Showing posts with label தமிழக மீனவர்கள். Show all posts
Showing posts with label தமிழக மீனவர்கள். Show all posts

Sunday, January 30, 2011

நிருபமாராவ் இலங்கை பயணம் : மீனவர்கள் மீது தாக்குதல் நிறுத்த வேண்டுகோள்

இந்திய வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ் இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார். தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து இவர் செல்லும் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்ப்படும் வேளையில் இதனால் பயன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்றும் இது ஒரு கண்துடைப்புதான் என்றும் பா.ஜ., தலைவர் நிதின்கட்காரி குறை கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களில் 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த மீனவர்கள் பலியான விவகாரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.bஇந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசை மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜியிடமும் முதல்வர் வலியுறுத்தியதை அடுத்து இது கவலை தரும் விஷயம் என்றார்.உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிரணாப், வெளியுறவு துறை செயலர் நிருபமாராவை அனுப்பி வைக்க்க பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து இன்று ராவ் சென்னை வழியாக இலங்கை புறப்பட்டு செல்கிறார். அங்கு அவர் வெளியுறவு துறை அமைச்சர் பெரீஸ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து மீனவர்கள் நிலைமை குறித்து விவாதிக்கிறார். இந்திய இலங்கை கூட்டுக்குழு கூட விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.இத்துடன் இலங்கை கடற்படையினர் அத்துமீறி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பார் என தெரிகிறது.

கண்துடைப்பு என்கிறார் நிதின்கட்காரி: சென்னையில் நிருபர்களிடம் பேசிய நிதின்கட்காரி கூறுகையில்; தமிழக மீனவர்கள் நலனில் பா.ஜ., முழு அக்கறை வைத்துள்ளது. மத்திய அரசு இந்த விஷயத்தில் முன்கூட்டிய உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஆனால் தவறி விட்டனர். மத்திய அரசு தற்போது நிருபமாராவை இலங்கைக்கு அனுப்புவது ஒரு கண்துடைப்பு தான் என்றார். சமீபத்தில் கொல்லப்பட் வேதாரண்யம் மீனவர்கள் குடும்பத்தினரை பா.ஜ., நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார்கள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., அரசுகள் தமிழக மீனவர்களை காத்திட தவறி விட்டது. மீனவர்கள் நிலை குறித்து பார்லியில் குரல் எழுப்புவோம்'' இவ்வாறு கட்காரி கூறினார்

RamnaD

தமிழக மீனவர்களைக் காப்போம்

நண்பர்களே!

இணையத்தில் துளிர்த்திருக்கும் இச்சிறு உணர்வெழுச்சியை வளர்த்தெடுங்கள். எல்லா விதங்களிலும் தன் கொடூர முகத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாத கொடுங்கோன்மைக்கு எதிராக ஒரு சிறு எதிர்ப்பை இணையத்திலாவது பதிவியுங்கள். இதனால் என்ன பயன் என்றோ, தேவை, தேவையில்லை என்றோ யோசிக்காமல் தமிழக மீனவர்களுக்கான ஆதரவாய் உங்களின் குரல் இணையம் வழி எதிரொலிக்கட்டும்.

Dear Friends,

I have just read and signed the online petition:

"Save Tamilnadu Fishermen"

hosted on the web by PetitionOnline.com, the free online petition
service, at:


http://www.PetitionOnline.com/TNfisher/

I personally agree with what this petition says, and I think you might
agree, too. If you can spare a moment, please take a look, and consider
signing yourself.

Best wishes,

Jyovram Sundar

உங்களின் எதிர்ப்புக் குரலை மிக சப்தமாய் ட்விட்டரில் #tnfisherman என்கிற trend ல் பதியுங்கள். Join the riot friends!


ப‌திவ‌ர் : அய்ய‌னார்

Saturday, January 29, 2011

#tnfisherman: இதுதாண்டா இணையப் புரட்சி !




மீனவர் ஒருவர் கொல்லப்பட்ட சோகத்திலும் ட்விட்டரில் தமிழர்களின் குரலாக மீனவர்கள் படுகொலைக்கு எதிரான கண்டனங்கள் வினாடிக்கொருமுறை வந்து விழுந்து கொண்டே இருப்பது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. பலரும் வெறும் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்படுகின்ற இணையத்தை வைத்து எந்த ஒரு செயலையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர இயலும் என்பதற்கு அத்தாட்சிதான் மீனவர்களுக்கு ஆதரவாக ஒலிக்கும் இணையத்தில் ஒலிக்கும் குரல்கள். அதைத் தொடர்ந்து கொலையான மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு பணியினை வழங்கியிருப்பதும்.




கலையரசன் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் டுனீசியா புரட்சி பற்றி எழுதும் போது, முதன்முதலாக இணையத்தின் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சி என்றும், இணையத்தில் புரட்சி செய்கிறார்கள் என்று பரிகசிக்கும் கூட்டத்திற்கு இது சமர்ப்பணம் என்று எழுதினார். டுனீசியாவைத் தொடர்ந்து எகிப்திலும் இணையத்தின் மூலமாக பரவிய தீயில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழர்களின் இணையப்புரட்சி அந்தளவுக்கு இல்லையெனிலும் உள்ளாடை அணியாத நடிகைகள், பாலிவுட் நடிகர்களின் கலை நிகழ்ச்சிகள் இவைகளை வைத்தே மாவரைத்துக் கொண்டிருக்கும் வட இந்திய, ஆங்கில ஊடகங்ககளைத் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருப்பது சாதாரணமல்ல. புலிகள் இருந்த வரை எந்தக் கொடுமையை எதிர்த்துப் பேசினாலும் LLTTE bakers என்று ஒற்றைச் சொல்லில் தமிழர்களை முத்திரை குத்தி ஒதுக்கிய கூட்டம் இப்போது வேறு வழியில்லாமல் வாயைத் திறக்க வேண்டியிருக்கிறது.


