Tuesday, February 1, 2011

தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?

ராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் என்பது தனித்த பிரச்சனையல்ல. இலங்கையின் இனவாதப் போக்கிற்கும் அதை எதிர்த்துக் கிளம்பிய ஈழ மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கும், இப்போது மாபெரும் இனப்படுகொலை ஒன்றின் மூலம் போர் முடித்து வைக்கப்பட்டிருப்பதற்கும், இலங்கைக்கு வெளியே தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை நசுக்குவதற்கும், மீண்டும் ஒரு போராட்டம் ஈழத்தில் வேர் விடாத படி அதன் அஸ்திவாரங்களில் ஒன்றாக பாம்பன் பகுதியை தங்களின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும், தனியார் – தாராளமயத்திற்காக கடலையும் கரையோரங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காய் இந்திய, இலங்கை அரசுகளின் இந்த கூட்டுக்கொலை இராமேஸ்வரத்தில் நடத்தப்படுகிறது.
இக்கொலைகளை இலங்கை கடற்படைகள் முப்பதாண்டுகளாய் செய்தது. இப்போது மீனவர்களைக் கொல்லவென்றே கூலிப்படைகளை நிறுவியிருக்கிறது இலங்கை. இந்தியா இக்கொலைகளை மறைமுகமாக ஆதரிக்கிறது. விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட இந்திய அரசும், பௌத்த சிங்கள பேரினவாத அரசும் இணைந்து தங்களின் சொந்த சுயலாப வர்த்தக, அரசியல் நலன்களுக்காய இக்கொலைகளை செய்து கொண்டு, கண் துடைப்பு நாடகங்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றது.

இரு நாட்டு தமிழர்களிடையே பிளவு?

இராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் கடந்த முப்பதாண்டுகளாய் நடக்கிறது. சுமார் 500- க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் போர், ஈழ மக்களின் துயரம், ஈழம் என்கிற அளவிலேயே தங்களின் தமிழார்வத்தை வெளிப்படுத்திய தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அதே அளவுக்கு தமிழக மீனவப் படுகொலைகளைக் கண்டித்ததில்லை.
ஈழ விவாகரம் தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்ட அளவுக்கு இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்டதில்லை. மாபெரும் இன அழிப்பின் பின்னர், ஈழ மக்கள் இராணுவ நிழலில் அமைதியான பின்னர் இப்போது அதிகமாக இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை பேசப்படுகிறது. அதுவும் சிறிய அளவில்தான். திராவிட இயக்க அரசியலிலும் மீனவ மக்கள் பிரச்சனை பேசப்பட்டதும் இல்லை. அதற்கு அக்கறையான எந்த முடிவுகளும் எடுக்கப்பட்டதும் இல்லை.
ராஜீவ் கொலைக்கு முன்னர் இலங்கைக் கடற்படைக் கொலைகள் என்று மட்டுமே (அதுதான் உண்மை) சொல்லப்பட்ட மீனவர் படுகொலைகள், ராஜீவ் கொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் நிகழ்த்தும் கொலைகள் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது. போர் காலத்தில் மரியா என்ற படகில் வந்து புலிகள் சுட்டுக் கொன்றதாகச் சொன்னார்கள். இந்த நிலையில்தான் 2009 – மே மாதம் போர் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது புலிகள் இல்லை. ஆனால் மீனவர் படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போது சொல்கிறார்கள், “இலங்கை மீனவர்களின் வளங்களை இந்திய மீனவர்கள் கொள்ளையடிக்கிறார்கள், வலைகளை இந்தியப் படகுகள் சேதப்படுத்துகின்றன” என்கிறார்கள். இது தொடர்பாக இந்திய இலங்கை மீனவர்களிடையே நடந்த பேச்சு வார்த்தை தொடர்பாக ஆழமானதும் அவசியமானதுமான இக்கட்டுரையைப் படியுங்கள், பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். (இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? – அகில். http://inioru.com/?p=16420 )
அதாவது நாம் தமிழக மீனவர்களைக் கொல்கிறது இலங்கை கடற்படை என்கிறோம். அவர்களோ “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள், மீன் வளங்களை அழிக்கிறார்கள், வலைகளை அறுத்தெரிகிறார்கள்” என்று தமிழக, ஈழத் தமிழ் மீனவர்களிடையே பிளவை உண்டு பண்ணுகிறார்கள். உண்மையில் தமிழக, ஈழத் தமிழ் மீனவர்களிடையே பிளவை உருவாக்கும் நோக்கம் யாருடையது? இரு நாட்டு மீனவர்களுடையதா? இரு நாட்டு அரசுகளுடையதா?
அந்த வகையில் கடைசியாக இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி இதழ் ( யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27971 ) இப்படி  ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. ஈழ மக்கள் அமைதியாக்கப்பட்டு விட்ட நிலையில் அறிவுஜீவித்தளத்தில் இலங்கை அரசின் அரசியல் நிலைகளை முன்னெடுக்க விரும்பும் சிலர் பருத்தித்துறை மீனவர் குரலில் இப்போது பேசத் துவங்கியிருக்கிறார்கள்.
பருத்தித் துறைப் பகுதியைச் சார்ந்த மரியகுணஸ்டீன்,  // “இது சிங்க இறால் பிடிக்கும் காலம். இந்தக் காலத்தில் தெற்கிலிருந்து சிங்கள மக்களும் முனைப்பகுதிக்கு மீன்பிடிக்க வருகிறார்கள். கடல்மார்க்கமாகவே வந்து, அந்த வழியிலேயே அவர்கள் செல்கிறார்கள். இந்திய மீனவர்களால் தான் தொழிலில் எமக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. நாம் வலை விரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன. இதன் காரணமாக நாம் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்கிறோம். கடந்த வாரம்கூட சுமார் ஒன்றரை லட்சம் ரூபா விரயமானது. இதுகுறித்து நாம் அதிகாரிகள் பலரிடமும் முறையிட்டோம். ஆனால் சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருவேறு நாடுகள் எனச் சொல்லிப் பிரிவினைவாதத்துடன் நாம் பார்க்கவில்லை. மனிதாபிமானம் வேண்டும் என்பதையே நான் கூற விரும்புகிறேன்” // என்று சொல்கிறார். இந்த அப்பாவி மீனவரை தன்னைப் போன்ற ஒரு ஒடுக்கப்பட்ட இனமான தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டிய சக்தி எது?
விசைப்படகுகளால் வலைகள் கிழிக்கப்படுவதும், விரித்து வைக்கப்பட்டிருக்கும் வலைகளை விசைப்படகுகள் இழுத்துச் செல்வதும், மீன் பிடி எல்லைகளை தீர்மானிப்பதில் வரும் குழப்பங்களும் மீன்பிடித் தொழிலில் மிக மிக சாதாரணமானது. இது தொடர்பான பிரச்சினை தமிழக மீனவர்களிடையே கூட அடிக்கடி நடப்பதுண்டு. மேலும் இந்தப் பிரச்சினை உலகெங்கும் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மீனவர்கள் அடிக்கடி சந்திக்கக் கூடியதுதான்.
இலங்கையில் தெற்கில் இருந்து வரும் சிங்கள் மீனவர்கள் வடக்கில் தமிழ் மீனவர்களின் மீன் பிடி உரிமையை கட்டுப்படுத்தவில்லையா? கடல் மீன் பிடி உரிமையில் இலங்கையின் பெருந்தேசிய சிங்கள வெறி கடலில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவில்லையா?  இலங்கைக்குள்ளேயே நிலைமை இப்படி இருக்கும் போது ஒரு அப்பாவி மீனவனை தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டும் குரல் இலங்கை அரசின் குரலல்லாமல் வேறு என்ன?

மீனவர்களின் நட்பு கடலின் ஆழத்தை விட அதிகமானது.

