுதும் காட்சி வலைப்பூவில் சக்தி எழுதிய இந்தக்கட்டுரையை வாசித்த பின்னும் தொடர்ந்து ஐ.பி.எல் பற்றி எழுதியவன் நான்.

நவம்பர் 27, 2008. பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் 14 பேர் மும்பை நகரத்தை சில நாட்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். உயிர், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. பொங்கி எழுந்தது இந்தியா. பாகிஸ்தானைக் குற்றம் சொல்லி உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தது, இந்நிகழ்வில் பாகிஸ்தான் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபட்டது என்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கான விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது.

2010 ஐ.பி.எல் துவங்குமும் ஏலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்களை சேர்த்தும் எந்த அணி முதலாளிகளும் அவர்களில் ஒருவரைக் கூட எடுக்காமல் அவர்களைக் கேவலப்படுத்தினர். உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஐ.பி.எல் நிர்வாகத்தைக் கண் துடைப்புக்காகக் கண்டித்தார்.

ஆனால், இலங்கை அரசின் சம்பளம் பெறும், இலங்கையின் பாதுகாப்புக்கு பணி புரியும் இலங்கைக் கடற்படை என் மீனவச் சகோதரர்களை தினம் தினம் சித்ரவதை செய்தும் கொல்லாமல் கொன்றும், கொன்றே கொன்றும் வந்தும், அவற்றைப் பற்றி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காமல் கை கட்டி வேடிக்கைப் பார்க்கிறது அதே இந்திய ஏகாதிபத்ய அரசு.


இரண்டு வாரங்களில் இரண்டு மீனவர்களை சுட்டும் கழுத்தை நெறித்தும் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஃபாசிச சிங்கள கடற்படை.

பெரும்பாலான கொலைகள் நம் எல்லைக்குள் வந்தே செய்திருக்கிறது சிங்கள் கடற்படை. அப்படி எல்லை மீறுபவர்களையும் சுடும் உரிமையை இந்த நாய்களுக்கு யார் கொடுத்தது? மற்ற நாடுகளில் இதைத்தான் செய்கிறார்களா? நம் எதிரி நாடு என்று அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை வெளிப்படையாகக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் கூட மீனவர்களை எச்சரித்து விட்டுவிடுகிறதே? பாகிஸ்தான் எதிரி நாடா இல்லை இலங்கை எதிரி நாடா?


சென்னையில் சிங்கள புத்த விகாரம் ஒன்று தாக்கப்பட்டவுடன், இனி மீனவர்கள் மேல் தாக்குதல் நடக்காது என்று சொல்லியிருக்கிறது சிங்கள அரசு. ஆக இதுவரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் தாக்குதல்களுக்கு என்ன பதில்?

இலங்கை அரசின் பிரதிநிதிகளை அலறியடித்துக் கொண்டு ஓடிவரச் செய்ய வேண்டிய இந்திய அரசு பிரதிநிதியை அனுப்பி வைக்கிறதாம். அவர் போய் மன்னிப்புக்கடித்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வருவாரா? இலங்கைக்கான இந்தியத் தூதரை திரும்பப் பெற்றிருக்க வேண்டாமா? இலங்கையுடனான நட்பை முறித்துக் கொண்டிருக்க வேண்டாமா? முதுகெலும்பில்லாத அரசாகிவிட்டதே மன்மோகன் அரசு?


அமைச்சர் பதவிகள் எத்தனை வேண்டும் என்று பேச தனிவிமானம் ஏறிப் போவாராம். கூட்டணி பற்றிப் பேசவும் விமானம் பிடிப்பாராம். மீனவன் செத்தால் தந்தி அடிப்பாராம். கடிதம் எழுதுவாராம். இவரெல்லாம் தமிழினத் தலைவராம்? இனத்தையே அழித்துவிட்டால் பிறகு எங்கிருந்து தலைவராக முடியும்?


இந்திய ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பற்றி பேசவே மாட்டேன் என்கின்றன. இந்து பத்திரிகை ஒரு படி மேலே போய் சிங்கள அரசுக்கு பலத்த ஜால்ரா அடிக்கிறது.