தமக்காக மட்டுமின்றியும், மற்றவர்களின் சமூகப் பிரச்சனைகளுக்காகவும் தொண்டைத் தண்ணி வற்றிப்போகும் அளவிற்கு தெருவில் நின்று கத்துகிறவர்கள்தான் இணையத்தையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள், தமிழக மீனவர்க்கு ஆதரவான எழுச்சியைப் போலவே மற்ற பிரச்சனைக்கும் ஆதரவுகளை அதிகப்படுத்தவே "இணையப் புரட்சியையும்" செய்கிறார்கள் என்பதை கீபோர்ட் புரச்சீ என நக்கலடிப்பவர்கள் உணர்ந்து கொள்ளவும் இந்த மீனவர் படுகொலைக்கு எதிரான ஆதரவுக் குரல்கள் புரிய வைக்கின்றன. ஆயிரம் பேர் தெருவில் இறங்குவது மட்டுமல்ல இணையத்தில் குரல் கொடுப்பதும் தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை பொரச்சிதான்.


இணையத்தின் மூலமாக சமூகப் பிரச்னைகளை மாற்ற இயலாவிட்டாலும் கல்லுளி மங்கன்களான அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நிம்மதியாக இருக்க விடாது என்பதை ஓரளவிற்காவது நிறுவியிருக்கிறது. இணையத்தில் பரவும் தீ விரைவில் களத்திற்கும் பரவட்டும். கொடுமைக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் தமிழர்களின் குரலில் உள்ள வெஞ்சினம்தான் பலவிதமான அக்கிரமக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தில் தெரியும் நம்பிக்கையின் ஒளிக்கீற்று. இது ஒரு நல்ல தொடக்கம்.


சிங்கள இனவெறிக் காலிகள், சிங்கள இராணுவத்தைத் தூண்டி விடும் இந்திய போலி தேசியம், வேடிக்கை பார்க்கும் இந்திய கடற்படை, கருணாநிதி, மீனவர்கள் இனப்படுகொலையை தேர்தலுக்குப் பயன்படுத்தத் துடிக்கும் ஜெயா தொலைக்காட்சியில் ரபி பெர்நார்டுடன் சேர்ந்து ஜனநாயகம் பற்றி பேசும் தமிழினக் கேவலர்கள் ஆகியோர்க்கெதிரான என்னுடைய கடுமையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.




இதை இணையத்தில் போராட்டமாகத் தொடங்கியவர்களுக்கும் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் வலைப்பூக்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற மக்கள் ஊடகங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!!


http://www.savetnfisherman.org


http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671


http://twitter.com/#!/search?q=%23tnfisherman


http://savetnfisherman.blogspot.com


பதிவர்: தமிழ்வினை

கொந்தளிக்கும் கடல்... துடிக்கும் மீனவன் உடல்..!

கயிற்றை எடுத்து... கழுத்தில் நெரித்து..

டுக் கடலில் காலனாகக் காத்திருக்கும் சிங்கள ஓநாய்களைத் தட்டிக்கேட்க வழியே இல்லையோ?

நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்​தைச் சேர்ந்த ஜெயக்குமார், செந்தில், ராஜேந்திரன் என்ற மூவரும் கடந்த 22-ம் தேதி காலை மீன் பிடிக்கக் கிளம்பினார்கள். சேது சமுத்​திரத் திட்டப் பணிகள் நடந்த இடத்தின் அருகே மாலை 6 மணிக்கு வலை விரித்துக் காத்திருந்தனர். இரவு 11 மணிக்கு கறுப்பு நிறப் படகில் வந்தான் எமன். அதன் பிறகு நடந்த கொடூரத்தை, உயிர் பிழைத்து வந்த செந்தில் சொல்கிறார்.
''கிட்டத்தட்ட வலையை எடுத்துக்கிட்டுக் கிளம்ப இருந்த நேரம்... எங்களை நோக்கி வேகமா வந்துச்சு
##~##
இலங்கை நேவி படகு. அதுல 10 பேர் வரைக்கும் இருந்தாங்க. அவங்களைப் பார்த்ததும், 'நாங்க மீனவர்கள்தான்’ என்பதாக சைகை காட்டினோம். அதை கண்டுக்காத நேவிக்காரங்க, சிங்கள மொழியில் திட்டிக்கிட்டே, 'உடனே கடலில் குதிச்சு நீந்திக் கரைக்குப் போங்கடா நாய்களா’ன்னு சொல்லித் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி, 'சுட்டுருவோம்’னு பயமுறுத்தினாங்க. நானும், ராஜேந்திரனும் பயந்து கடல்ல குதிச்சுட்டோம். ஜெயக்குமார் அண்ணனுக்கு சுனாமி சமயத்துல கையில் அடிபட்டதால, அவரால் சரியா நீந்த முடியாது. அதை அவர் கெஞ்சியபடி சொல்லியும், அவங்க கேட்கலை. எங்க படகுக்குள் குதிச்ச ஒரு நேவிக்காரன், எங்க படகில் இருந்த கயிறை எடுத்து ஜெயக்குமாரின் கழுத்​தில் இறுகக் கட்டினான். மறு​முனையைத் தூக்கி அவங்க படகில் போட்டுட்டு, அவனும் போய் ஏறிக்கிட்டான். அப்படியே அவங்க படகைக் கிளப்பி, எங்க படகை சுத்தி வட்டமடிக்க... கழுத்துல கயிறு இறுக்கி... வலி தாங்க முடியாம கதறியபடியே படகில் இருந்து கடலில் விழுந்துட்டார். கொஞ்ச தூரம் அவரை அப்படியே கயிறு மூலமா இழுத்துட்டுப் போனவங்க, கயிறைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்​டாங்க. நீந்திட்டு இருந்த நாங்க வேகமாகப் போய்ப் பார்த்தப்ப, என் அண்ணன் உயிரோட இல்லை...'' என்று சொல்லிக்கதறினார்.
இறந்துபோன மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க, நாகப்பட்டினம் தொகுதி தி.மு.க. எம்.பி.
ஏ.கே.எஸ்.விஜயன், வேதாரண்யம் எம்.எல்.ஏ. வேதரத்தினம், நாகை டி.ஆர்.ஓ. ராஜேந்திரன் ஆகியோர் வந்தனர். ஊருக்குப் போனால் பிரச்னை ஆகும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட... வேதாரண்யம் மருத்துவமனை வளாகத்​திலேயே காசோலையை, ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம், அவர்கள் வாங்க மறுத்தும், வற்புறுத்திக் கொடுத்தனர்.
ஜெயக்குமாருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகின்றன. ஒன்றரை வயதில் பூமிகா, ஆறு மாதத்​தில் ஜனனி என்று இரண்டு பெண் குழந்தைகள். ''எங்க உசுருக்கு அஞ்சு லட்சம்னு விலை வெச்சிருக்கீங்களா? இப்படியே எங்க தாலிய அறுத்துக்கிட்டே போறானுங்களே... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? இப்படிப் பாதி​யில விட்டுட்டுப் போயிட்டாரே, இந்தப் பிஞ்சுங்களை நான் எப்படி வளர்ப்பேன், அப்பா எங்கன்னு கேட்டா நான் என்னன்னு சொல்லிச் சமாளிப்பேன்?'' என்று கைக்குழந்தை ஜனனியோடு தெருவில் உருண்டு புரண்ட முருகேஸ்வரிக்கு யாரிடமும் ஆறுதல் வார்த்தைகள் இல்லை.

