Saturday, January 29, 2011

ட்வீட்டரில் மீனவப் புரட்சி..! பங்கெடுக்க வாருங்கள் தோழர்களே..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கம்போல எப்போதும் நடக்கின்ற கொலைதான் என்கிறவகையில் தற்போது கடைசியாக நடந்திருக்கும் நாகப்பட்டினம் மீனவர் ஜெயக்குமாரின் கொலை, சிறிதளவு இந்திய, தமிழக அரசுகளை அசைத்துப் பார்த்திருக்கிறது..!
தேர்தல் நேரம் என்பதாலும், இதனை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து சினிமாத்தனமாக அனைவருக்கும் முந்திக் கொண்டு இரவோடு இரவாக அரசு வேலை தரும் ஆணையை கிராமத்து வீட்டுக்கே கொண்டு போய்ச் சேர்ப்பித்திருக்கிறது மாநில அரசு.

இந்த வேகத்தை முதல் மீனவன் பலியானபோதே இலங்கை அரசை கண்டிப்பதிலும், தண்டிப்பதிலும் நிகழ்த்தியிருந்தால் மிச்சம் இருந்த 535 பேரின் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கலாமே..?

அரசுகளின் இந்த அவலட்சணத்தை இதுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்த வெகுஜன ஊடகங்களுக்கு மத்தியில், இப்போது இணைய ஊடகங்களும் களத்தில் குதித்துவிட்டன.

வலைத்தளங்களில் பல பதிவர்கள் சிங்கள அரசின் கொடுமையைக் கண்டித்தும், மீளாத் துயிலில் மூழ்கியிருக்கும் தமிழக, மத்திய அரசைக் கண்டித்தும் பதிவெழுதிவிட்டார்கள்.

கூகிள் பஸ் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களிலும் உடனுக்குடன் எதிர்ப்பு கோஷங்களும், அரசுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு படி மேலே போய் உணர்வுள்ள அத்தனை பேரையும் உடனுக்குடன் ஒருங்கிணைக்கும் வசதி கொண்ட ட்வீட்டரில் இதற்கென  http://twitter.com/
#TNfisherman என்ற தனி ஐ.டி.யை ஆரம்பித்து அதில் தங்களது கோபத்தையும், கொந்தளிப்பையும் பதிவு செய்து வருகின்றனர் தோழர்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பாக வலையுலக நண்பர் டிபிசிடி ஆரம்பித்த இந்த மீனவர்களுக்கான ஆதரவுப் போராட்டத்திற்கு இரண்டாவது நாளிலேயே ஊடகங்கள் ஆதரவு கொடுத்து அடையாளப்படுத்தின.

ட்வீட்டர் என்றில்லாமல் அங்கே இடுகின்ற செய்திகளும், கண்டனங்களும், கோரிக்கைகளும் http://www.savetnfisherman.org  என்ற வலைத்தளத்தில் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேகத்தோடு இது அரசின் காதுகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறையோடு கடந்த மூன்று தினங்களாக ட்வீட்டர் உலகம் கலங்கிப் போய் இருக்கிறது..!

இதன் உச்சக்கட்டமாக நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்த டிவீட்டரின் மூலம் இயங்கும் மீனவர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

9 மணி என்றில்லாமல் அதற்கு முன்பிருந்தே பல ட்வீட்டர்களும் கண்டனங்களை அதில் எழுப்பிக் கொண்டேயிருந்தார்கள். 9 மணிக்குப் பிறகு, மேலும் வேகம் பிடித்து ட்வீட்டர் ஓவர் லோடு ஆகும் அளவுக்கு தமிழர்கள் பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

அந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 3710 ட்வீட்டுகள் மீனவர் பிரச்சினை தொடர்பாக இடப்பட்டன. நேற்று இரவு 10 மணிவரையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பான பதிவர்கள் இட்ட ட்வீட்டுகளின் எண்ணிக்கை 17,000-த்தை தாண்டியிருந்தது..!






