Sunday, January 30, 2011

மீனவர்களுக்காக கலைமாமணியை புறக்கணிக்க வேண்டுவோம்!

ஏதோ சில தகவல்களை அவ்வப்போது கீச்சிக்கொண்டிருந்த தமிழ் ட்விட்டர் தளம் ஒருமித்த ஓங்கிய குரலாக மீனவர்களுக்காக கொதித்தெழுந்து குமுறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குரலில் இதுவரை சிங்களப் பேரினவாதத்தினால் செத்துப்போன பாவப்பட்ட மீனவனின் ஆத்மா ஒரு துளியேனும் அமைதியை நோக்கித் திரும்பும்.


இது மட்டும் போதுமா?


விவசாயிகளையும் மீனவர்களையும் போற்றாத சமூகம் உருப்படவா போகிறது. சமூகம் என்பது அரசுகளையும் சேர்த்துத்தானே! எல்லாவற்றையும் கார்ப்பரேட்டுகளாக மாற்றிடத் துடிக்கும் அரசுகளுக்கு வயிற்றுப் பசிபோக்கும் விவசாயிகளையும், மீனவர்களையும் காண ஏது நேரம்? முப்பது சதவிகித உணவுத்தேவையை மீனவர்கள் பூர்த்திசெய்வதும், பெருமளவினான பொருளாதாரத்தையும் மீனவர்கள் ஈட்டித் தருவதும் ஏனோ அவர்களின் கவுச்சி வாடை தாண்டி அரசாங்கங்களுக்கு எப்போதுமே தெரியவருவதில்லை!


இணைய முழக்கம் ”ஆங்கோர் காட்டிலொரு பொந்திடை வைத்த நெருப்பாக பரவிக்கொண்டிருப்பதை” அரசுகளும், சோரம் போன ஊடகங்களும் கவனிக்காமலா இருக்கும், இருந்தாலும் மனிதர்களின் மறதிமேல் இருக்கும் அபார நம்பிக்கை, இந்த இணையப் புரட்சி இன்னும் எத்தனை நாளைக்கு என்று மெத்தனமாக கள்ள மௌனம் காக்க வைக்கின்றது.
சாவுகளுக்கு கடிதம் மட்டும் எழுதத் தெரிந்த முதல்வருக்கு அமைச்சரவை இடங்களுக்கும், தொகுதிப் பங்கீடுகளுக்கும் மட்டும் டெல்லிக்கு டிக்கெட் போடத் தெரிகிறது. இதுவரை மீனவர்களின் மரணம் கண்ணுக்குத் தெரியாத ஜெயலலிதா அம்மையாருக்கு தேர்தல் காய்ச்சல் இறந்தவனின் பெண்டாட்டியை இறுக கட்டி அணைத்துக்கொள்ள வைக்கிறது.


நித்தியானந்தாவின் உள்ளாடை வரை பல கோணங்களில் காட்டத் தெரிந்த ஊடகங்களுக்கு மீனவன் மரணம் ஒரு முறைச் செய்தியாக மட்டுமே மாறும் அவலம் கேடுகெட்ட தமிழ் தேசத்தில் மட்டுமே நிகழும் அதிசயம்.. அதையெல்லாம் முறித்தெறிய புறப்பட்டிருக்கும் இணையத் தோழர்களுக்கு கோடி வந்தனங்கள்… அதே சமயம் இந்த கீச்சுகள் மட்டும் போதுமா.. அருமையானதொரு வாய்ப்பை அரசே அளித்திருக்கிறது…
ஆமாம் கொலை செய்யப்பட்டவன் இரத்தம் காயும் முன்னே கலைமாமணி விருது வழங்கிட ஆட்டம் பாட்டமும் ஒத்திகை ஆரம்பித்துவிட்டது. விருதுப் பட்டியல் மலைப்பையு,ம் மானங்கெட்ட தனத்தையும் ஒருங்கே அள்ளி வீசியிருக்கிறது. அதில் சிலருக்கு தகுதிக்காக விருது கிடைத்திருக்கலாம், சிலருக்கு விலையாக கிடைத்திருக்கலாம்.


