Saturday, January 29, 2011

கிரிக்கெட் உலகக்கோப்பையை புறக்கணிப்போம் !!!

எனக்கு மிகவும் விருப்பமான கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சச்சின், ட்ராவிட்,கங்குலி. சச்சின் க்ரீஸை விட்டு இறங்கி அடிக்கு சிக்ஸரும், காலுக்கு வரும் யார்க்கரை அப்படியே போர் ஆக இழுக்கும் ட்ராவிடும், ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை கவரில் விளாசும் கங்குலியும் ஆடிய காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம்.

இந்தியா தோற்றால் அப்செட் ஆகிவிடுவது, ஜெயித்தால் ஏதோ நானே களத்தில் இறங்கி ஆடியது போலவும் சந்தோஷப்பட்ட காலம் ஒன்று உண்டு.

ஆனால் இன்றைக்கு எனக்கு 'இந்திய' என்ற வார்த்தை சற்றே அன்னியமாக படுகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபிறகும், இனிமே சுடமாட்டோம் என்று புளுகும் இந்த அறிவு ஜீவிகள், இதுவரை ஒரு பேச்சுக்கு கூட இது தவறு, இந்த செயலுக்காக வருந்துகிறோம் என்று சொல்லவில்லை.

மத்திய மாநில அரசுகள் வெறும் நிவாரணம், செத்தவன் பொண்டாட்டிக்கு அங்கன்வாடியில் ஆயா வேலை (ஏன் தேர்தல்ல நிக்க வெச்சு ராணுவ மந்திரியாக்குங்களேன் ? ) இங்கிருந்து அங்கே வெளியுறவு செயலாளரை சுற்றுலா அனுப்புவது போன்ற காரியங்களில் இறங்கிவிட்டார்கள்.

இதெல்லாம் வெறும் கண் துடைப்பு என்று விவரம் அறிந்தவர்களுக்கும், ஏன் விவரம் அறியாதவர்களுக்கும் தெரியும். ஈழ விவகாரத்தில் மக்கள் செத்து மடிந்தபோது மேற்கு வங்க பிரணாப் முகர்ஜியும், மலையாள மேனனும் அங்கே சென்று பிரச்சனையை 'சுமூகமாக' முடித்த்து தெரியாதா ? (அனைவரும் செத்து மடிந்தது தான் சுமூகம்.)

ஒரு மலையாளியோ, ஒரு மராட்டியோ, ஒரு பிகாரியோ அண்டை நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டால், இப்படித்தான் ஊடகங்கள் கள்ள மவுனம் காக்குமா ? ஜெஸ்டிஸ் பார் ஜெஸ்ஸிக்கா, ஜெஸ்டிஸ் பார் ஆரூஷி. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டினவே ? இப்போது அறுந்த 537 ஆவது தாலியை கட்டிக்கொண்டிருந்தவளுக்கு ஜஸ்டிஸ் தேவையில்லையா ? அங்கன்வாடி ஆயா வேலை மட்டும் போதுமா ?

இந்தியாவின் எதிரி நாடு என்று சொல்லப்படுவது பாக்கிஸ்தான். நிலையான அரசு கிடையாது அங்கே. அவ்வப்போது ராணுவ ஆட்சி. அந்த நாடு கூட இந்திய மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் நுழைந்தால் சுடுவதில்லை. கைது தான் செய்கிறது. சமீபத்தில் வாகா எல்லையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் திரும்பி வந்தனர். ஆனால் இலங்கை கொலைவெறி ராணுவத்துக்கோ, மீனவர்களின் படகுகளை கண்டால் துப்பாக்கியை முழக்கத்தான் தெரியும்.



மத்திய மாநில அரசின் ஆட்சியாளர்களுக்கு தமிழன் சாவதை பற்றி கவலை இல்லை என்பதை தெளிவாக அறிந்துகொண்டபிறகு, நாம், மக்கள், நமது எதிர்ப்பை எல்லா வகையிலும் பதிவு செய்தால் மட்டுமே, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி இந்த பிரச்சினையை நகர்த்த முடியும்.

அப்படி செயல்பட்டால் மட்டுமே, ஜனநாயக முறையில், அகிம்சை வழியில், மத்திய மாநில அரசுகளின் தற்போதைய 'கண்டும்காணா' கொள்கைகளில் சரியான மாற்றம் கொண்டுவரமுடியும்...

நமது எதிர்ப்பை பதிவு செய்ய கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு ஒன்று இருக்கிறது. அது,  வரப்போகும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பது.

சென்னையில் போட்டி நடந்தால், முழு சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு ஆள் கூட இருக்கக்கூடாது.  தமிழன் என்ற உணர்வு தலை தூக்கவேண்டும். கிரிக்கெட் போட்டிக்கான கட்டணத்தை காசு கொடுத்து வாங்கக்கூடாது.

கிரிக்கெட் போட்டிகளை டிவியிலும் பார்க்கக்கூடாது. கிரிக்கெட் தொடர்பாக இணைய போரம்களில் விவாதிக்ககூடாது. கிரிக்கெட் தொடர்பாக வலைப்பதிவுகள், ட்விட்டர் பதிவுகள், பேஸ்புக் அப்டேட்டுகள் என்று எதுவும் கூடாது.

மற்ற மாநிலங்களில் நடக்கும் போட்டிகளில் தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பேனர்களை ஹிந்தியில், தெலுங்கில், சீன மொழியில், சிங்களத்தில், தமிழில், தெலுங்கில் எழுதி உயர பிடிக்கவேண்டும். துண்டு பிரசுரங்களை அடித்து கொடுக்கவேண்டும்.

தமிழன் தனியனாக இந்தி'யக்கடலில் ரத்தம் சிந்தியதை ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்த்து இணையத்தில் பரப்பவேண்டும்.

தமிழக அரசை, ஸ்டாலினை, ஜெயலலிதாவை, சீமானை, வைகோவை, திருமாவை, ராமதாஸை, பெஸ்ட் ராமசாமியை, சோ ராமசாமியை, சுப்ரமணிய சாமியை, இந்து ராமை, எஸ் வி சேகரை எல்லாரையும் இந்த கிரிக்கெட் புறக்கணிப்பை ஆதரிக்கச்சொல்லி கேட்போம்.

ரத்த வெறி பிடித்த சிங்களன் நேற்று ஈழத்தமிழனை அழித்தான். இன்று மீனவனை. நாளை நம் வீட்டு வாசலில் வந்து நிற்பான். நான் எனக்காக கேட்கவில்லை. உங்களுக்காகவும், உங்கள் உறவுகளுக்காகவும் கேட்கிறேன். இந்த பரப்புரைகளை, மறுதலிப்புகளை செய்யுங்கள். இந்த பதிவில் கொடுத்துள்ள படத்தை உங்கள் வலைப்பதிவுகளில், இணைய தளங்களில் சேருங்கள். இந்த பதிவை காப்பி செய்து உங்களுக்கு தெரிந்த தமிழர்களுக்கு எல்லாம் மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை உங்கள் வலைப்பதிவில் பதிவாக பதிவு செய்யுங்கள். இணைந்திருங்கள். இனம் காப்போம்.

சுட்டி : கிரிக்கெட் உலகக்கோப்பையை புறக்கணிப்போம் !!!

பதிவர்:  செந்தழல் ரவி

No comments:

Post a Comment