இத்தனை களேபரங்களும் இங்கே நடந்து கொண்டிருக்க.. மத்திய அரசோ மிக மெதுவாக “நாளைக்கு நாள் நல்லாயில்லை. அடுத்த நாள் நல்லாயிருக்கும்..” என்று தேர்ந்தெடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையன்று நமது வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமாராவை இலங்கைக்கு அனுப்புகிறதாம். அவர் அங்கே போய் என்ன பேசப் போகிறார் என்று தெரியவில்லை.

இதுநாள்வரையிலும், இத்தனை மீனவர்கள் இறந்தார்களே.. அவர்களுடைய மரணத்திற்கு காரணம் யார் என்றுகூட விசாரிக்க முடியாத, விசாரிக்கத் தெரியாத இந்தத் துப்புக் கெட்டவர்கள் “சுடாதீங்க.. அவங்க பாவம்ல்ல.. எங்களுக்கு நிறைய பிரச்சினையாகுதுல்ல..” என்று சொல்வதற்காக ஒரு தூதரை அனுப்பி வைக்கிறார்கள். இதுவே மிகக் கேவலம்.

நான் எழுதிய
தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!  என்ற கட்டுரையை வாசித்த தி.மு.க.வைச் சேர்ந்த தோழர்கள் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

"தி.மு.க. இப்போது ஆட்சியைவிட்டு விலகினால்.. கருணாநிதி இல்லை என்றால் சிங்கள அரசு தமிழக மீனவர்களைச் சுடாது என்கிறீர்களா..?"
 
"அல்லது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டால் இது மாதிரியான சம்பவங்கள் திரும்பவும் நடக்காது என்கிறீர்களா..?" என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு கேட்பதற்கு இவர்களுக்கு எப்படி மனது வருகிறது என்றே தெரியவில்லை.

இப்போது நடப்பது கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி. தமிழகத்தின்  முதல்வர் கருணாநிதிதான். செத்தவன் தமிழகத்தைச் சேர்ந்த மீனவன். நியாயத்தை யாரிடம் கேட்பது..? எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிடமா கேட்க முடியும்?

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் இறந்தபோது மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றால் சுடத்தான் செய்வார்கள் என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். யார் இதனை இல்லை என்று சொன்னது..? அப்போது அதனை மறுத்தும், எதிர்த்தும் பேசிய கருணாநிதி இன்றைக்கு தனது ஆட்சியிலேயே ஒரு மரணம் நிகழ்ந்ததும் கள்ள மெளனம் சாதிப்பது ஏன்..? நாங்கள் எங்கே ஜெயலலிதாவை உத்தமி என்று சொன்னோம்..?

தற்போது இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு எனில், மத்திய அரசை எப்பாடுபட்டாவது வற்புறுத்தி இந்தப் படுகொலைகளை நிறுத்துவது மாநில அரசின் கடமையல்லவா..? கருணாநிதி ஏன் செய்யவில்லை..? ஏன் இவரால் செய்ய முடியாது..?

தனது பேரன்களின் கேபிள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க சட்டம் வரப் போகிறது என்ற தகவல் கிடைத்த 1 மணி நேரத்திற்குள் கவர்னர் மாளிகைக்கு அன்பழகன் தலைமையில் கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்து புலம்பத் தெரிந்தவர்தானே இந்தக் கருணாநிதி..!

தனது பேரனுக்கும், தனது கட்சிக்காரர்களுக்கும் நல்ல லாபமான, பசையான துறைகளை வாங்கித் தர வேண்டி இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியின் தெருக்களில் லாவணி பாட ஓடத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

கேட்ட துறைகள் கொடுக்கப்படவில்லை என்றவுடன் பதவியேற்பில் கலந்து கொள்ள மாட்டோம். நாங்கள் வெளியேயே நின்று கொள்கிறோம் என்று மிரட்டத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

நாங்கள் இருக்கவா வேண்டாமா என்பதை முடிவெடுத்துச் சொல்லுங்கள் என்று மிரட்டி ஜெயிலில் இருந்து தனி உத்தரவு மூலம் தான் மட்டும் வெளியேறத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தொலைக்காட்சி துவங்க 5 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் பி்ன்னுக்குத் தள்ளிவிட்டு விண்ணப்பம் கொடுத்து 15 நாட்களில் தனது தொலைக்காட்சிக்கு மட்டும் அனுமதி வாங்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

