Saturday, January 29, 2011

இணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்

மீனவர்கள் யாரிவர்கள்? எங்கோ நாலு அறைக்குள் பட்டன்கள் தட்டும் நம்மால் என்ன செய்யமுடியும்?

இணையத்தின் ஒன்று விட்ட பெரியப்பா மகன்களான ஊடகங்கள் தற்போது இணையத்தில் ஒன்றிவிட்டது தெரியுமா? ஊடகங்கள் அச்சப்பட்டு எடுத்துவைக்காத சொச்ச செய்திகளை மக்கள் மிச்சமில்லாமல் படிப்பது இணையத்தில்தான். மாற்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில் மாற்றமில்லாமல் ஊடகமாக இரண்டாண்டுகளுக்கு முன்பே இணையம் தன்னை பிரகடனப்படுத்திவிட்டது. தீர விசாரிக்க வேண்டாதளவு கண்ணால் பார்த்துவிட்டீர்கள், காதால் கேட்டும் விட்டீர்கள் இனி தீர்வு எழுதிவிடுங்கள். உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் முன்வையுங்கள். ஏற்கனவே மாபெரும் கூட்டம் இணையத்தில் டிவிட்டரை விலைக்கு வாங்காத குறையாக கத்தத் தொடங்கிவிட்டது, அதன் எதிரொலிகள் வலைப்பூக்களிலும் உங்கள் எண்ணப்பூக்களிலும் மலரத்தொடங்கிவிட்டது; செவி கொடுத்த ஊடகங்களும் இப்போது செப்பத் தொடங்கிவிட்டது. இந்தக் கதறல்கள் மென்னணு புள்ளிகளாக சர்வரில் வீற்றிருந்தாலும் சாகாத வரமுடன் சந்ததியினருக்கு ஏதோவொன்றை விழிப்பூட்டிக் கொண்டுதான் உள்ளது. சரி எந்தெந்த வழிகளில் ரோடுபோடலாம்? இதோ சில புள்ளிகள் தொடரலாம்...

டிவிட்டர்:
டிவிட்டரில் ஹாஷ் குறியுடன் tnfisherman என்ற குறிச்சொல்லுடன் உங்கள் ஆதரவை மீனவருக்குத் தாருங்கள். அப்படியே சில டிவிட்டுகளைப் படித்து பிறருடன் பகிருங்கள். http://twitter.com/#!/search/%23tnfisherman இதுவரை வந்துள்ள டிவிட்டுகளை இங்கே பார்க்கலாம்.

http://www.savetnfisherman.org/
துரித நேரத்தில் தயாரான துடுக்கான இணையத்தில் உங்கள் பங்களிப்பை வழங்கலாம். உங்கள் எண்ணங்களும், இதற்கான தீர்வுகளும், காரண காரியங்களையும் அரசியல் பார்வையும் கொண்டு கொடுக்கலாம்.
http://www.facebook.com/savetnfisherman http://twitter.com/savetnfisherman கரம் சேரலாம்

மின்னஞ்சல் சங்கிலி:
பிடித்த விஷயங்கள், பிடித்த கருத்துகள் பிடித்த கேலி சித்திரங்கள் என கட்டி தவறவிட்ட இணையவாசிகளுக்கு வழங்கலாம். தவறான அணுகுமுறைகளை களைய அற்புதமான ஐடியாகளை சொல்லலாம். கீழுள்ள படிவத்தையும் மின்னஞ்சலில் சுற்றிவிடலாம்

பெட்டிஷன்:
இந்த துயரை இந்தியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இணைய படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை படித்து நீங்களும் கையெழுத்துயிடலாம். http://www.petitiononline.com/TNfisher/petition.html கூடுதலான கோரிக்கைவைக்க விரும்பினாலும் அங்கே கருத்துரையில் தெரிவிக்கலாம். முன்னுரிமை தரப்படும். தற்போதைய குறைந்த பட்ச இலக்கு 1000 கையெழுத்து[போலி கையெழுத்துக்கள் கணக்கில் நிற்கா] இதுவரை வந்துள்ளது. இந்த படிவத்தை முக்கிய செய்தி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்துங்கள்!

வலை பதிவர்கள்:
இதுதொடர்பான கருத்தாக்கங்கள் எழுதத்தொடங்கிவிட்டதால், தொடருங்கள்.டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலை தளத்தில் இணைக்க விரும்பினால் [இப்பக்கத்தின் வலதுபுறம் போல] Dashboard -> design ->page template ->add a gadget -> HTML/Java script என்ற கட்ஜெட்டில் கீழுள்ள கோடுகளைப் போட்டு சேமிக்கலாம். அதுபோக மேற்கண்ட விஷயங்களையும் சொல்லலாம்.வாசகர்கள்:
http://164.100.47.132/LssNew/members/membershomepage.aspx
மக்களவை உறுப்பினர்கள் விவரம்
http://164.100.47.5/Newmembers/memberlist.aspx
மாநிலங்களவை உறுப்பினர் விபரம்
அப்பெயர்களை சொடிக்கி ஒவ்வொருவரின் மின்னஞ்சல் முகவரிகளைப் பெறலாம். யாருக்கு எப்படி அனுப்பினால் மீனவர்கள் அப்படி பாதிக்கப்படமாட்டர்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு முறைப்படி அனுப்பிவிடுங்கள் ஒரு மின்னஞ்சலை

இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்.

மேலும் தகவல்கள் கிடைத்தாலோ நீங்கள் கொடுத்தாலோ பிற்சேர்க்கை கொள்ளப்படும்.

ஆமாம் மீனவர்கள் யாரிவர்கள்?....

பதிவர் - நீச்சல்காரன்

No comments:

Post a Comment