Saturday, January 29, 2011

ஒன்றுபடுவோம் மீனவச் சகோதரனுக்காக.

பொதுவாக நாங்கள் வேலை செய்யமாட்டோம் என்றுதான் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் சொல்வார்கள். ஆனால் மீனவச் சமுதாயம் ”எங்களை வேலை செய்யவிடு” என்று போராடும் துரதிர்ஷ்டநிலை தொடர்ந்து இங்கு இருந்துவருகிறது. கூடவே உயிர்பலி வேறு..


ஒரு சிறிய நாடு, இந்தியாவின் குடிமக்களைக் கொல்வதும் அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதும் வெட்கக்கேடு. மீனவனைக் கொன்றால், அவர்களைத் தவிர வேறு யாரும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற திமிரில் தான் நம் அரசுகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன.


கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது, இந்தியா செய்த மாபெரும் தவறு. அதனுடைய விளைவைத்தான் இன்று அனுபவிக்கிறோம். ‘மீனவர்களும் எல்லை தாண்டுகிறார்களே’ என்று பிரதமரே வைகோவிடம் கேட்டிருக்கிறார். ‘எல்லை தாண்டினால், சுட்டுக் கொல்லவேண்டும்’ என்று சர்வதேச /இலங்கை சட்டத்தில் சொல்லப் பட்டுள்ளதா? பாகிஸ்தானே எல்லை தாண்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்தும்போது, இலங்கைக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது யார் என கொஞ்சம் யோசித்தாலே அனைவருக்கும் புரியும்.


நிருபமா இலங்கை சென்றிருக்கிறார். மீனவரைக் கொன்ற ராணுவ வீரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்ல அல்ல..இனிமேல் தயவு செய்து இப்படிச் செய்யாதீர்கள் என்று மன்றாட..இந்தியா இவ்வளவு மோசமான நிலையில் இதற்குமுன் இருந்ததே இல்லை. அடிமைப்பட்டுக் கிடந்தபோது கூட, நம் முன்னோர் தைரியமாக தன் உரிமையை வெள்ளைக்காரனிடம் கேட்கவில்லையா?


ஈழப்போர் முடிவுக்கு முன், விடுதலைப் புலிகளுக்கும் மீனவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் சுடுவதாகச் சப்பைக்கட்டு கட்டிய அறிவுஜீவிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வார்கள்?


மோசமான கொலை வெறியில் சிக்குண்டு கிடக்கிறது இலங்கை ராணுவமும் அரசும். அவர்களுக்கு உடனடித் தேவை மனநலச் சிகிச்சை..இல்லையென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதில்தான் இது முடியும்.


இணையத்தில் இந்த மாபெரும் எழுச்சியை உண்டாக்கி நடத்திக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..


பதிவர்: செங்கோவி

No comments:

Post a Comment