உலகத்தில் எந்த நாடும் செய்திருக்காத சாதனையாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஜீரோக்களை எண்ணக்கூடத் தெரியாதவர்கள் இருக்கின்ற இந்த நாட்டில் அந்த ஊழல் நாயகனைக்கூட திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று அடம் பிடிக்கத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தனது மகனை ரவுடி என்று விமர்சித்த பேரனை ஒரே நொடியில் தனது சார்பான அமைச்சர்கள் பட்டியலில் இருந்து தூக்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

ஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரியாத மகனை, இது இரண்டு மட்டுமே தெரிந்த பிரதமரின் அமைச்சரவையில் கேபினட் மினிஸ்டராக ஆக்கத் தெரிந்திருக்கிறதே இந்தக் கருணாநிதிக்கு..!

இன்னும் எத்தனையோ திருட்டுக்களையும், கொள்ளைகளையும் மறைமுகமாகச் செய்து பிழைத்து வரும் இந்தக் கருணாநிதிக்கு மீனவர்களின் தொடர் படுகொலையை தடுக்கக் கூடவா தெரியாது..?

இவருடைய கட்சி எம்.பி.க்களின் ஆதரவோடுதானே மத்திய அரசே இயங்குகிறது.. அந்த மத்திய அரசில் இவரும் ஒரு அங்கம்தானே.. பின்பு இவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய் கேட்பது..?

இவர் உண்மையான தமிழனாக இருந்தால், முள்ளிவாய்க்கால் போரின்போதே கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். அப்போதே தெரிந்துவிட்டது ஐயா தனது குடும்பத்தினருக்கு மட்டும்தான் தமிழன் என்று..!

நானாக இருந்திருந்தால் ஆட்சியில் இருந்து விலகியிருப்பேன். மத்திய அரசை நட்டாத்தில் விட்டிருப்பேன். அடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது நானே முதல் படகில் அமர்ந்து சென்று “இப்போ வந்து சுட்டுப் பாரு..!” என்று சவால் விட்டிருப்பேன்.

கடற்படையினரை நம்பி இனிமேல் புண்ணியமில்லை. முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு ஓட்டுப் போட்ட மக்களைக் காப்பாற்ற நான்தான் முனைய வேண்டும். அந்த வகையில் தமிழக காவல்துறையினரை மீனவர்களின் பாதுகாப்புக்காக நடுக்கடலுக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதனை செய்திருப்பேன்..!

எதிர்க்க வருபவர்களை, தடுக்க நினைக்கும் மத்திய அரசினை எதிர்த்து மக்களைத் திரட்டியிருப்பேன். போராடியிருப்பேன்.. ஆட்சி டிஸ்மிஸாகும் என்றாலும் பரவாயில்லை. துணிந்து நிற்கிறேன். டிஸ்மிஸ் செய்து பார் என்று சவால் விட்டிருப்பேன்.

ஆனால் கருணாநிதி செய்யவில்லையே.. அவருக்கு இப்போது என்ன கவலை..? ஒரே கவலைதான். தனது ஆட்சி போகக்கூடாது. அவ்வளவுதான். தனது ஆட்சியை நம்பித்தான் தனது குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தனது ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அவர்கள் சம்பாதிக்கிறார்களோ இல்லையோ.. தனது குடும்பத்தினர் மீது கை வைத்து விடுவார்களே என்று பயப்படுகிறார்.

