Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, February 1, 2011

மீனவர் வாழ்வு? (சீருடை மிருகம்)

ஓ........
சீருடைத் தரித்த
சீர்கெட்ட விலங்கே!


நீ...
தரையில் குடித்த
தமிழ் ரத்தம் போதாதென்றா
கடல் பக்கம்
நீட்டுகிறாய் உன்
நீண்ட நாக்கை?


எங்கள்...
ஓட்டு பொறுக்கிகளின்
மெத்தனத்தால்,
உயிர்பொறுக்கியாய் திரியும்
ஓநாய் கூடங்கள் நீங்கள்!


இன்று...
தன்மானம் பகை நெருப்பில்
எரிகிறது!
தமிழீழத்தின் அவசியம்
புரிகிறது!!


உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!


எழுத்து... நான்,
இயக்கம்... மாணவன்,வெறும்பய(ஜெயந்த்) 

Monday, January 31, 2011

மீனவ நண்பன்

தலைவா...!

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே...

ஆனால் நாங்கள் கடலில்

பட்டுப்போன மரமாக

வீசப்படுகிறோம்.

எங்கள் இனங்கள் பிணங்களாய்

மிதக்கின்றன..

நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை..

ஆனால்

எங்கள் உரிமைகளுக்கு ஒரு கோடியாவது காண்பியுங்கள்..

கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு

இதயத்தில் இடம் கொடுத்தது போதும்..

எங்கள் உயிர் உடலில் தங்க

ஒரு இடம் கொடுங்கள்..

ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி

வீசுகிறீர்கள்...

எங்கள் உயிர் எங்கள் வசம் தங்க

ஒரு ஏற்பாடு செய்யுங்கள்..

எம் ஜி ஆர் படத்தில் நடித்தே மீனவ நண்பன் ஆனார்...

நீங்கள் அரசியல் மேடையில் நடித்து

மீனவ எதிரி ஆகி விடாதீர்..

கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........
பதிவர்: சி.பி. செந்தில்குமார்

Sunday, January 30, 2011

உப்புக் குடித்தவர்களை ஒப்புக்கொடுக்கும் லாப விளையாட்டு (கவிதை)

உப்புக் குடித்தவர்களை ஒப்புக் கொடுத்து


ஆடும் பகடையாட்டம் ...


இப்போதைக்கு அலைக்கற்றை அலை ஓய,


எப்போதைக்கும் இரவலர் பட்டம் பூண்டு


அனுதாபிப் போர்வை மூட


கொட்ட வரும்
தேனீக்களை போக்குக் காட்டி


மீனவர் வோட்டுகள் எனும்


அடைத்தேன் பிய்த்துக் கொள்ள


எல்லாமொரு லாப விளையாட்டே ...


கடலோடும் அலையோடும் கரிப்பு மணிகளே


கேட்டுக் கொள்ளுங்கள்


உங்கள் உயிர்கள் மதிப்பு மிக்கவை


தக்கை வீசியவன் எக்கணமும்


அதை உணர்ந்தே இருத்தலில்


எப்போதும் செத்துக் கொண்டிருக்கிறீர்கள்


சிங்களவன் கை தும்பிகளாய்!


உங்கள் கதை உலர்ந்திடும் உப்பாக


கரைந்திடும் கடல் மணலாக


ஒப்புக் கொடுக்கப் பட்டவர்களின் ஒப்பாரி ஓசை


ஒப்புக் கொடுத்தொருக்கோ கேளாத தூரத்தே


அலையோசை தேய்த்துக் கரைக்கும் புறத்தே


மீண்டும் மீனவச் சாவுகள் ...


எப்போதும் மீனவர் பாடு மீன்பாடு.



கார்த்திகா வாசுதேவன்