Saturday, January 29, 2011

#tnfisherman: இதுதாண்டா இணையப் புரட்சி !
மீனவர் ஒருவர் கொல்லப்பட்ட சோகத்திலும் ட்விட்டரில் தமிழர்களின் குரலாக மீனவர்கள் படுகொலைக்கு எதிரான கண்டனங்கள் வினாடிக்கொருமுறை வந்து விழுந்து கொண்டே இருப்பது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. பலரும் வெறும் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்படுகின்ற இணையத்தை வைத்து எந்த ஒரு செயலையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர இயலும் என்பதற்கு அத்தாட்சிதான் மீனவர்களுக்கு ஆதரவாக ஒலிக்கும் இணையத்தில் ஒலிக்கும் குரல்கள். அதைத் தொடர்ந்து கொலையான மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு பணியினை வழங்கியிருப்பதும்.
கலையரசன் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் டுனீசியா புரட்சி பற்றி எழுதும் போது, முதன்முதலாக இணையத்தின் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சி என்றும், இணையத்தில் புரட்சி செய்கிறார்கள் என்று பரிகசிக்கும் கூட்டத்திற்கு இது சமர்ப்பணம் என்று எழுதினார். டுனீசியாவைத் தொடர்ந்து எகிப்திலும் இணையத்தின் மூலமாக பரவிய தீயில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழர்களின் இணையப்புரட்சி அந்தளவுக்கு இல்லையெனிலும் உள்ளாடை அணியாத நடிகைகள், பாலிவுட் நடிகர்களின் கலை நிகழ்ச்சிகள் இவைகளை வைத்தே மாவரைத்துக் கொண்டிருக்கும் வட இந்திய, ஆங்கில ஊடகங்ககளைத் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருப்பது சாதாரணமல்ல. புலிகள் இருந்த வரை எந்தக் கொடுமையை எதிர்த்துப் பேசினாலும் LLTTE bakers என்று ஒற்றைச் சொல்லில் தமிழர்களை முத்திரை குத்தி ஒதுக்கிய கூட்டம் இப்போது வேறு வழியில்லாமல் வாயைத் திறக்க வேண்டியிருக்கிறது.


தமக்காக மட்டுமின்றியும், மற்றவர்களின் சமூகப் பிரச்சனைகளுக்காகவும் தொண்டைத் தண்ணி வற்றிப்போகும் அளவிற்கு தெருவில் நின்று கத்துகிறவர்கள்தான் இணையத்தையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள், தமிழக மீனவர்க்கு ஆதரவான எழுச்சியைப் போலவே மற்ற பிரச்சனைக்கும் ஆதரவுகளை அதிகப்படுத்தவே "இணையப் புரட்சியையும்" செய்கிறார்கள் என்பதை கீபோர்ட் புரச்சீ என நக்கலடிப்பவர்கள் உணர்ந்து கொள்ளவும் இந்த மீனவர் படுகொலைக்கு எதிரான ஆதரவுக் குரல்கள் புரிய வைக்கின்றன. ஆயிரம் பேர் தெருவில் இறங்குவது மட்டுமல்ல இணையத்தில் குரல் கொடுப்பதும் தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை பொரச்சிதான்.


இணையத்தின் மூலமாக சமூகப் பிரச்னைகளை மாற்ற இயலாவிட்டாலும் கல்லுளி மங்கன்களான அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நிம்மதியாக இருக்க விடாது என்பதை ஓரளவிற்காவது நிறுவியிருக்கிறது. இணையத்தில் பரவும் தீ விரைவில் களத்திற்கும் பரவட்டும். கொடுமைக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் தமிழர்களின் குரலில் உள்ள வெஞ்சினம்தான் பலவிதமான அக்கிரமக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தில் தெரியும் நம்பிக்கையின் ஒளிக்கீற்று. இது ஒரு நல்ல தொடக்கம்.


சிங்கள இனவெறிக் காலிகள், சிங்கள இராணுவத்தைத் தூண்டி விடும் இந்திய போலி தேசியம், வேடிக்கை பார்க்கும் இந்திய கடற்படை, கருணாநிதி, மீனவர்கள் இனப்படுகொலையை தேர்தலுக்குப் பயன்படுத்தத் துடிக்கும் ஜெயா தொலைக்காட்சியில் ரபி பெர்நார்டுடன் சேர்ந்து ஜனநாயகம் பற்றி பேசும் தமிழினக் கேவலர்கள் ஆகியோர்க்கெதிரான என்னுடைய கடுமையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
இதை இணையத்தில் போராட்டமாகத் தொடங்கியவர்களுக்கும் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் வலைப்பூக்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற மக்கள் ஊடகங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!!


http://www.savetnfisherman.org


http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671


http://twitter.com/#!/search?q=%23tnfisherman


http://savetnfisherman.blogspot.com


பதிவர்: தமிழ்வினை

No comments:

Post a Comment