புஷ்பவனம் கிராம மீனவர் தெரு நாட்​டார் பாலசுப்பிரமணியன், ''இதுவரை 534 மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றுள்ளது. எத்தனையோ முறை வழி தவறி நம் எல்லைக்குள் வந்த இலங்கை மீனவனுக்கு, சாப்பாடெல்லாம் கொடுத்து, திருப்பிப் பத்திரமாக அனுப்பிவைத்தோமே... நம் கடற்படையும் அவர்களைப் பத்திரமாகத்​தானே அனுப்பிவைக்கிறது. இதற்கெல்லாம் காட்டும் நன்றிக்கடன் இதுதானா?'' என்று கொந்தளித்தார்.

ஜெயக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க-வின் ஓ.எஸ்.மணியன், ''முதலில் பீரங்கியால் சுட்டான், அடுத்துத் துப்பாக்கியால் சுட்டான். பிறகு கட்டையால் அடித்துக் கொன்றான். இப்​போதோ கழுத்தில் கயிறு போட்டுக் கொல்​றான். மீனவன் செத்தால், பணத்தைத் தூக்கிக்​கொண்டு ஓடி வருகிறவர்கள், அவனைச் சாகாமல் காப்பாற்ற ஒரு நிரந்தர ஏற்பாட்டை செய்யாமல் இருப்பது ஏன்?'' என்றார் கோபமாக.

ஆனால் இந்த மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக கடலோரக் காவல்படை சொல்ல ஆரம்பித்திருக்கிறது.
மீனவக் குடும்பங்களில் வீதிக்கு ஒரு கைம்பெண்ணை உருவாக்கும் கயவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார்?

ஜூனியர் விகடன் 30-ஜனவரி-2011

கடலில் கலக்கும் ரத்தம்!

ரவுக் குளிரில் நடுங்கிய நாய் ஒன்று, 'காலையில எழுந்ததும் முதல் வேலையா... போத்திக்க ஒரு போர்வை வாங்கணும்’ என்று யோசிக்குமாம். விடிந்ததும் வெயில் அடிக்க, 'போர்வை எல்லாம் இனி எதுக்கு?’ என்று போய்விடுமாம். அன்றைய இரவும் குளிர் நடுக்கும். போர்வை வாங்க நினைக்கும். மீண்டும் வெயில் காயும். போர்வை வேண்டாம் என்று நினைக்கும். இதற்கும் இன்றைய நடப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதுதான் வேதனை!

 இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்புவார். அவர் இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவிப்பார். இந்தத் தகவல் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படும் என 'உருளைக்கிழங்கு’ விளையாட்டு அரை நூற்றாண்டாக நடக்கிறது.
முள்ளி வாய்க்கால் முற்றுகையின் மூலமாக ஈழத் தமிழினத்துக்கு முற்றுப்புள்ளிவைத்த மகிந்தா ராஜபக்ஷேவுக்கு 'மகா வீர’ என்ற பட்டத்தை சிங்கள இனவாதிகள், கொழும்பில் பல்வேறு கொண்டாட்டங்களுடன் வழங்கினார்கள். தமிழக மீனவனது சந்ததிக்கும் அதேபோன்று முற்றுப்புள்ளி வைத்து, 'மகா சூர’ என்ற பட்டத்தை மகிந்தா பெற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. கடந்த வாரத்தில் கடல் நடுவே மீன் பிடிக்கப் போனபோது, இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பாண்டியனது மரணம், தமிழ் நாட்டுக்கு இதைத்தான் சங்கு ஊதிச் சொல்கிறது!
கடலே நம் காவல்!
இந்தியாவைப் பாதுகாப்பான பூமி என்பார்கள். முப்புறமும் கடலும் தலைப் பகுதியில் மலையுமாக இயற்கையே நமக்கு நான்கு பக்கமும் அரணாக அமைந்தது. மற்ற மாநிலங்களுக்கு இல்லாத இந்த வளம் தமிழகத்துக்கு உண்டு. வடக்கிலும் மேற்கிலும் மட்டும்தான் ஆந்திராவும் கேரளாவும் உள்ளன. தெற்கே இந்தியப் பெருங்கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவுமாக தமிழகம் தண்ணீர் சூழ்ந்த மாநிலம். சென்னை, வேலூர், காஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவற்றை வடக்குக் கடற்கரை மாவட்டங்கள் என்றும்... சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியவற்றைத் தெற்குக் கடற்கரை மாவட்டங்கள் என்றும் சொல்வார்கள். 1,125 கி.மீ பரப்புள்ள கடற்கரை நமக்கு இருக்கிறது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையுமாக 10 லட்சம் மீனவர்கள்  வாழ்கிறார்கள். கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதை மட்டுமே தொழிலாகக்கொண்டவர்கள் இதில் கால்வாசிப் பேர். இந்தியாவின் கடல்சார் வளத்துக்குப் பெரும் பங்களிப்பைத் தமிழக மீனவர்கள் செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கிலான மதிப்புள்ள மீன்களை இவர்கள் பிடித்தாலும், அன்றாட சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும்  வாழ்க்கை. நாட்டுப் படகும், கட்டு மரங்களும் புழங்கிய கடலில், இன்று விசைப் படகுகளின் ராஜ்யம். கடலையே திருப்பிப் போடும் காற்று வீசினாலும் ஊரையே உருமாற்றும் புயல் வீசினாலும் கடல் பயணத்தை எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்தாதவர்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலே, இலங்கைக் கடற்படைதான்!

