Saturday, January 29, 2011

மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman

மீனவர் படுகொலைக்களுக்கு எதிராக ட்விட்டரில் நடைபெறும் இயக்கத்தின் ஆதரவு தளம் http://www.savetnfisherman.org/
இதுவரை இலங்கை கடற்படையால் ஐநூற்றுக்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாளும் இல்லாத திருநாளாக ஜெயலலிதா ஓடோடிப் போய் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொடுத்ததோடு, கொல்லப்பட்ட மீனவர் குழந்தைகளின் படிப்புச் செலவை அதிமுக ஏற்கும் என்று அறிவித்த கையோடு, வருகிற தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை வைக்கிறார்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதியோ “1991-96-ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். 2001-2011 வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்.” என்று வழக்கமான பாணியில் பழியை புள்ளிவிவரங்களின் மீது போட்டு விட்டு லாவணி பாடுகிறார்.
மேலும் வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் மறைந்த செய்தி கேள்வியுற்றதும், அவரது உடல் அடக்கம் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் தந்து மீனவர்களின் கோபத்தை தணிப்பதற்கு சாணக்கியத்தனமாக முயன்றார். மட்டுமல்லாது, அவரது மனைவி முருகேஸ்வரிக்கு சத்துணவு உதவி அமைப்பாளர் பதவிக்கான பணி நியமன உத்தரவும் தந்து தன்னை கருணை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஆகவே மீனவ மக்களிடம் ஓட்டு கேட்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு என்று ஆபாச அரசியல் செய்கிறார் கருணாநிதி.
இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் வருகிற சனிக்கிழமை(29.1.2011) இலங்கை செல்கிறாராம். அவர் மீனவர் கொலைகள் குறித்து ராஜபட்சேவிடம் பேசுவாராம். ஆமாம் நாமும் நம்புவோம், பிரணாப் முகர்ஜியும், சிவசங்கரமேனனும் இலங்கை சென்று வந்த பின்னர் தமிழ் மக்கள் அங்கே கொல்லப்படாமல் பாதுகாக்கப்பட்டது மாதிரி நிருபமாவின் பயணத்தின் பின்னர் இராமேஸ்வரம் மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.
இதோ 6-ஆம் தேதி வைகோ உண்ணாவிரதம் அறிவித்து விட்டார், சரத்குமார் போராடக் கிளம்பிவிட்டார். இனி போராட்டங்கள் ஒரு சடங்கைப் போல நடத்தப்படும். கருணாநிதிக்கு எதிரான ஒரு தேர்தல் அஸ்திரமாக மீனவர் விவாகாரம் மாற்றப்படுவதை எதிர்கொள்ள கருணாநிதியும் ஒரு அரை மணி நேர உண்ணாவிரத்தை துவங்கினாலும் துவங்கி விடுவார் போலிருக்கிறது. அதன் முன்னோட்டமாக மீனவ சமூகத்திலிருந்து பொது உடமை இயக்கத்திற்கு வந்த சிங்காரவேலரின் 151 நினைவு நாளை அரசு விழாவாகாக் கொண்டாடுவோம் என்று அறிவித்ததோடு. மீனவர்களுக்காக தான் நிறைவேற்றிய திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் கருணாநிதி.
தேர்தல், ஓட்டு, என்று வந்து விட்டாலே கொலை செய்யப்பட்ட மீனவர் பிணங்களுக்கு உயிர் வந்து விடுகிறது. தேவைப்படும் போது மீனவனைப் பிணமாக்கவும், பிணமாக்கிய மீனவனுக்கு உயிர்கொடுக்கும் விதத்தையையும் கற்று வைத்திருக்கிறார்கள் கருணாவும் ஜெயலலிதாவும். தேர்தல் வாக்குச் சீட்டுகளை நம்பி பிழைப்பை ஓட்டும் அரசியல்வாதிகள் இதன்றி வேறு என்ன நினைப்பார்கள்?
ஜே என்றால் “இப்போது நான் எதிர்கட்சி ஆகவே இப்போது எத்தனை பேரை வேண்டுமென்றாலும் சுடு. அது எனக்கு ஆதாயமாக முடியும். நான் ஆட்சிக்கு வந்தவுடன் சுடாதே.” கருணாநிதியோ “இப்போது வேண்டாம், ஏனென்றால் நானும் ஆளும் கட்சி, நாளை அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் சுட்டுத் தள்ளு”. இதுதான் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மீனவர் பிணங்கள்மீது நடத்தும் விளையாட்டு.
