Sunday, January 30, 2011

மீனவர்களுக்காக ஒரு கையெழுத்து

January 29, 2011மீனவர்களுக்காக ஒரு கையெழுத்து
”பீடி சிகரெட் சுருட்டு ஒண்ணும் கூடாதுமா... பாட்டில் கீட்டில் பாத்தேன் உடனே பாக்-அப் பண்ணிருவேன். ஈவ்னிங் எட்டரைக்கு மெஸ்ஸுக்கு போயிரு. ஒம்பதே காலுக்கு ஆல்-லைட்ஸ் அவுட். பாரக் (barrack) விட்டு வெளிலப் போவக் கூடாது யாரும்.”

வாட்சைக் காட்டி பேசிக் கொண்டிருந்த ஏழுமலையை இடைமறித்து மோகன் பிள்ளை,

“லைட்-அவுட் பின்னால குவார்ட்டர் கார்ட் (Quarther Guard) வாசல்ல யார் போனாலும் ஷூட்டிங் பண்ணிரும். கபர்தார்” என்றுக் கொச்சைத் தமிழில் சொன்னார்.

கல்லூரிக் காலத்தில், செகந்திராபாத் AOCல் ஆர்மியோடு இணைந்த NCC காம்ப் போயிருந்த போது கேட்ட முத்ல் நாள் அறிவுரைகள். குவார்ட்டர் கார்ட் என்பது ஒரு ஆர்மி காம்பின் அதி சென்ஸிடிவ்வான ஆயுதக்கிடங்கு.

மொத்தம் 12 நாள் காம்ப்பில் பத்தாவது நாள் ஞாயிற்றுகிழமை ஊர் சுற்றிப் பாருங்கள் என்று அனுமதி கொடுத்திருந்தார்கள். காக்கி சட்டைகளை கழட்டிப் போட்டுவிட்டு ஆந்திர தட்ப்வெப்பத்திற்கு ஏற்ற பளீர் கலர் பனியன்களைப் போட்டுக் கொண்டு அடாசு அலுமினிய பஸ்களில் ஏறி அண்டை நகரமான ஹைதராபாத்திற்கு சந்தோஷமாகப் போனோம். ஹுசைன் சாகர் ஏரி, பிர்லா மந்திர், சாலர்ஜங் மியூசியம், கோல்கொண்டா கோட்டை என்று சுற்றிப் பார்த்துவிட்டு பிர்லா சயினஸ் மியூசியம் வரும்போதே ஏழு மணி ஆகிவிட்டது. அவசரகதியில் சுற்றிப் பார்த்துவிட்டு வாயேஜர் சுற்றுலாவையெல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு அதே அடாசு வண்டிகளில் AOC திரும்பும்போது ஸ்டாப்பிங் தவறவிட்டுவிட்டோம். அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வியர்க்க விறுவிறுக்க கேம்பிற்கு மீளும்போது மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது.

குவார்ட்டர் கார்ட வாசலோடு போனால் முட்டிப் போட்டு ரைஃபிளால் குறிபார்த்து முழங்காலோடு சுட்டுவிடுவார்கள் என்று பீதியில் மாற்றுவழியில் போகலாம் என்றால் ஒரு சிக்கல். குவார்ட்டர் கார்ட் எந்த திசையில் இருக்கிறது என்றுத் தெரியவில்லை. குமரேசன் தெற்கே கைகாட்டினால் சர்தார் சிங் (கோயம்புத்தூர்காரன்) வடக்கே கைகாட்டுகிறான். நாகர்கோவில் வசந்தன் கண்ணெல்லாம் நீர் திரள உயிரோடு பேரக்கிற்கு மீண்டால் வேளங்கண்ணி போய் மொட்டைப் போட்டுக் கொள்ள வேண்டிக் கொள்கிறான். சட்டைப் பையில் குலுங்கும் நாணயங்களையும் கூடவே குதிக்கும் இதயத்தையும் ஒருசேரக் கையால் பிடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடினேன். காதை தீய்த்துக் கொண்டு சிவப்பு பொறி முன்னேப் பறக்க... அய்யோ... என்று திரும்பிப் பார்த்தால் ஜெயராஜ்தான் சிகரெட்டை சுண்டி விட்டிருக்கிறார்ன். அடப்பாவி... இன்னும் நாலு இழுப்புக்கு மேலே இருந்திருக்குமே அதில. ஒருவழியாக பேரக்கிற்கு மீண்டாலும் இரவெல்லாம் துப்பாக்கி வெடிப்பது போல கனவு வந்து வந்து போனது.