கடலில் ரத்தம் கலந்தது எப்போது?

இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு, வெட்டுக் குத்துக் கொலைகள் அதிகமாகிப்போன 70-களின் தொடக்கம்தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் தொல்லை தொடங்கியது. இலங்கை அரசுக்கு எதிராக அணி திரளும் தமிழ் இளைஞர்களுக்கு கடலுக்கு அப்பால் இருக்கிற தமிழ்நாடுதான் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற எண்ணம் அந்த நாட்டு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதுவரையில் ராமேஸ்வரம் மீனவர்கள், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வரைக்கும் மீன் பிடித்து நிம்மதியாகத் திரும்பி வந்த காலம் எல்லாம் உண்டு. இந்த சந்தேகம் வந்த பிறகு, இலங்கையை ஒட்டியுள்ள பகுதிக்கு வரும் அத்தனை மீனவர்களையும் தடுத்தார்கள். கைது செய்து சிலரைக் கொண்டுபோனார்கள். பின்னர் விடுவித்தார்கள். அங்கு போராட்டம் தீவிரம் அடைய... விடுதலைப் புலிகள் மீது காட்ட முடியாத கோபத்தை அப்பாவித் தமிழ் மீனவர்கள் மீது காட்டினார்கள். கைது செய்யும் சம்பிரதாயத்தை விலக்கி, கண்ணில் பட்டதும் சுட ஆரம்பித்தார்கள்.

''1983 முதல் 1991 வரை தமிழக மீனவர் மீது இலங்கைக் கடற்படையினர் 236 தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். 3,003 படகுகளைத் தாக்கினார்கள். 51 படகுகளை முற்றாக அழித்தனர். 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துபோனார்கள். 136 மீனவர்கள் காயம் அடைந்தனர்'' என்று ஓர் அறிவிப்பு 1991-ம் ஆண்டு வந்தது. இது முழுமையான புள்ளிவிவரம் இல்லை. அதற்குப் பிறகு எந்தக் கணக்கும் எடுக்கப்படவில்லை. ''கடந்த 30 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர்'' என்று ராமேஸ்வரம் மீனவர்கள் சொல்கிறார்கள்!

என்ன காரணம் சொல்வார்கள்?

ஒரு காலத்தில் 'கடத்தல்காரர்கள்’ என்று சொல்லித் தாக்கினார்கள். புலிகளுக்கு தமிழக மீனவர்கள்தான் உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றைக் கடத்திக்கொண்டு போய்த் தருகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்கினார்கள். அதன் பிறகு தமிழர்களை, 'கள்ளத் தோணிகள்’ என்றார்கள். போராளி இயக்கங்கள் வலுவடைந்த பிறகு, 'புலிகள்’ என்றார்கள். 2001-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை. மகிந்தா ராஜபக்ஷே அதிபராக ஆன பிறகு, புலிகள் மீதான தாக்குதல் கடுமையாக்கப்பட்ட பிறகு, தமிழக மீனவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மீனவர்களைக் கொல்வதும், அடித்து விரட்டுவதும், தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுப் பயமுறுத்துவதும் அதிகமாகின. ''தமிழக மீனவர்கள் நம்முடைய எல்லையைத் தாண்டிப் போவதால்தான் இலங்கைக் கடற்படை சுடுகிறது'' என்று இலங்கை அரசு சொன்ன காரணத்தையே, நம்முடைய மத்திய அரசாங்கமும் ஆமோதித்தது.
இந்தியக் கடல் எல்லைக்குள், பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மீனவர்கள் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இந்திய அரசாங்கம் அவர்களைக் கைது செய்கிறது. அந்த நாட்டுக்குத் தகவல் தருகிறது. அதன் பிறகு நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்கிறது. இந்த மனோபாவம் இலங்கை அரசுக்கு ஏன் வரவில்லை? அதை இந்திய அரசாங்கத்தால் ஏன் தட்டிக்கேட்க முடியவில்லை. சிங்களக் கடற்படை தமிழ் மீனவர்களைத் தாக்கும்போது, இந்தியக் கடற்படைக்கு அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு வேண்டாமா? மீனவர்களின் கேள்விகளுக்கு இதுவரை அரசாங்கம் பதில் சொல்லவே இல்லை. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் வந்து ஒரு முஸ்லிம் சுட்டால், 'இந்தியாவுக்கு ஆபத்து’ என்று பூதாகாரமாக்குபவர்கள், ராமேஸ்வரத்துக்குள் வந்து 600 பேரைச் சுட்ட பிறகும், அமைதியாக இருப்பது சகிக்கவே முடியாதது!
கச்சத் தீவு வந்தால் அழுகை நிற்கும்!
ராமேஸ்வரத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கும் அழகான தீவு கச்சத் தீவு. கச்சம் என்றால் ஆமை என்று அர்த்தமாம். ஆமைகள் அதிகம் உள்ள இடம் என்பதால், இப்படி ஒரு பெயர் வந்ததாம். ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலம் காலமாக மீன் பிடித்து வந்த பகுதி அது. சேதுபதி மன்னனுக்குச் சொந்தமான எட்டுத் தீவுகளில் இதுவும் ஒன்று. பிரிட்டிஷார் ஆட்சியின்போது அவர்களது எல்லைக்கு உட்பட்ட அரசு புறம்போக்காகச் சொல்லப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, கச்சத் தீவு எங்களுக்குத்தான் சொந்தம் என்றார்கள். ஆனால், அதற்கு முந்தைய 300 ஆண்டு கால இலங்கை வரைபடத்தில் கச்சத் தீவைச் சேர்த்தது இல்லை. இலங்கையின் இந்தக் கோரிக்கை சாத்தியமானது அல்ல என்று அன்றைய பிரதமர் நேரு மறுத்தார். ஆனால், காலப் போக்கில் இலங்கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்க்கும் மனநிலைக்கு பிரதமர் இந்திரா வந்தார். அமெரிக்காவை, இலங்கை அரசாங்கம் அதிகமாக நம்புகிறது, அமெரிக்காவின் காலடி இலங்கையில் பதியாமல் தடுக்க, இலங்கைக்கு ஏதாவது கைமாற்றாகக் கொடுக்கலாம் என்று நினைத்து இந்திரா, கச்சத் தீவை 1974-ம் ஆண்டு தூக்கிக் கொடுத்தார்.

