Sunday, January 30, 2011

தரையிலிட்ட மீன் - கலைஞர் கடிதம்

இது கற்பனை தான் என்றாலும் நிஜத்தின் சாயல் சற்றே தெரிவதற்கு நான் பொறுப்பல்ல)


உடன்பிறப்பே!



தமிழக மீனவர்கள் வாடிக்கையாக இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படுவது நாடறிந்த சேதி. நீயும் அறிந்திருப்பாய். இதற்கு நான் எதுவும் செய்யாதிருக்கிறேன் என்று விரல் நீட்டுவோரில் கொடநாட்டுக் கோமகள் முதன்மையானவர் என்பது குறித்து நான் கவலையே படமாட்டேன். என்னைக் காமராசர் எதிர்த்தார், ராஜாஜி எதிர்த்தார், இந்திராகாந்தி எதிர்த்தார். எனது நண்பர் எம்ஜிஆரும் 1987ல் மறையும் வரை இதைத்தானே செய்தார். எதிர்ப்புகள் எனக்குப் புதிதல்ல.



ஆனால் தமிழ்நாட்டில் வரும் பத்திரிகைகள் சில ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி என் மீது சேறு வாரி இறைக்கின்றன. பொதுவானவர்கள் என்று நான் நம்பும் மக்களில் பலரும் கச்சத்தீவு போனது முதல் ஜெயக்குமார் மரணம் வரை கருணாநிதியே காரணம் என்று பேசுகிறார்கள். இவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா தெரியவில்லை. நான் எது செய்தாலும் குற்றம் சொல்ல ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

அச்சு எந்திரம் பிரபலமாவதற்கு முன்பே முரசொலி நடத்தியவன் நான். அண்ணாவும் பெரியாரும் அதுகண்டு இறும்பூது எய்தி என்னைப் பாராட்டினர் என்று பெருமையில் மார்தட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. அந்தப் பெருமக்களும் விரும்பிப்படித்த பத்திரிகை முரசொலி என்ற வரலாற்றை நீ நன்கறிய வேண்டும என்பதற்காகவே இதைச் சொன்னேன்.

வங்காளிகள் விரும்பி உண்ணும் உணவு மீன் என்பதாலேயே ஜித்தன் பானர்ஜியை குடும்பத்தோடு சென்னையிலே இருத்தி வைத்து மீனவர்களுக்கு நிலையான பிழைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஏவிஎம் செட்டியாரிடம் நான் வாதாடியதை அவர் நேற்றுகூட என் கனவில் வந்து மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார். அந்த அளவுக்கு மீனவர்களிடம் பாசம் கொண்டவன் இந்தக் கருணாநிதி.

காஷ்மீரப் பார்ப்பனர்கள் மீன் உண்பார்கள் என்பதால் இந்திரா காந்தியை எத்தனை முறை நான் ஆதரித்தேன் என்பது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியிருப்பதைப் படித்தவர்களுக்குப் புரியும். நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜி எனக்கு உற்ற நண்பரானதே வங்கத்துப் பார்ப்பனர்களும் மீன் உண்பார்கள் என்பதால் தானே! இவ்வளவு இருந்தும் கருணாநிதி மீனவர்களுக்கு எதிரி என்று பேசுவதில் ஆரிய மாயை அளப்பரிய இன்பம் பெறுகிறது என்றால் அதன் நச்சுத்தன்மை எத்தகையது என்று புரிந்து கொள்!

அருமை நண்பர் எம்ஜிஆர் முதல்வரானபின் நடிக்கக்கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் மீனவநண்பன் என்ற படத்துக்கு சிறு இடையூறும் வர விடவில்லை நான் என்பதை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கத் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். இன்று சில மீனவர்களின் மகிழத்தகாத மரணத்துக்காக என்னை ஏகடியம் செய்வோரை எதிர்காலம் எள்ளி நகையாடும். வரலாறும் வசைபாடும்.