அடுத்தடுத்த பத்து நாட்களில் மீனவர்கள் தமிழர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காக சிங்களப் பேரினவாதத்தினால் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் காக்க இந்திய அரசும், தமிழக அரசும் கடிதங்களையும் தூதர்களையும் அனுப்பவதோடு தங்கள் கூட்டணியை பலப்படுத்திக்கொள்வதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.


விருதுபோல் சிங்களன் கழுத்தில் கையிறு வீசிக் கொன்ற மீனவனின் நினைவாக இந்த ஆண்டு இந்த விருதினைப் புறக்கணிக்கிறேன் என்ற துணிச்சல், மனிதாபிமானம் உங்களுக்கு இருக்கிறதா? இதோ மீனவனின் உலராத ரத்தத்தின் முன் உங்களிடம் மன்றாடி வேண்டுவது, சிங்களப் பேரினவாதம் இந்தியன் மேல் நிகழ்த்தும் இனப்படுகொலையைத் தடுக்காத, கண்டுகொள்ளாத இந்த அரசுகளுக்கெதிரான கலைமாமணி விருதுகளை புறக்கணிக்க கீழ்க் கண்டவர்களை அன்பாக வேண்டுவோம், மன்றாடுவோம், அழுத்தம் கொடுப்போம்…


விருதுக்கு தகுதியான படைப்பாளிகளுக்கு அந்த விழாவும், கழுத்தில் விழும் மடலும் ஒரு பொருட்டா என்ன?


2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:
சசிரேகா பாலசுப்ரமணியன் (நாட்டியம்), காயத்ரி சங்கரன் (கர்நாடக இசை), வே. நாராயணப் பெருமாள் (கர்நாடக இசை), எம்.வி. சண்முகம் (இசைக் கலைஞர்), இளசை சுந்தரம் (இயற்றமிழ் கலைஞர்), பி. லெட்சுமி நரசிம்மன் (தவில் கலைஞர்), திருமாந்திரை காளிதாஸ், (நாதஸ்வரக் கலைஞர்), பிரேமா ஜெகதீசன் (நாட்டியம்), ரோபோ சங்கர் (சின்னத்திரை கலைஞர்), நாமக்கல் வேணுகோபால் (கிளாரிநெட்), திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி (நாதஸ்வரக் கலைஞர்கள்), கவிக்கொண்டல் செங்குட்டுவன் (இயற்றமிழ் கலைஞர்), ச. சுஜாதா (நாட்டியம்) ராணி மைந்தன் (இயற்றமிழ் கலைஞர்), ஜி.கே. இராமஜெயம் (ஓவியக் கலைஞர்) கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் (இயற்றமிழ் கலைஞர்), தஞ்சை சுபாஷினி, ரமா (பரதநாட்டியக் கலைஞர்கள்), சி.வி. ரமேஸ்வர சர்மா (சமையல் கலைஞர்), திருமுருகன் (சின்னத்திரை இயக்குநர்), பரத்வாஜ் (இசையமைப்பாளர்), ராஜீவ் மேனன் (ஒளிப்பதிவாளர்), சிற்பி குட்டப்பன் நாயர் (சிற்பக் கலைஞர்), தோஹா பேங்க் சீதாராமன் (பண்பாட்டுக் கலை பரப்புனர்), என். எதிராசன் (கலைப் பரப்புனர்), கருணாஸ் (நகைச்சுவை நடிகர்).