அதுவரை நிம்மதியாகப் போய் மீன் பிடித்து வந்த மீனவர்களைத் தைரியமாக அடிக்க ஆரம்பித்த சிங்களக் கடற்படை, இன்று வரை நிறுத்தவில்லை. அந்த ஒப்பந்தத்தில்கூட இந்திய மீனவர்கள் கச்சத் தீவு வரை வந்து இளைப்பாறவும், தங்களது வலைகளைக் காயவைக்கவும் உரிமை உண்டு என்றும், அங்குள்ள அந்தோணியார் கோயில் விழாவுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் வந்து வணங்கிச் செல்லவும் தடை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ராஜீவ் போட்ட ஒப்பந்தமும் இந்த ஷரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால், மீனவர்களை அந்தப் பக்கம் நெருங்க முடியாத அளவுக்கு அடிக்கிறார்கள் என்றால், தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்துக்குத்தான் இருக்கிறது.

'கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா. 2007-ம் ஆண்டு ஒரு மீனவர் கொல்லப்பட்டபோது, 'கச்சத் தீவை மீட்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது’ என்று சொன்னவர் கருணாநிதி. இவர்கள் இருவரும் சொன்னதைச் செய்தால் மட்டும்தான், கடலோரத்தில் ரத்தக் கசிவு நிற்கும்!
மீனவர்கள் என்ன செய்யலாம்?

''எங்களுக்குக் கடல் எல்லை தெரியவில்லை. அதனால்தான், தாண்டிவிடுகிறோம். கரைக்கு அருகே மீன் வளம் குறைந்ததால்தான் உள்ளே தூரமாகச் செல்ல நேர்கிறது'' என்று யதார்த்தமான காரணத்தைச் சொல்கிறார்கள் மீனவர்கள். இந்தக் காரணத்தை பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே ஒருமுறை ஒப்புக்கொண்டார். ''இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது முறையற்றதுதான். ஆனாலும், கடலுக்குப் புறப்படும் எந்த மீனவனும் மீன் வளம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் போவார்கள். எனவே, இந்திய, இலங்கை எல்லைக்கோட்டைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத் தடுக்க முடியுமா? அப்படி அவர்கள் சென்றால், அவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள், இந்திய மீனவர்களைக் கொல்லாதீர்கள் என்று இலங்கை அரசிடம் சொல்லியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை அரசும் உறுதி அளித்துள்ளது'' என்று சொன்னவர் எம்.கே.நாராயணன்.

அதையும் மீறித்தான் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதைத் தடுப்பதற்கான வழிமுறையை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வர் கருணாநிதியே சொன்னார், ''இது தொடர்ந்தால், எங்கள் மீனவர் கை, மீனை மட்டுமே பிடித்துக்கொண்டு இருக்காது!''

ஆனால், அது அவருக்கே இப்போது நினைவில் இருக்குமோ, என்னவோ?

ஆனந்த விகடன் 26-ஜனவரி-2011

த்தூ!

த்தூ! வெட்கமாயில்லை சாகும் மீனவனை வெச்சி அரசியல் செய்கிறோமே என்று. நேற்று முதல்வர் புள்ளி விவரம் சொல்கிறா அ.தி.மு.க ஆட்சியில் 38 மீனவர்கள் செத்தார்கள் அப்ப எல்லாம் ஏன் நேரில் போய் ஆறுதல் சொல்லவில்லை? என் அரசு மீனவன் செத்த அன்றே 5 லட்ச ரூபாய் கொடுத்தது, அக்கன்வாடியில் அவர் மனைவிக்கு வேலைக்கான லெட்டரும் அன்றே கொடுக்கப்பட்டதை சாதனையா ஒரு முதல்வர் சொல்கிறார். த்தூ வெட்கமாயில்லை இப்படி செத்தவனுங்களை வெச்சி அரசியல் செய்ய.