இந்திய இலங்கை மீனவர்கள் நட்பு மட்டுமல்ல உயிருக்கு உத்திரவாதமில்லாத உலகிலேயே உயிராபத்து அதிகமுள்ள தொழில்களில் ஒன்றாக மீன் பிடித்தொழிலில் மீனவர்கள் பேதம் பார்த்து பழகுவதில்லை. ஒரு சுரங்கத் தொழிலாளியின் உயிர் நாடியில் கசிந்து கொண்டிருக்கும் மரணம், அவனது எல்லையற்ற அன்பிற்கு அடையாளமாக இருப்பது போலதான் மீனவனின் அன்பும். அவன் உணர்வுகளால் உந்தப்படுகிறவன். சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவன். தான் அன்பு செலுத்தும் ஒன்றுக்காக உயிரைக் கூடக் கொடுக்க அஞ்சாதவன்.
இதுதான் மீனவர்களின் உணர்வுபூர்வமான வாழ்வு. அதே நேரம் அவர்களுக்குள்ளே எந்தப்பிரச்சினைக்காக மோதிக்கொண்டாலும் அது மூர்க்கமாக இருக்குமளவு அப்பாவித்தனமாகவும் இருக்கும். அவர்கள் சமவெளியின் கறைபடியாத எளிய மனிதர்கள். தமிழக மீனவனாக இருந்தாலும் இலங்கை தமிழ் மீனவனாக இருந்தாலும் இதுதான் உண்மை. பாரம்பரிய மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் ஒரு மீனவனின் கருணையையும் அன்பையும் வேறெந்த சமூகங்களிடமும் காண்பது அரிது. அப்படி ஒரு நீண்ட கால அன்பும் நட்பும் கலந்துதான் தமிழக ஈழத் தமிழ் மீனவர்களின் நட்பு. கச்சத்தீவும் அந்தோனியார் கோவிலும் அந்த நட்பிற்கு நீண்டகால சாட்சியமாக நிற்கின்றன.
இது போக எல்லை தாண்டி புயல் மழையில் சிக்கி தத்தளிக்கும் மீனவர்களை, பரஸ்பரம் காப்பாற்றி கரை சேர்த்து உணவு கொடுத்து உறவு வளர்த்த கதை மீனவனுடையது. வேதாரண்யத்திலும் , பேசாலையிலும், மன்னாரிலும்,  யாழ்பாணத்திலும், பாம்பனிலும், தூத்துக்குடியிலும், கன்னியாகுமரியிலும், என்று இரத்தமும் சதையுமாக இரு நாடு மீனவர்களின் உறவுகளையும் எந்த அழிவு சக்திகளின் எல்லைகளும் பிரித்து விட வில்லை. ஆனால் இன்று?
இரண்டு அரசுகளின் எண்ணங்களை ஈடேற்றவும் இந்த இரு நாட்டு மீனவர்களும் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசின் ஆதரவாளர்களோ அதை ஊதி விட்டு இந்த பிரிவினையை முன்னெடுக்கிறார்கள். தமிழக மீனவர்களைப் பொறுத்தவரையில் தடை செய்யப்பட்ட மடியை பயன்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் இந்த மடிகள் முதலில் அழித்தது மீன் வளத்தை அல்ல, ஏழை கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை. அது உள்ளூர் சிறு கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை நசுக்குவது உண்மைதான். ஆனால் பிரச்சனை இதுவல்ல. தங்களின் சொந்த நலனை முன்னெடுக்க விரும்பும் அரசுகள் பழியை இவர்கள் மீது போட்டு, இவர்களை மோத விட்டு தங்களின் நலனை இராமேஸ்வரத்தில் முன்னெடுக்கின்றன.
உண்மையில் மீன் வளங்கள் இப்பிராந்தியத்தில் இல்லாது போகக் காரணம் பன்னாட்டு ஏக போக மீன் பிடி நிறுவனங்களே. மீன் வளம் பெருக வருடதிற்கு 45 நாட்கள் மீன் பிடித்தடையை உள்ளூர் மீனவர்களுக்கு கொண்டு வந்துள்ள இரு நாட்டு அரசுகளும் தங்களில் கடல்பரப்பில் ஏக போக பன்னாட்டு நிறுவனங்களை கடல் கொள்ளையில் ஈடுபட அனுமதித்துள்ளன. அவர்களுக்கு தடையும் இல்லை தண்டமும் இல்லை. ஆக இரு நாட்டு மீனவர்களும் போராட வேண்டியதும், எதிரியாக கருத வேண்டியதும்  இந்த பன்னாட்டு நிறுவனங்களைத் தானே தவிர தமிழக மீனவர்களை அல்ல.
பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்காகவும் மீன் பிடி நிறுவனங்களுக்காகவும் சேது சமுத்திரத் திட்டத்தை தமிழனின் வரலாற்றுப் பெருமையாகக் காட்டும் அரசியல் வாதிகள் அதை மீனவர்கள் எதிர்ப்பதை கணக்கில் எடுக்க மறுக்கின்றனர். சேதுக் கால்வாய் திட்டம் இரு நாட்டு மீனவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வணிகச் சூதாட்டம் என்பதுதான் உண்மை. கடலிலே இப்படியான கொள்ளைகள் ஒரு பக்கம் என்றால் கரையில் செயற்கைத் துறைமுகங்கள், கடலோர பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள்,  இறால் பண்ணைகள், என்று கடலோரங்களை தனியாரிடம் ஒப்படைக்க இன்னொரு சுனாமியாய் வருகிறது அடுத்தடுத்த திட்டங்கள்.
இவைகளை முன்னெடுக்கும் இந்திய அரசும், நீண்டகால அரசியல் நோக்கில் மீனவர்களை இராமேஸ்வரத்தில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கும் இலங்கையும்தான் இரு நாட்டு மீனவ மக்களின் எதிரிகளே தவிர கொலை செய்யப்பட்டவனையே எதிரியாகச் சித்தரிப்பது இன்னுமொரு அயோக்கியத்தனமல்லவா? ஆனால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், கொலை செய்யும் இலங்கை கடற்படைக்குமான பிரச்சனையை இந்திய, ஈழ மீனவர்களுக்கிடையிலான பிரச்சனையாக ஹிந்து ராம், பேராசிரியர் சூரியநாராயணன் போன்றவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஹிந்து ராம் யார் என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