இந்த அரசியல்வாதிகளின் மோசடி நாடகங்களில் இருந்தோ இந்தியா போன்ற விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட அரசிடம் இருந்தோ தமிழ் தேசியவாதிகள் எந்த பாடங்களையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமீபத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகனைச் சந்தித்த வைகோ “சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்தி இந்தியாவைத் தாக்கும். ஆகவே இந்திய அரசு ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
பெரும்பலான இலக்கியவாதிகள், தமிழ் தேசியவாதிகள், திராவிட இயக்க ஆர்வலர்களின் கருத்துமே இப்படித்தான் அடிமுட்டாள்தனமாக இருக்கிறது. இவர்கள் அரசு ஒடுக்குமுறையை, கட்சி ஒடுக்குமுறையாக சித்தரிப்பதன் மூலம் “இந்தியா நல்ல நாடுதான், அதை ஆள்வோர்கள்தான் சரியில்லை”, என்கிறார்கள். காங்கிரசை ஒழித்துக் கட்டுவோம் என்ற கோஷமும் இதிலிருந்தே பிறக்கிறது. உண்மையில் ஒழிக்கப்பட வேண்டியது இந்திய அரசும் அதைத் தாங்கி நிற்கும் தரகு முதலாளி வர்க்கமுமே. அந்த பெருமுதலாளி வர்க்கங்களின் நலனை முன்னெடுப்பவர்கள்தான் காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைவருமே.
விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட ஒரு அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் இவர்கள் அரசு என்னும் ஆக்ரமிப்பு இயந்திரத்தை எதிர்க்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டே அதை லாவகமாக கட்சி சார்ந்து திருப்பி தேர்தல் ஆதாயமாக மாற்ற நினைக்கிறார்கள். ஈழப்படுகொலைகள், விவசாயிகள் தற்கொலை, வறுமை, வேலையிழப்பு, மீனவர் படுகொலை என எல்லா மக்கள் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த அரசு-ஆளும் வர்க்கங்களின் கட்டுமானம்தான் காரண்ம். அதுவல்லாமல் காங்கிரஸ் போய் பிஜேபி வந்தவுடன் “நாம் கனவு காணும் ஈழம் அமைந்து விடும்” என நினைப்பது எவளவு அபத்தம். அல்லது “பிஜேபி வந்தாலும் ஈழம் அமையாது என்பது எங்களுக்குத் தெரியும் ஆனாலும் ஆதரிக்கிறோம்” என்றால் அது எவளவு அயோக்கியத் தனம்.
தற்போது டிவிட்டரில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு பா.ஜ.க கட்சியும் ஆதரவு தெரிவித்திருக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்ல? இவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது இந்த பா.ஜ.க கட்சி என்ன செய்தது?
இலங்கை தனது உள்நாட்டுப் போரை முடித்து விட்டு இராமேஸ்வரம் போரைத் துவங்கியிருக்கிறது. இந்தக் கொலைகளை இந்தியா ஊக்கப்படுத்துமே தவிர தட்டிக் கேட்காது என்பது இலங்கை அரசுக்குத் தெரியும். தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்பதும் இலங்கைக்குத் தெரியும். ஆக இக்கொலைகளை நியாயப்படுத்த தொடர்ந்து இலங்கை ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது. அது எல்லை தாண்டுதல். இந்த வார்த்தையை இலங்கை மட்டும் சொல்லவில்லை. இந்தியாவும் சொல்கிறது.
சென்ற ஆண்டு மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்ட போது நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள்
எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளிவிகாரத்துறை அமைச்சர், “இலங்கை கடல் பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.
அதேசமயம் “சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது .” என்றும் திமிராகப் பதிலளித்தார் எஸ்.எம் கிருஷ்ணா.
மராட்டியம், குஜராத், போன்ற மாநிலங்களில் உள்ள மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் கடலுக்குள் சென்றால் பாகிஸ்தான் சுட்டுக் கொல்லாமல் பத்திரமாக அவர்களை திருப்பி அனுப்புகிறது. அரபு நாடுகளில் எல்லை தாண்டுதல் என்பது மிக சாதாரணமான விஷயம். காற்றின் போக்கு, கடல் நீரோட்டம், இரவு, இயற்க்கைச் சீற்றம், என ஒரு மீனவன் எல்லை தாண்ட எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன.