2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:
காயத்ரி கிரீஷ் (கர்நாடக இசை), சேக்கிழார் (சின்னத்திரை வசனகர்த்தா), சாக்ஷி சிவா (சின்னத்திரை நடிகர்), மாளவிகா (சின்னத்திரை நடிகை), பூவிலங்கு மோகன் (சின்னத்திரை நடிகர்), எஸ். முத்துராமலிங்கம் (கூத்துக் கலைஞர்), பி. முருகேஸ்வரி (கரகாட்டக் கலைஞர்), ரேவதி சங்கரன் (சின்னத்திரை நடிகை), தஞ்சை சின்னப்பொன்னு குமார் (கிராமியப் பாடகர்), எல். ஜான்பாவா (சிலம்பாட்டக் கலைஞர்), ரேவதி (வில்லுப்பாட்டுக் கலைஞர்), கே. கருப்பண்ணன் (ஒயிலாட்டக் கலைஞர்), கே.ஏ. பாண்டியன் (நையாண்டிமேளக் கலைஞர்), எம். திருச்செல்வம் (நையாண்டிமேளக் கலைஞர்), சிவகங்கை வி. நாகு (நையாண்டிமேளக் கலைஞர்), டி. சேகர் (கிராமியக் கருவி இசைக் கலைஞர்), மு. இளங்கோவன் (கிராமியக் கலை பயிற்றுனர்), சா. கந்தசாமி (இயற்றமிழ்), ராஜேஷ் குமார் (இயற்றமிழ்), நாஞ்சில் நாடன் (இயற்றமிழ்), ரோகிணி (குணச் சித்திர நடிகை), சரண்யா (குணச் சித்திர நடிகை), சின்னி ஜெயந்த் (நகைச்சுவை நடிகர்).


2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:
பொன். செல்வ கணபதி (இயற்றமிழ்), பேராசிரியர் தே. ஞான சேகரன் (இயற்றமிழ்), டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்), டாக்டர் தமிழண்ணல் (இயற்றமிழ்), திண்டுக்கல் ஐ. லியோனி (இலக்கியச் சொற்பொழிவாளர்), சொ. சத்தியசீலன் (சமயச் சொற்பொழிவாளர்), தேச. மங்கையர்க்கரசி (சமயச் சொற்பொழிவாளர்), டி.வி. கோபாலகிருஷ்ணன் (இசை ஆசிரியர்), கே. என். சசிகிரண் (குரலிசைக் கலைஞர்), குடந்தை ஜெ. தேவிபிரசாத் (வயலின் கலைஞர்), ஐ. சிவக்குமார் (மிருதங்க ஆசிரியர்), என்.எஸ். ராஜம் (மிருதங்க கலைஞர்), ஸ்ரீனிவாசன் (வீணை கலைஞர்), ராஜேஷ் வைத்யா (வீணைக் கலைஞர்), திருவாரூர் எஸ். சாமிநாதன் (புல்லாங்குழல்), கே.வி. இராமானுஜம் (புல்லாங்குழல்), டாக்டர் தி. சுரேஷ் சிவன் (தேவார இசைக் கலைஞர்), கல்யாணி மேனன் (மெல்லிசைப் பாடகி), திருக்கடையூர் முரளிதரன் (நாதஸ்வரக் கலைஞர்), ரெட்டியூர் செல்வம் (தவில் கலைஞர்), ஏ.ஹேம்நாத் (பரத நாட்டியம்), பிரசன்னா ராமசாமி (நாடகக் கலைஞர்), எப். சூசை மாணிக்கம் (நாடக நடிகர்), ஆர்யா (திரைப்பட நடிகர்), அனுஷ்கா (திரைப்பட நடிகை), தமன்னா (திரைப்பட நடிகை).


இந்தப் பட்டியலில் இருப்போரை முடிந்தவரை தொடர்பு கொண்டு இந்த நெருப்பை விளக்காக ஏற்றுவோம். நிச்சயம் ஒளி பிறக்கும்.


இவர்களில் ஒருவர் புறக்கணிக்க துணிந்தாலும், அது இணைய ட்விட்டர் தீயினை தமிழகத்தின் எட்டுத்திக்கிலும் இருக்கும் மனிதர்களின் நெஞ்சத்தில் ஏற்றிவைக்கும்.


வலைவீசும் மீனவனுக்காக, வலை உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம், உலகத்தமிழர்களை ஒன்றுபடுத்தி குரலை உயர்த்துவோம்


ஈரோடு கதிர்

No comments:

Post a Comment