இணையத்திலிருந்து களத்திற்கு வாருங்கள்!

துனிசியாவிலும், எகிப்திலும் டிவிட்டர், பேஸ்புக் இணையங்கள் குறிப்பிடத் தக்க செல்வாக்கைச் செலுத்தினாலும் புரட்சியை அவை கொண்டு வந்து விடுவதில்லை. பெருந்திரள் மக்களை வீதிக்குத் திரட்டி வந்து ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதன் மூலமே அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தம். ஆனால் டிவிட்டரிலேயே தொடங்கி டிவிட்டரிலேயே இந்தப் பிரச்சனை தீர்ந்து விடாது நண்பர்களே! ஒன்று திரட்டிய சக்தியை எங்கே எப்படி வெளிப்படுத்தி நெருக்கடியை உருவாக்குகிறோம் என்பதில்தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
இதனால் நாமெல்லாம் உடனே களமிறங்கி வெற்றியை ஈட்டிவிடுவோம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை நோக்கி தெளிவான கொள்கை, நடைமுறையோடு நாம் இந்தப்பிரச்சினையை கொண்டு செல்வது சரியாக இருக்கும். சிலர் மீனவர் பிரச்சினைக்காக எந்த அரசியல் கட்சியையும் எதிர்க்க கூடாது என்றெல்லாம் தவறான கருத்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து பின்னர் எழுதுகிறேன்.
ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரணை வரம்புக்குட்பட்டுதான் பயன்படுத்த முடியும். தண்டகாரண்யாவில் மாவோயிஸ்டுகளும் . காஷ்மீரில் போராடும் சக்திகளும் அப்படி ஓரளவுக்கு பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்துவதுதான் சரியும் கூட, அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. மேலும் அந்த முரண்பாட்டை பயன்படுத்துமளவு அவர்கள் ஒரு சக்திகளாக இருக்கிறார்கள். அப்படி இல்லாத போது நாமும் அப்படி இறங்கினால் நம்மைத்தான் ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்ளும்.
இப்போதே மீனவர் படுகொலை குறித்து பல்வேறு சதிக்கதைகளை இலங்கை அரசு உருவாக்கி தனது எடுபிடிகள் மூலம் பரப்பத் துவங்கியிருக்கிறது. அதிலொன்றுதான் இருநாட்டு மீனவர்களுக்கிடையே மோதல் என்ற கதை. இதையும் நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய அவசியமிருக்கிறது. இதன்றி வெறுமனே மனிதாபிமானத்துடன் மட்டும் இந்தப் பிரச்சினையை எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது சரியல்ல என்பதோடு ஆபத்தானதும் கூட.
____________________________________________________

- வெண்மணி

No comments:

Post a Comment