ஒருமாசத்துக்கு முன்னாடி சீனாவின் மீன்பிடி படகு ஜப்பானின் ரோந்து படகில் மோதிட்டுன்னு ஜப்பான் காரன் சீன மீனவனை அரெஸ்ட் செஞ்சி கூட்டிட்டு போயிட்டான். சீனா என்னா செஞ்சிது? லெட்டரோ தந்தியோ அடிக்காம...மறுநாள் நடைபெற இருந்த சீனா- ஜப்பான் உயர்மட்ட பிரதிநிதிகளின் மீட்டிங்கை ரத்து செய்துவிட்டு, நாளைக்குள் மீனவன் விடுவிக்கப்படனும், இல்லை என்றால் நடப்பதே வேறுன்னு மிரட்டல் கொடுத்துச்சு. ஜப்பான் வேற வழியே இல்லாம மன்னிப்பு கேட்டு அந்த மீனவரையும் படகையும் ரிலீஸ் செஞ்சிது. அதில் பாதி சூடு சொரனையாவது வேண்டாம்?

மீனவன் சாகிறான் என்ற கவலையை விட தேர்தல் நேரத்தில் சாகிறானே என்ற கவலை முதல்வருக்கும், இன்னொரு மீனவன் சாகமாட்டானா என்ற கவலை எதிர்கட்சி தலைவருக்கும் இருக்கும். இவிங்கதான் நமக்கு தலைவரு?

த்தூ வெட்கமாக இருக்கிறது எனக்கு. இதுமாதிரி தலைவர்கள் இருக்கிறார்களே என்று.