குமரி மாவட்டம் நீரில் மூழ்கியபோது அரசு எந்திரம் மெத்தனமாகச் செயல்பட்டது என்று குறை கூறுவோர், "சற்றே தாமதித்தாலும் பரவாயில்லை, ஆனால் அந்த நீரில் உள்ள மீன்களை மீனவர்கள் பிடித்து விற்றுப் பிழைப்பதற்கு பங்கம் வரக்கூடாது" என்ற என் ஆணையை அறிய மாட்டார்கள். தாமதத்திற்குப் பின்னால் உள்ள உண்மைக் காரணத்தை எடுத்துக்கூறி விளம்பரம் தேடவேண்டாம் என்றிருந்தேன். சொல்லவேண்டிய கட்டாயத்தால் சொல்கிறேன். இதை வெளியே சொல்வதும் சொல்லாததும் உன் விருப்பம்.

ஏலகிரியில் ஓய்வெடுக்கச் சென்ற போது கூட ஏரியிலே பிடித்த மீனை வாங்கி உடன் வந்த கட்சியினருக்கு ஊட்டி மகிழ்ந்தவன் இந்தக் கருணாநிதி என்ற உண்மையை நீ அறியமாட்டாய்! எவ்வளவு மீன்களை அங்கிருந்து எடுத்து வந்து இங்கிருக்கும் உடன்பிறப்புக்ளுக்குத் தந்தேன் தெரியுமா? உடன்பிறப்புகளுக்கு ஏரிமீன் வழங்கும் விழா எடுத்துவிடலாம் என்று உடனிருப்போர் சொன்னார்கள். மறுத்துவிட்டேன். உனக்குத் தெரியுமே எனக்குதான் விளம்பரம் பிடிக்காது என்று.

விலைவாசி உயர்வு என்று நேரு காலத்திலிருந்து நடக்கும் செயலுக்கும் கருணாநிதியே மூலகாரணம் என்று கொடுநெஞ்சம் கொண்டோர் குற்றம் சாட்டினர். ஆனால் அப்போதும் மீன் விலை கட்டுபடியாகும் நிலையில் தான் இருந்தது என்று நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் நான் சொல்லவில்லையே என்று நீ வருந்தக்கூடாது என்பதால் சொன்னேன்.


சமீபத்தில் தம்பி ஜெயக்குமார் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வருந்தத்தக்க வகையில் மாண்டார் என்று கேட்டதும் நான் அடைந்த துயரத்தைச் நாட்டுக்குச் சொல்ல விம்மி அழுதபடியே நெஞ்சுக்குநீதி முதல் தொல்காப்பிய உரை வரை, பராசக்தி வசனம் முதல் இளைஞன் வசனம் வரை தேடிப் பார்த்துவிட்டேன். வார்த்தைகள் கிட்டவில்லை.

அதிகம் அழுவது உடல் நலனுக்கு ஆகாது என்று மருத்துவர்கள் சொன்னதால் அல்ல, எனக்கு ஏதாவது ஒன்று என்றால் உன்னால் தாங்க முடியாது என்பதாலும், தமிழனை அநாதையாக ஆக்கிவிடத் துணிந்தாயே என்று வள்ளுவப் பெருந்தகை முதல் பேரறிஞர் அண்ணா வரை கோபிப்பார்களே என்பதாலும் அழுகையை நிறுத்திவிட்டேன்.


இணையமெனும் கணினி வலையில் கல்வி முதல் கலவி வரை செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்துப் பார்த்துப் பயன் பெறுவதை விரும்பவில்லை பார்ப்பனீய சக்திகள். அதனையும் கருணாநிதியைக் குறை சொல்லப் பயன்படுத்துகிறார்கள் இந்த ஆரியக் கூத்தாடிகள். ராஜாஜி காலத்திலும், காமராசர் காலத்திலும், பக்தவத்சலம் காலத்திலும் மீனவர்கள் சாகாவரம் பெற்றா இருந்தார்கள் என்று கேட்டால் பதிலில்லை புல்லர்களிடம்.