இதுவல்லாமல் சர்வதேச கடல் எல்லையை வகுத்துள்ளவர்கள். இது சர்வதேச கடல் எல்லை என்று அடையாளக் குறிகளையோ, ஒளிரும் மிதவைகளையோ கடலில் மிதக்க விடுவதில்லை. அதிலும் இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் இந்தியா இன்று வரை தனது தெற்கு எல்லையை மர்மமான முறையிலேயே வைத்துள்ளது.
2008- இல் இலங்கை அரசோடு இந்தியா செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் கீழ் கடல் எல்லை குறித்த அம்சங்களும் உண்டு. இரு நாடுகளுக்குமிடையில் இன்று வரை மன்னார் வளைகுடா கடல் எல்லை தொடர்பான தீர்க்கமான முடிவுகள் இல்லை.
2009 ஜனவரியில் தங்கள் நாட்டு கடல் எல்லை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய தினேஸ் குணவர்த்தன “சிறிலங்காவின் வடகடல் வலயத்தில் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் எமது நாட்டுக்கு சொந்தமானதாகும். இதில் பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 16 கடல் மைலும், காங்கேசன்துறையிலிருந்து கிழக்காக 15 கடல் மைலும், திருகோணமலையிலிருந்து கிழக்காக 122 கடல் மைலும் முல்லைத்தீவிலிருந்து கிழக்காக 28 கடல் மைலும் உள்ளடங்குகின்றது. இவ்வடிப்படையில் இக்கடல் வலயத்தை இலங்கைக் கடற்படையினர் பாதுகாத்து வருகின்றனர். அத்துமீறி இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இந்திய மீனவர்களின் 66 படகுகள் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.”
தினேஸ் குணரத்னாவின் இந்தக் கருத்தின்படி இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் கூட இறங்க முடியாது. கட்டுமரத்தை கடலில் செலுத்தி பாய்மரத்தை மடக்கி மீன் பிடிக்க துவங்க வேண்டும் என்றால் கூட ஆழிக்கடலுக்கு அப்பால் சென்றாக வேண்டும் என்ற நிலையில் தினேஸ் சொல்லும் எல்லைக் கோடு நமது அலைவாய்க்கரை வரை வந்து விடுகிறது.
கடற்கரை மேலாண்மைச் சட்டம்
மீனவர் கொலை என்னும் கொடூரத்தை வெறும் இலங்கை அரசின் இனவாத நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியாது. பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலும் நமது பாரம்பரிய கடற்கரையை கடற்கரை மேலாண்மைச் சட்டம் என்னும் நில அபகரிப்புச் சட்டத்தின் மூலம் கடலோரங்களையும் கடலையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஏக போக பன்னாட்டுச் சுரண்டலின் ஒரு அங்கமாகவும் பார்க்க வேண்டும்.
இலங்கைக்கு ஒரு நோக்கமும் இந்தியாவுக்கு ஒரு நோக்கமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நோக்கமும் இருக்க முடியாது. ஒரே நோக்கம்தான் கடல், நிலம், மீன் வளம் யாவும் எங்களுக்கே உரியது என்பதுதான் அவர்களின் நோக்கம்.
அந்த நோக்கத்தின் இடையூறாக மீனவன் இருப்பதும், இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான வலதுகரமாக இந்த மக்கள் விளங்கினார்கள் என்பதுமே இக்கொலைகளுக்குக் காரணம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தேர்தல் அமைப்பாலோ, ஓட்டுச் சீட்டுக்கட்சிகளாலோ இனி இந்த மக்களைக் காப்பாற்ற முடியாது.
பன்னாட்டு நிறுவனங்களையும், இந்நாட்டு முதலாளிகளையும் இவர்களை தாங்கிப்பிடிக்கும் அரசு, அரசியல் கட்சிகளையும் எதிர்த்து இந்திய மக்கள் நடத்தும் விடுதலைப் போரே மீனவர்களது படுகொலையையும் தடுத்து நிறுத்தும். அத்தகைய அரசியல் எழுச்சியை எழுப்புவதற்கு நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இந்த மீனவர் படுகொலைக்கு செய்யப்படும் அஞ்சலியாக இருக்கும்.

பதிவர்:  வினவு

No comments:

Post a Comment