பதிவர்:  குசும்பன்

மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman

மீனவர் படுகொலைக்களுக்கு எதிராக ட்விட்டரில் நடைபெறும் இயக்கத்தின் ஆதரவு தளம் http://www.savetnfisherman.org/
இதுவரை இலங்கை கடற்படையால் ஐநூற்றுக்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாளும் இல்லாத திருநாளாக ஜெயலலிதா ஓடோடிப் போய் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொடுத்ததோடு, கொல்லப்பட்ட மீனவர் குழந்தைகளின் படிப்புச் செலவை அதிமுக ஏற்கும் என்று அறிவித்த கையோடு, வருகிற தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை வைக்கிறார்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதியோ “1991-96-ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். 2001-2011 வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்.” என்று வழக்கமான பாணியில் பழியை புள்ளிவிவரங்களின் மீது போட்டு விட்டு லாவணி பாடுகிறார்.
மேலும் வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் மறைந்த செய்தி கேள்வியுற்றதும், அவரது உடல் அடக்கம் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் தந்து மீனவர்களின் கோபத்தை தணிப்பதற்கு சாணக்கியத்தனமாக முயன்றார். மட்டுமல்லாது, அவரது மனைவி முருகேஸ்வரிக்கு சத்துணவு உதவி அமைப்பாளர் பதவிக்கான பணி நியமன உத்தரவும் தந்து தன்னை கருணை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஆகவே மீனவ மக்களிடம் ஓட்டு கேட்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு என்று ஆபாச அரசியல் செய்கிறார் கருணாநிதி.
இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் வருகிற சனிக்கிழமை(29.1.2011) இலங்கை செல்கிறாராம். அவர் மீனவர் கொலைகள் குறித்து ராஜபட்சேவிடம் பேசுவாராம். ஆமாம் நாமும் நம்புவோம், பிரணாப் முகர்ஜியும், சிவசங்கரமேனனும் இலங்கை சென்று வந்த பின்னர் தமிழ் மக்கள் அங்கே கொல்லப்படாமல் பாதுகாக்கப்பட்டது மாதிரி நிருபமாவின் பயணத்தின் பின்னர் இராமேஸ்வரம் மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.
இதோ 6-ஆம் தேதி வைகோ உண்ணாவிரதம் அறிவித்து விட்டார், சரத்குமார் போராடக் கிளம்பிவிட்டார். இனி போராட்டங்கள் ஒரு சடங்கைப் போல நடத்தப்படும். கருணாநிதிக்கு எதிரான ஒரு தேர்தல் அஸ்திரமாக மீனவர் விவாகாரம் மாற்றப்படுவதை எதிர்கொள்ள கருணாநிதியும் ஒரு அரை மணி நேர உண்ணாவிரத்தை துவங்கினாலும் துவங்கி விடுவார் போலிருக்கிறது. அதன் முன்னோட்டமாக மீனவ சமூகத்திலிருந்து பொது உடமை இயக்கத்திற்கு வந்த சிங்காரவேலரின் 151 நினைவு நாளை அரசு விழாவாகாக் கொண்டாடுவோம் என்று அறிவித்ததோடு. மீனவர்களுக்காக தான் நிறைவேற்றிய திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் கருணாநிதி.
தேர்தல், ஓட்டு, என்று வந்து விட்டாலே கொலை செய்யப்பட்ட மீனவர் பிணங்களுக்கு உயிர் வந்து விடுகிறது. தேவைப்படும் போது மீனவனைப் பிணமாக்கவும், பிணமாக்கிய மீனவனுக்கு உயிர்கொடுக்கும் விதத்தையையும் கற்று வைத்திருக்கிறார்கள் கருணாவும் ஜெயலலிதாவும். தேர்தல் வாக்குச் சீட்டுகளை நம்பி பிழைப்பை ஓட்டும் அரசியல்வாதிகள் இதன்றி வேறு என்ன நினைப்பார்கள்?
ஜே என்றால் “இப்போது நான் எதிர்கட்சி ஆகவே இப்போது எத்தனை பேரை வேண்டுமென்றாலும் சுடு. அது எனக்கு ஆதாயமாக முடியும். நான் ஆட்சிக்கு வந்தவுடன் சுடாதே.” கருணாநிதியோ “இப்போது வேண்டாம், ஏனென்றால் நானும் ஆளும் கட்சி, நாளை அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் சுட்டுத் தள்ளு”. இதுதான் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மீனவர் பிணங்கள்மீது நடத்தும் விளையாட்டு.
இந்த அரசியல்வாதிகளின் மோசடி நாடகங்களில் இருந்தோ இந்தியா போன்ற விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட அரசிடம் இருந்தோ தமிழ் தேசியவாதிகள் எந்த பாடங்களையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமீபத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகனைச் சந்தித்த வைகோ “சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்தி இந்தியாவைத் தாக்கும். ஆகவே இந்திய அரசு ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
பெரும்பலான இலக்கியவாதிகள், தமிழ் தேசியவாதிகள், திராவிட இயக்க ஆர்வலர்களின் கருத்துமே இப்படித்தான் அடிமுட்டாள்தனமாக இருக்கிறது. இவர்கள் அரசு ஒடுக்குமுறையை, கட்சி ஒடுக்குமுறையாக சித்தரிப்பதன் மூலம் “இந்தியா நல்ல நாடுதான், அதை ஆள்வோர்கள்தான் சரியில்லை”, என்கிறார்கள். காங்கிரசை ஒழித்துக் கட்டுவோம் என்ற கோஷமும் இதிலிருந்தே பிறக்கிறது. உண்மையில் ஒழிக்கப்பட வேண்டியது இந்திய அரசும் அதைத் தாங்கி நிற்கும் தரகு முதலாளி வர்க்கமுமே. அந்த பெருமுதலாளி வர்க்கங்களின் நலனை முன்னெடுப்பவர்கள்தான் காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைவருமே.
விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட ஒரு அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் இவர்கள் அரசு என்னும் ஆக்ரமிப்பு இயந்திரத்தை எதிர்க்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டே அதை லாவகமாக கட்சி சார்ந்து திருப்பி தேர்தல் ஆதாயமாக மாற்ற நினைக்கிறார்கள். ஈழப்படுகொலைகள், விவசாயிகள் தற்கொலை, வறுமை, வேலையிழப்பு, மீனவர் படுகொலை என எல்லா மக்கள் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த அரசு-ஆளும் வர்க்கங்களின் கட்டுமானம்தான் காரண்ம். அதுவல்லாமல் காங்கிரஸ் போய் பிஜேபி வந்தவுடன் “நாம் கனவு காணும் ஈழம் அமைந்து விடும்” என நினைப்பது எவளவு அபத்தம். அல்லது “பிஜேபி வந்தாலும் ஈழம் அமையாது என்பது எங்களுக்குத் தெரியும் ஆனாலும் ஆதரிக்கிறோம்” என்றால் அது எவளவு அயோக்கியத் தனம்.
தற்போது டிவிட்டரில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு பா.ஜ.க கட்சியும் ஆதரவு தெரிவித்திருக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்ல? இவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது இந்த பா.ஜ.க கட்சி என்ன செய்தது?
இலங்கை தனது உள்நாட்டுப் போரை முடித்து விட்டு இராமேஸ்வரம் போரைத் துவங்கியிருக்கிறது. இந்தக் கொலைகளை இந்தியா ஊக்கப்படுத்துமே தவிர தட்டிக் கேட்காது என்பது இலங்கை அரசுக்குத் தெரியும். தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்பதும் இலங்கைக்குத் தெரியும். ஆக இக்கொலைகளை நியாயப்படுத்த தொடர்ந்து இலங்கை ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது. அது எல்லை தாண்டுதல். இந்த வார்த்தையை இலங்கை மட்டும் சொல்லவில்லை. இந்தியாவும் சொல்கிறது.
சென்ற ஆண்டு மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்ட போது நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள்
எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளிவிகாரத்துறை அமைச்சர், “இலங்கை கடல் பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.
அதேசமயம் “சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது .” என்றும் திமிராகப் பதிலளித்தார் எஸ்.எம் கிருஷ்ணா.
மராட்டியம், குஜராத், போன்ற மாநிலங்களில் உள்ள மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் கடலுக்குள் சென்றால் பாகிஸ்தான் சுட்டுக் கொல்லாமல் பத்திரமாக அவர்களை திருப்பி அனுப்புகிறது. அரபு நாடுகளில் எல்லை தாண்டுதல் என்பது மிக சாதாரணமான விஷயம். காற்றின் போக்கு, கடல் நீரோட்டம், இரவு, இயற்க்கைச் சீற்றம், என ஒரு மீனவன் எல்லை தாண்ட எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன.
இதுவல்லாமல் சர்வதேச கடல் எல்லையை வகுத்துள்ளவர்கள். இது சர்வதேச கடல் எல்லை என்று அடையாளக் குறிகளையோ, ஒளிரும் மிதவைகளையோ கடலில் மிதக்க விடுவதில்லை. அதிலும் இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் இந்தியா இன்று வரை தனது தெற்கு எல்லையை மர்மமான முறையிலேயே வைத்துள்ளது.
2008- இல் இலங்கை அரசோடு இந்தியா செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் கீழ் கடல் எல்லை குறித்த அம்சங்களும் உண்டு. இரு நாடுகளுக்குமிடையில் இன்று வரை மன்னார் வளைகுடா கடல் எல்லை தொடர்பான தீர்க்கமான முடிவுகள் இல்லை.
2009 ஜனவரியில் தங்கள் நாட்டு கடல் எல்லை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய தினேஸ் குணவர்த்தன “சிறிலங்காவின் வடகடல் வலயத்தில் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் எமது நாட்டுக்கு சொந்தமானதாகும். இதில் பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 16 கடல் மைலும், காங்கேசன்துறையிலிருந்து கிழக்காக 15 கடல் மைலும், திருகோணமலையிலிருந்து கிழக்காக 122 கடல் மைலும் முல்லைத்தீவிலிருந்து கிழக்காக 28 கடல் மைலும் உள்ளடங்குகின்றது. இவ்வடிப்படையில் இக்கடல் வலயத்தை இலங்கைக் கடற்படையினர் பாதுகாத்து வருகின்றனர். அத்துமீறி இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இந்திய மீனவர்களின் 66 படகுகள் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.”
தினேஸ் குணரத்னாவின் இந்தக் கருத்தின்படி இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் கூட இறங்க முடியாது. கட்டுமரத்தை கடலில் செலுத்தி பாய்மரத்தை மடக்கி மீன் பிடிக்க துவங்க வேண்டும் என்றால் கூட ஆழிக்கடலுக்கு அப்பால் சென்றாக வேண்டும் என்ற நிலையில் தினேஸ் சொல்லும் எல்லைக் கோடு நமது அலைவாய்க்கரை வரை வந்து விடுகிறது.
கடற்கரை மேலாண்மைச் சட்டம்
மீனவர் கொலை என்னும் கொடூரத்தை வெறும் இலங்கை அரசின் இனவாத நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியாது. பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலும் நமது பாரம்பரிய கடற்கரையை கடற்கரை மேலாண்மைச் சட்டம் என்னும் நில அபகரிப்புச் சட்டத்தின் மூலம் கடலோரங்களையும் கடலையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஏக போக பன்னாட்டுச் சுரண்டலின் ஒரு அங்கமாகவும் பார்க்க வேண்டும்.
இலங்கைக்கு ஒரு நோக்கமும் இந்தியாவுக்கு ஒரு நோக்கமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நோக்கமும் இருக்க முடியாது. ஒரே நோக்கம்தான் கடல், நிலம், மீன் வளம் யாவும் எங்களுக்கே உரியது என்பதுதான் அவர்களின் நோக்கம்.
அந்த நோக்கத்தின் இடையூறாக மீனவன் இருப்பதும், இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான வலதுகரமாக இந்த மக்கள் விளங்கினார்கள் என்பதுமே இக்கொலைகளுக்குக் காரணம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தேர்தல் அமைப்பாலோ, ஓட்டுச் சீட்டுக்கட்சிகளாலோ இனி இந்த மக்களைக் காப்பாற்ற முடியாது.
பன்னாட்டு நிறுவனங்களையும், இந்நாட்டு முதலாளிகளையும் இவர்களை தாங்கிப்பிடிக்கும் அரசு, அரசியல் கட்சிகளையும் எதிர்த்து இந்திய மக்கள் நடத்தும் விடுதலைப் போரே மீனவர்களது படுகொலையையும் தடுத்து நிறுத்தும். அத்தகைய அரசியல் எழுச்சியை எழுப்புவதற்கு நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இந்த மீனவர் படுகொலைக்கு செய்யப்படும் அஞ்சலியாக இருக்கும்.

