Saturday, January 29, 2011

கொந்தளிக்கும் கடல்... துடிக்கும் மீனவன் உடல்..!

கயிற்றை எடுத்து... கழுத்தில் நெரித்து..

டுக் கடலில் காலனாகக் காத்திருக்கும் சிங்கள ஓநாய்களைத் தட்டிக்கேட்க வழியே இல்லையோ?

நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்​தைச் சேர்ந்த ஜெயக்குமார், செந்தில், ராஜேந்திரன் என்ற மூவரும் கடந்த 22-ம் தேதி காலை மீன் பிடிக்கக் கிளம்பினார்கள். சேது சமுத்​திரத் திட்டப் பணிகள் நடந்த இடத்தின் அருகே மாலை 6 மணிக்கு வலை விரித்துக் காத்திருந்தனர். இரவு 11 மணிக்கு கறுப்பு நிறப் படகில் வந்தான் எமன். அதன் பிறகு நடந்த கொடூரத்தை, உயிர் பிழைத்து வந்த செந்தில் சொல்கிறார்.
''கிட்டத்தட்ட வலையை எடுத்துக்கிட்டுக் கிளம்ப இருந்த நேரம்... எங்களை நோக்கி வேகமா வந்துச்சு
##~##
இலங்கை நேவி படகு. அதுல 10 பேர் வரைக்கும் இருந்தாங்க. அவங்களைப் பார்த்ததும், 'நாங்க மீனவர்கள்தான்’ என்பதாக சைகை காட்டினோம். அதை கண்டுக்காத நேவிக்காரங்க, சிங்கள மொழியில் திட்டிக்கிட்டே, 'உடனே கடலில் குதிச்சு நீந்திக் கரைக்குப் போங்கடா நாய்களா’ன்னு சொல்லித் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி, 'சுட்டுருவோம்’னு பயமுறுத்தினாங்க. நானும், ராஜேந்திரனும் பயந்து கடல்ல குதிச்சுட்டோம். ஜெயக்குமார் அண்ணனுக்கு சுனாமி சமயத்துல கையில் அடிபட்டதால, அவரால் சரியா நீந்த முடியாது. அதை அவர் கெஞ்சியபடி சொல்லியும், அவங்க கேட்கலை. எங்க படகுக்குள் குதிச்ச ஒரு நேவிக்காரன், எங்க படகில் இருந்த கயிறை எடுத்து ஜெயக்குமாரின் கழுத்​தில் இறுகக் கட்டினான். மறு​முனையைத் தூக்கி அவங்க படகில் போட்டுட்டு, அவனும் போய் ஏறிக்கிட்டான். அப்படியே அவங்க படகைக் கிளப்பி, எங்க படகை சுத்தி வட்டமடிக்க... கழுத்துல கயிறு இறுக்கி... வலி தாங்க முடியாம கதறியபடியே படகில் இருந்து கடலில் விழுந்துட்டார். கொஞ்ச தூரம் அவரை அப்படியே கயிறு மூலமா இழுத்துட்டுப் போனவங்க, கயிறைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்​டாங்க. நீந்திட்டு இருந்த நாங்க வேகமாகப் போய்ப் பார்த்தப்ப, என் அண்ணன் உயிரோட இல்லை...'' என்று சொல்லிக்கதறினார்.
இறந்துபோன மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க, நாகப்பட்டினம் தொகுதி தி.மு.க. எம்.பி.
ஏ.கே.எஸ்.விஜயன், வேதாரண்யம் எம்.எல்.ஏ. வேதரத்தினம், நாகை டி.ஆர்.ஓ. ராஜேந்திரன் ஆகியோர் வந்தனர். ஊருக்குப் போனால் பிரச்னை ஆகும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட... வேதாரண்யம் மருத்துவமனை வளாகத்​திலேயே காசோலையை, ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம், அவர்கள் வாங்க மறுத்தும், வற்புறுத்திக் கொடுத்தனர்.
ஜெயக்குமாருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகின்றன. ஒன்றரை வயதில் பூமிகா, ஆறு மாதத்​தில் ஜனனி என்று இரண்டு பெண் குழந்தைகள். ''எங்க உசுருக்கு அஞ்சு லட்சம்னு விலை வெச்சிருக்கீங்களா? இப்படியே எங்க தாலிய அறுத்துக்கிட்டே போறானுங்களே... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? இப்படிப் பாதி​யில விட்டுட்டுப் போயிட்டாரே, இந்தப் பிஞ்சுங்களை நான் எப்படி வளர்ப்பேன், அப்பா எங்கன்னு கேட்டா நான் என்னன்னு சொல்லிச் சமாளிப்பேன்?'' என்று கைக்குழந்தை ஜனனியோடு தெருவில் உருண்டு புரண்ட முருகேஸ்வரிக்கு யாரிடமும் ஆறுதல் வார்த்தைகள் இல்லை.

புஷ்பவனம் கிராம மீனவர் தெரு நாட்​டார் பாலசுப்பிரமணியன், ''இதுவரை 534 மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றுள்ளது. எத்தனையோ முறை வழி தவறி நம் எல்லைக்குள் வந்த இலங்கை மீனவனுக்கு, சாப்பாடெல்லாம் கொடுத்து, திருப்பிப் பத்திரமாக அனுப்பிவைத்தோமே... நம் கடற்படையும் அவர்களைப் பத்திரமாகத்​தானே அனுப்பிவைக்கிறது. இதற்கெல்லாம் காட்டும் நன்றிக்கடன் இதுதானா?'' என்று கொந்தளித்தார்.

ஜெயக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க-வின் ஓ.எஸ்.மணியன், ''முதலில் பீரங்கியால் சுட்டான், அடுத்துத் துப்பாக்கியால் சுட்டான். பிறகு கட்டையால் அடித்துக் கொன்றான். இப்​போதோ கழுத்தில் கயிறு போட்டுக் கொல்​றான். மீனவன் செத்தால், பணத்தைத் தூக்கிக்​கொண்டு ஓடி வருகிறவர்கள், அவனைச் சாகாமல் காப்பாற்ற ஒரு நிரந்தர ஏற்பாட்டை செய்யாமல் இருப்பது ஏன்?'' என்றார் கோபமாக.

ஆனால் இந்த மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக கடலோரக் காவல்படை சொல்ல ஆரம்பித்திருக்கிறது.
மீனவக் குடும்பங்களில் வீதிக்கு ஒரு கைம்பெண்ணை உருவாக்கும் கயவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார்?

ஜூனியர் விகடன் 30-ஜனவரி-2011

No comments:

Post a Comment