“நான் எனது நாட்டு மக்களைவிட எனது குடும்பத்தினரை அதிகம் நேசிக்கிறேன். அவர்களுக்காகவே நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன். நடிக்கிறேன். பேசுகிறேன். அவர்களைவிட்டுவிட்டு வேறு யாரையும் நான் நம்பத் தயாராக இல்லை. மத்திய அரசை பகைத்துக் கொண்டால் எனது மகனும், பேரனும் மந்திரி பதவியை இழந்துவிடுவார்கள். அதன் பின் கட்சியில் குழப்பம் ஏற்பட்டால்கூட சமாளித்துவிடுவேன். ஆனால் எனது குடும்பத்தில் குழப்பம் வரும். அதனை என்னால் சமாளிக்க முடியாது.. இப்போது எனது குடும்பத்தினர் சம்பாதித்து வரும் பணம் குறைந்துவிடும். சம்பாத்தியம் போய்விடும். ஏற்கெனவே சம்பாதித்ததற்கு கணக்கு வழக்கு கேட்பார்கள். வழக்குத் தொடர்வார்கள். அதனைச் சமாளிக்க வேண்டுமெனில் என்னிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரம் இல்லையெனில் எனது குடும்பத்தினரே என்னை மதிக்க மாட்டார்கள். இது எல்லாவற்றையும்விட எனக்கு எப்போது மரணம் என்று தெரியவில்லை. ஆனால் நான் சாகும்போதுகூட முதல்வராகவே சாக விரும்புகிறேன். அப்படி இறந்தால்தான் எனது 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரை போல எனக்கும் பெயர் கிடைக்கும்..  ஆகவே எந்த நாடு, எத்தனை தமிழர்களைக் கொலை செய்தாலும் பரவாயில்லை. எனக்கு எனது ஆட்சிதான் முக்கியம்.. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..”

- இப்படி சதா சர்வகாலமும் தனது குடும்பத்தைப் பற்றியே சிந்தித்து வருபவரிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..? நேற்றுகூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 38 பேர் இறந்தார்களே.. ஜெயலலிதா அப்போது என்ன செய்தார் என்று..?

நீ ஏண்டா ஒரு நாள் அம்மணமா ஆடுறன்னு கேட்டா.. அவன் 38 நாள் ஆடுனானேன்னு அது உன் கண்ணுக்குத் தெரியலையா என்று கேட்கிறார் இந்தத் தமிழினத் தலைவர்..! இதுவா நியாயவான் பேசுகிற பேச்சு.. அப்போது இவரும் ஒரு ரவுடிதானே? ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமே அதே அளவுக்கு மரியாதைதான் இவருக்கும் கிடைக்கும். ஆனால் ஜெயலலிதா எதையும் சொல்லிவிட்டுச் செய்வார். கருணாநிதி சொல்லாமல் செய்வார், செய்தவர் என்பதால் அந்த மரியாதையைக்கூட இப்போது இழந்துவிட்டார்.

இப்போது மீனவர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவர்களில்லை. வாங்குபவர்களும் இல்லை. இப்போது கருணாநிதி ஆட்சியில் இல்லாமல் ஜெயலலிதா இருந்திருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பார்கள். பேசியிருப்பார்கள்.

இப்படி ஜெயலலிதாவைக் காட்டியே அவரைவிட பல மடங்கு பணத்தையும், சொத்துக்களையும் தனது குடும்பத்தினருக்காகச் சம்பாதித்துக் குவித்திருக்கும் கருணாநிதி மீண்டும், மீண்டும் ஜெயலலிதா என்னும் பூச்சாண்டியைச் சொல்லியே நம்மிடமிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்..!

அவருக்கு மட்டுமல்ல, இனி ஆட்சி பீடத்தில் ஏறப் போகும் அனைவருக்குமே ஒரு பாடத்தைப் புகட்டுவதைப் போல நாம் நமது எதிர்ப்பை தொடர்ந்து காட்டிக் கொண்டே வர வேண்டும். இது தேர்தல் சமயத்தில் நமது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக இந்த கோபாலபுரத்து கோயபல்ஸின் சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக வேண்டும்..!

பதிவர்களும், வாசக அன்பர்களும் மீனவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தளத்திற்குச் சென்று பிரதமருக்கு ஒரு கண்டனக் கடிதத்தை உங்களது ஒப்புதலுடன் அனுப்பி வையுங்கள்..

மேலும் நேரமிருப்பவர்கள், வாய்ப்பு இருப்பவர்கள் ட்வீட்டரில் தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டக் களத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்
http://www.facebook.com/savetnfisherman என்ற தளத்தில் இணைந்து தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நம்மால் முடிந்ததை அந்த மீனவர்களின் சமுதாயத்தினருக்கு செய்வோம்..! வாருங்கள்..!
பதிவர்:   உண்மைத்த‌மிழ‌ன்                                  

No comments:

Post a Comment