Saturday, January 29, 2011

மீனவர் பிரச்சனை: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஒரு கடிதம்.

வணக்கம் அமைச்சரே

உங்களுக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு அலுவல்களில் இதை படிக்க நேரம் இருக்குமான்னு தெரியலை. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் எழுதுகிறேன்.

பொதுவாக தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே தேர்தலில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏன் இப்போதெல்லாம் கட்சி தலைவர்களை தவிர்த்து தொண்டர்கள் (இருந்தால்!)கூட அலட்டிக்கொள்வதில்லை. யார் ஜெயித்தாலும் கஷ்டம் மாறப்போவதில்லை என்பது அனைவருக்குமே தெரியும்.

அதுக்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் வெற்றி. அதில் ஏற்பட்ட சர்ச்சையை பற்றி மக்கள் யாரும் வாயை திறக்கவில்லை. ஏனெனில் உங்களை எதிர்த்து நின்றவர் ஜெயித்திருந்தாலும் எங்களுக்கு ஒன்றும் நடக்கபோவதில்லை. நிற்க.

இதுபோலவே நீங்கள் செய்யும் ஊழல்களையும் நாங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஜூ.வியிலும், ரிப்போட்டரிலும் வரும் கட்டுரைகளை மாய்ந்து மாய்ந்து படிப்போம். அது ஒரு விறுவிறுப்புக்காக மட்டுமே. ஏனெனில் ஊழல் செய்யும் அரசாங்கமே ஊழலை விசாரிப்பதால் என்ன தண்டனை கொடுக்கும் என்பது எங்களுக்கும் தெரியும்.

இது போலவே ஈழத்தமிழர் பிரச்சனையிலும் அமைதியாக இருப்போம் என நினைத்தீர்கள். ஆனால் தமிழகத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டவுடன் ஜல்ஜாப்புக்காக சில நடவடிக்கைகளை எடுத்தீர்கள் அல்லது எடுப்பது மாதிரி நடித்தீர்கள்.

தமிழர்கள் அனைவரும் சுரணை கெட்டவர்கள் என எங்களை நாங்களே திட்டிக்கொள்வோம். ஆனால் உண்மையிலேயே எங்களுக்கெல்லாம் சுரணை அதிகமாகவே இருக்கிறது. அதை ஒருங்கிணைத்து வழி நடத்த ஒரு சுரணையுள்ள அதிகாரமிக்க தலைவன் இதுவரை கிடைக்கவில்லை. அதுதான் நாங்கள் பிரிந்து சோர்ந்து கிடப்பதற்கு காரணம்.

இதுபோலத்தான் மீனவர் பிரச்சனையில் புலம்பிக்கொண்டிருந்தோம். உண்மைச்சொல்ல போனால் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருந்தோம். நேற்றுதான் கையில் உள்ள வெண்ணெய்யை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம்.

ஆம் இன்று இணைத்தின் மூலமாக தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் இப்பிரச்சினையை எடுத்து சென்றுகொண்டிருக்கிறார்கள் தமிழ் சகோதரர்கள்.

இந்திய அரசியலமைப்பின் நான்காவது தூண் ஆட்டம் கண்ட நிலையில் அதற்கு முட்டு கொடுக்க ஐந்தாவது தூணாக எழுந்து நிற்கிறது இணைய வழி எழுத்து புரட்சி. இன்று ட்விட்டரிலும் , பேஸ்புக்கிலும் நிரம்பி வழிகிறது போராட்ட குரல்கள்.

எங்களுக்கு பதில்சொல்லவில்லை என்றாலும் சர்வதேச சமூகம் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என அறியக் காத்திருக்கிறோம்.

உங்களைச்சொல்லியும் குற்றமில்லை என்னதான் உள்துறை அமைச்சராக இருந்தாலும் நீங்களும் கட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கும் கடை நிலை ஊழியன் தானே. உங்களால் வேறு என்னசெய்துவிடமுடியும். ஒன்றைத்தவிர!

நீங்கள் ஒரு அமைச்சராக இல்லாமல் ஒரு தமிழனாக, தமிழர்கள் குரல் கொடுக்கும் ட்விட்டர் தளத்தில் எங்களுக்காக #tnfisherman என்ற டாக்கில் ஒரு ட்விட் செய்து குரல் கொடுங்கள் அது போதும்.

மீனவர் படுகொலைக்கு எதிராக ட்விட்டரில் தொடங்கியிருக்கும் இயக்கத்தின் ஆதரவு தளம் http://www.savetnfisherman.org/

ப‌திவ‌ர்: சிநேகித‌ன் அக்ப‌ர்


No comments:

Post a Comment