கேம்ப் டே (Camp Day) அன்று எங்களுக்கு பொறுப்பாளரான AOCன் மேஜர் மூர்த்தியோடு பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது இந்த சம்பவத்தை விளையாட்டாக விவரித்தோம். வழிதவறி வாசலோடு போகிற கல்லூரி மாணவர்களை எல்லாமா சுடுவார்கள் என்று சிரித்தார். ஆனால் ஆடு மாடு ஏதாவது வழி தவறி வந்தால் காலிதான். யார் கேள்விக் கேட்கப் போகிறார்கள் என்றார் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே.

உண்மைதான். கேள்வி கேட்பதில் நாம் கொஞ்சம் பின்தங்கித்தான் விட்டோம். தமிழகத்தின் தெற்கெல்லையில் கடலுக்குள் செல்லும் மீனவர்களை Maritime எல்லையை அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படை சுடுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. "அது சிக்கலான விவகாரம்”. என்று ஒரு உயர் அரசியல் தலைவர் சொன்னாராம். சரிதான். எந்தவித சிக்கல்களுக்கும் எளிதான் தீர்வு கொலை அல்லவே. நிச்சயமாக இல்லை. நாடுகளுக்கு எல்லைகள் உண்டு. மனிதநேயத்திற்கு எல்லைகள் ஏது?

இலங்கை அரசு ‘இனி சுடுவதில்லை’ என்று சொல்லியிருப்பதாக தெரிகிறது. இந்த ஒப்புதல் வாக்குமூலத்தோடு இது நின்றுவிடக் கூடிய பிரச்னை இல்லை. இனி இந்த Maritime எல்லைப் பற்றிய பிரச்னையில் இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை திட்டவட்டமாக தெரியபடுத்த வேண்டும். கேட்பாரற்ற அஃறிணைகள் போல மனிதர்கள் மாண்டு போகாமல் இருக்க இந்திய அரசாங்கமும் முயற்சி செய்ய வேண்டும்.

இதற்கான சட்டதிட்டங்கள், வரைமுறைகள், மனிதநேய நடைமுறைகள்... இன்னபிற எல்லாமே ஏற்கெனவே இருப்பதுதான். அவை சரியானப்டி அமலாக்கப்படாததுதான் சிக்கல்.

இணையத்தில் பெரும் குரலாக 'தமிழக மீனவனைக் காப்பாற்று’ என்னும் கோஷம் எழுப்பபடுவதை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. tnfisherman என்ற Tag போட்டு ஆயிரகணக்கான கீச்சுகள் (tweets) போடப்பட்டு இந்திய அளவில் கவனம் பெற்ற ட்விட்டர் ட்ரெண்டாக உருப்பெறத் தொடங்கியிருக்கிறது. செய்தி ஊடகங்களின் கவனமும் மீனவர்களின் பிரச்னைபாற் திரும்பியிருப்பது நல்ல விஷயமே.

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கான ஆதரவுக் குரல் இணையத்தில் நீட்டித்து ஒலிக்க இந்தக் கையெழுத்து வேட்டையிலும் பங்குபெற வேண்டுகிறேன். பெரிய பாறைகளுக்கு இடையே சிறு கூழாங்கற்களை நிரப்பும் அணிற்பிள்ளைகள் போல...

Save TN Fisherman Petition online

Save TN Fisherman கீச்சுகள்

Save TN Fishermen தளம் - இந்திய நேவி கமாண்டர் பேட்டி

ஸ்ரீதர் நாராயணன்

No comments:

Post a Comment