மத்திய மாநில அரசின் மெத்தனத்தைக் கண்டிக்கவும், இருட்டடிப்பு செய்யும் ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசவும், இந்த விவாகரத்துக்கு வெளிச்சம் கொண்டு வரவும் தமிழ் வலையாளர்கள் டிவிட்டர் தளத்தில் ஒரு புதுமைப் போராட்டம் ஒன்றைக் கையெடுத்திருக்கிறார்கள். #tnfisherman என்ற டேகுடன் ட்விட் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வலைத் தொடர்பு கொண்ட தமிழர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். எனக்குப் பிரச்சனை இல்லாதவரை கவலையில்லை என்ற மனப்போக்கை கை விட்டு அனைவரும் நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்.


ட்விட்டர் போராட்டத்தோடு நிறுத்திவிடாமல் அதற்கு வெளியேயும் நம் போராட்டத்தைத் தொடர்வோம்.


இலங்கைப் பொருட்களை புறக்கணிப்போம். வெளிநாடுகளில் வாழ்வோர் கடைகளில் இலங்கைப் பொருட்களை வாங்கி பின்னர் அதை இலங்கைப் பொருட்கள் என்பதால் திருப்பித் தருவதாகச் சொல்லி திருப்பித் தருவோம். (இந்தியாவில் வாங்கிய பின் திருப்பித் தருவதென்பது நடக்காத காரியம் அதனால் தான் வெளிநாட்டுத் தமிழர்கள்).


கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிப்போம். நேரிலோ டிவியிலோ பார்க்காமல் புறக்கணிப்போம். ஒரு வேளை ஏற்கனவே டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஸ்டேடியத்துக்குள் டிவி கேமிராவுக்குத் தெரியும் வண்ணம் மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் ஏந்திப் பிடிப்போம்.


இலங்கையில் நடக்கும், இலங்கை அணி பங்குபெறும் அனைத்து விளையாட்டுகளையும் புறக்கணிப்போம். இலங்கை அணியைத் தடை செய்யாத ஐசிசி நடத்தும் அத்தனைப் போட்டிகளையும் புறக்கணிப்போம்.


இரண்டு இலங்கை வீரர்களைத் தேர்ந்தெடுத்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியையும் புறக்கணிப்போம். அவர்களை நீக்கும் வரை சென்னை சூப்பர் கிங்க்ஸின் போட்டிகளைப் புறக்கணிப்போம்.


இலங்கையில் தொழில் நடத்தும் ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்களைப் புறக்கணிப்போம். இப்போது மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வந்துவிட்டதால் ஏர்டெல் தொடர்புகளைத் துண்டிப்போம்.


இலங்கை இனவாத அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை, கட்சத்தீவை இந்தியா திரும்பப் பெறும் வரை நம் போராட்டம் தொடரவேண்டும்.


பதிவர்: முகிலன்

டிவீட்டரில் தொடங்கிய எழுச்சி

டிவீட்டரில் தொடங்கிய ஒரு எழுச்சி, இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியிருக்கிறது. கொத்துகொத்தாக குண்டு போட்டு, ரத்தம் குடித்த ராஜபக்சே கூட்டத்திற்கு இன்னும் ரத்தவெறி அடங்கவில்லை போலும். அதான் கடலுக்கு செல்லும் நம் மீனவர்களை, இன்னும் கொன்று கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்த்து, இன்னும் நாம் மௌனமாக இருந்து கொண்டிருந்தால், நாம் தமிழனாக, இல்லை, இல்லை மனிதனாக பிறந்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்

இணையத்தை உபயோகிக்கும் தமிழர்களின் முதல்முயற்சியாக, இதோ, டிவீட்டரில் தொடங்கிய, இந்த ஆரம்பம், ஒவ்வொருவர் மனதிலும், ஏதோ விதைகளை ஊன்றிவிட்டு வந்திருக்கிறது.

நீங்களும் மறக்காமல், இந்த லிங்கை க்ளிக் செய்து உங்கள் கண்டனத்தை தெரிவித்து, இன்னும் இந்த உலகில் மனிதம் மீதமிருக்கிறது என்று நிரூபிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


பதிவர் :அவிய்ங்க ராசா