Sunday, January 30, 2011

உப்புக் குடித்தவர்களை ஒப்புக்கொடுக்கும் லாப விளையாட்டு (கவிதை)

உப்புக் குடித்தவர்களை ஒப்புக் கொடுத்து


ஆடும் பகடையாட்டம் ...


இப்போதைக்கு அலைக்கற்றை அலை ஓய,


எப்போதைக்கும் இரவலர் பட்டம் பூண்டு


அனுதாபிப் போர்வை மூட


கொட்ட வரும்
தேனீக்களை போக்குக் காட்டி


மீனவர் வோட்டுகள் எனும்


அடைத்தேன் பிய்த்துக் கொள்ள


எல்லாமொரு லாப விளையாட்டே ...


கடலோடும் அலையோடும் கரிப்பு மணிகளே


கேட்டுக் கொள்ளுங்கள்


உங்கள் உயிர்கள் மதிப்பு மிக்கவை


தக்கை வீசியவன் எக்கணமும்


அதை உணர்ந்தே இருத்தலில்


எப்போதும் செத்துக் கொண்டிருக்கிறீர்கள்


சிங்களவன் கை தும்பிகளாய்!


உங்கள் கதை உலர்ந்திடும் உப்பாக


கரைந்திடும் கடல் மணலாக


ஒப்புக் கொடுக்கப் பட்டவர்களின் ஒப்பாரி ஓசை


ஒப்புக் கொடுத்தொருக்கோ கேளாத தூரத்தே


அலையோசை தேய்த்துக் கரைக்கும் புறத்தே


மீண்டும் மீனவச் சாவுகள் ...


எப்போதும் மீனவர் பாடு மீன்பாடு.



கார்த்திகா வாசுதேவன்

No comments:

Post a Comment