பதிவர்:  வினவு

தமிழக மீனவர்கள் தொடர் படுகொலை: இலங்கை தூதரகம் சி.பி.எம் முற்றுகை !


இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்து வருகிறது. கடந் தாண்டு மட்டும் 20 மீனவர் கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். அவ்வப் போது மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பிடுங்கிக் கொள்வதோடு, படகுகளையும், வலைகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். கடந்த 15 தினங்களில் இரண்டு தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களையும், மீனவர்கள் படுகொலைச் செய்யப்படுவதையும் தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று, இலங்கத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை விட்டு மீனவர்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர் படுகொலையை மத்திய அரசு வேடிக்கை பார்க்காதே, மீனவர் படு கொலையை தடுக்க ராஜீய ரீதியான நடவடிக்கை எடு, இலங்கை அரசு சர்வதேச சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை கட்சி ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஏந்தி வந்தனர்.

“பிழைப்புத்தேடி கட லுக்குச் சென்றால், பிணமாக திரும்புவதை தடுத்து நிறுத்து”, “வாய்ச்சவடாலை ஓரங்கட்டி மீனவர்கள் உயிரை பாதுகாத்திடு”, “ மத்திய, மாநில அரசுகளே, மீனவர் வாழ்வுரிமையை பறிக்காதே” என்பன போன்ற கோஷங்கள் போராட்டத்தில் எழுப்பப் பட்டன.

இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்:

“தமிழக மீனவர்கள் கட லில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 400க்கும் மேற்பட்டோரை இலங்கை ராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர். கடந்த 22ம் தேதி ஜெயக்குமார் என்ற ஊனமுற்ற மீனவரை, கயிற்றால் கட்டி கடலில் தள்ளி இலங்கை ராணுவம் படுகொலை செய்துள்ளது. தமிழக மீனவர் களின் வாழ்வுரிமையான மீன்பிடியை தடுக்கும் வகையில் இத்தகைய படுகொலைகளை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

இந்தப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக மக்கள் ஏகோபித்தமான முறையில் குரல் எழுப்பிய பிறகும், படுகொலை தொடர்கிறது. ஜெயக்குமார் படுகொலைக்கு பிறகு மத்திய அரசு, இலங்கை அரசை கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு அறிக்கையோடு நிறுத்திக்கொள்ளாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்..

கடல் எல்லையில், இந் திய கடற்படையும், இலங் கை கடற்படையும் இணைந்து கூட்டு ரோந்து நடத்துவதன் மூலமே இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல், மீனவர்கள் படுகொலைகளை தடுக்க முடியும். இலங்கை அரசு, இனி படுகொலைகள், துப்பாக்கிச்சூடு நடக்காது என்று தான் கூறியுள்ளது. அப்படியெனில் இதற்கு முன்பு நடந்த அனைத்து தாக்குதலுக்கும், அத்துமீறல்களுக்கும், படுகொலைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போது மத்திய, மாநில அரசுகள் தலையிடாமல், தடுக்காமல் உள்ளன. மக்கள் பாதிக்கப்படும் போது அரசியல் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதையும், ஆறுதல் கூறச் செல்வதையும் திசை திருப்பக் கூடாது.”

கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ், வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம், மாநிலக்குழு உறுப் பினர்கள் எஸ்.கே.மகேந்தி ரன் எம்எல்ஏ, ஏ.ஆறுமுக நயினார், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பா.கருணாநிதி ஆகியோர் முன்செல்ல தூதரகத்தை முற்றுகையிட சென்ற கட்சி ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 
ப‌திவ‌ர்: மாற்று