கடலே வற்றிப் போனாலும் கையசைப்பில் ஒரு குளமோ குட்டையோ வரவழைக்க வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே சாயிபாபாவை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தவன் நான். குளமோ குட்டையோ இருந்தாலும் மீன் பிடிக்க ஆகுமே என்ற என் நல்ல எண்ணம் அம்மையாரின் அடிவருடிகளுக்குப் புரிந்தாலும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். பகுத்தறிவாளன் இதை எப்படி நம்பலாம் என்று கேட்கிறது பெரியாரையே பழிக்கும் பார்ப்பனீயம். அவரையே பழித்தது என்னை விட்டா வைக்கும்?

இதுவரை மீனவர்கள் மாண்ட போதெல்லாம் தரையிலிட்ட மீனாகத் துடித்தவன் கருணாநிதி என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகு அறியும். நீயும் அறிவாய். அது போதும் எனக்கு. எத்தனை கடிதங்கள்? எத்தனை சந்திப்புகள்? எத்தனை பேச்சுக்கள்? எத்தனை வருத்தங்கள்? எத்தனை கண்டனங்கள்? எத்தனை அறிக்கைகள்? இவ்வளவுக்குப் பிறகும் சும்மா இருக்கிறான் என்கிறார்களே? இது மார்பின் குறுக்கே நூலிட்டுக் குறுக்குசால் ஓட்டாதவன் நான் என்பதால் தானே?

என் ஜாதகமே அப்படித்தான். ஏச்சுக்கும் ஏகடியத்துக்கும் மட்டுமே இவன் என்று ஆதிக்கச் சக்திகள் ஒரு முடிவோடு செயல்படுகின்றன. ஜாதகத்தை நம்புகிறாயா என்று உடனே கேட்பார்கள். இப்படிக் கேட்பவர்களுக்குப் பதில் சொல்லி லாவணி பாட எனக்கு விருப்பமில்லை. நீ விரும்பினால் எசப்பாட்டு பாடிக்கொள். நான் தடுக்க மாட்டேன். இருந்தாலும் உனக்குச் சொல்கிறேன். நான் ஜாதகத்தை நம்பவில்லை. நம்புவோரைத் தடுக்கவும் இல்லை. நேரம் சரியில்லை எனக்கு. வேறென்ன சொல்ல!

இவ்வளவுக்குப் பிறகும் நான் செயல்படாமல் சும்மா இருக்கிறேன் என்று சீண்டும் சின்னப் புத்திக்காரர்களிடம் எப்படிப் பொறுமையாக இருப்பது என்று நீ துடிப்பது புரிகிறது. பொறுத்தார் பூமியாள்வார் என்ற முதுமொழியை மெய்ப்பிக்கிறேன் என்று சங்கத்தமிழ்ப் புலவர் பெருமக்களுக்கு நான் கொடுத்த வாக்கு என் கோபத்தைக் கட்டிப் போட்டிருக்கிறது. பூமியாள்வோர் பொறுத்தே ஆகவேண்டும் என்று சாலமன் பாப்பையா வேறு விளக்கம் தந்து என் கைகளைக் கட்டிப் போடுகிறார்!

இதற்கு மேலும் இது பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் வெட்டி வேலை. இதிலெல்லாம் கவனத்தைச் சிதற விடாதே, நேரத்தை விரயமாக்காதே. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றி என்பது தவிர வேறெதிலும் உன் கவனம் செல்வது இப்போது மட்டுமல்ல எப்போதுமே நன்மை பயக்காது.

தேடாமல் சோறு, உழைக்காமல் காசு என்ற உன்னதமான வாழ்வு தமிழனுக்கு பல்லாயிரத்தாண்டுகள் தொடர வேண்டுமானால் தேர்தலுக்குத் தேர்தல் நீ அயராது பாடுபட்டு வெற்றிக்கனி பறிக்கவேண்டும். தேர்தல் வெற்றியை யாரும் இலவசமாகத் தருவதில்லை. ஆகவே உடன்பிறப்பே தேர்தலில் உழைக்கத் தயாராகிக்கொள்!


அன்புடன்,
மு.க.

Arun Ambie

No comments:

Post a Comment