Saturday, January 29, 2011

மீனவன்ஜி

மீனவன்ஜி
ஒவ்வொரு பதிவிலும் சமூகத்தில் நிகழும் அவலத்தை கோபக்கனல் தெறிக்க எழுதும் பொன்மாலைப் பொழுது கக்கு-மாணிக்கம் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் சிங்கள வெறியர்கள் பற்றி எழுத உரிமையோடு கேட்டிருந்தார். அரசியல் மற்றும் நிகழ்காலத்தில் நடைபெறும் எந்த ஒன்றையும் பற்றியும் இதுவரை எழுதாமல் இருந்தேன். இருந்தாலும் அநியாயமாக அக்கிரமமாக தாக்குதல் நடத்தும் ஸ்ரீலங்கா அரக்க சேனையை கண்டிக்கும் விதமாக இந்தப் பதிவு.
படகோட்டியில் எம்.ஜி.யாரின் மிகப் பிரபலமான பாடல்

"தரைமேல் பிறக்கவைத்தான்..
எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரைமேல் இருக்கவைத்தான்
பெண்களை கண்ணீரில் குளிக்கவைத்தான்" என்பது.


தப்படித்து அழுது பாடும் அந்தப் பாடல் நம் மீனவ நண்பர்களின் எக்கால சோகத்திற்கும் பறை சாற்றும் பாடல். தமிழனுக்கு தண்ணீரில் கண்டம் என்று நினைக்கிறேன். நெய்தல் நிலம் சிங்கள வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மீனவர்கள் தங்கள் ஜீவாதாரமான தொழிலை தொடர முடியாமல் முடங்கிப் போயிருக்கிறார்கள். நிச்சயம் இலவச டி.வி சோறு போடாது. மும்பை கடலில் மீன் பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி ஹிந்தி பேசும் மீனவன்ஜி ஒருவன் மேற்கு கடற்கரை ஓரம் குண்டடி பட்டிருந்தால் டெல்லிக்கு அடுத்த கணம் கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நாம் குடும்பங்களை இழந்து கதறி அழுதால் கூட "முஜே தமிள் நஹி மாலும் ஹை.." என்ற தோரணையில் செவிமடுக்காமல் நமது நாட்டில் காட்டாட்சி நடத்துகிறார்கள்.

எதற்கெடுத்தாலும் பேச்சு வார்த்தை, சுமூகத் தீர்வு என்று நயாபைசாவிர்க்கு பிரயோஜனம் இல்லாத நடவடிக்கைகள் எடுத்து நாட்கள் கடத்தி விவகாரத்தை நீர்த்து போகச் செய்துவிடும் தந்திரம் நிறைந்த குள்ளநரிகள் நிறைந்தது இந்த அரசியல் கூட்டம். பரப்பளவிலும் எண்ணத்திலும் குறைவாக உள்ள ஸ்ரீலங்காவிடம் இந்திய அரசாங்கம் ஏன் இப்படி பயந்து சாகிறது என்பது யாருக்குமே விளங்காத புரியாத புதிர். குடும்ப நலனும், கட்சி நலனும் பிரதானமாக கொண்ட இந்திய அரசியல் கட்சிகள் நாட்டு நலன் என்று ஒன்று உள்ளதையே ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டார்கள்.

தமிழர் நலன் ஒன்றே எங்கள் மூச்சு என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் "தமிழுணர்வு" மேலோங்கும் கட்சிகள் கூட இது போன்ற சம்பவங்களுக்கு ஒரு ஸ்திரமான போராட்டமோ அல்லது நாடு தழுவிய கண்டனத்தையோ மேற்கொள்ளாதது இன்னும் ஆச்சர்யமான ஒன்று. கொள்ளையடிக்கும் கூட்டணிகள் அமைந்த பிறகு வாய்க்கு வந்தபடி மேடை போட்டு பேசுவார்கள். இப்போது ஒருவருக்கு ஒருவர் கையை காண்பித்து உன் குத்தமா என் குத்தமா என்று குற்றத்தை இன்னொருவர் மேல் ஏவி விட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் எவ்வளவு நாள் இந்த அவலம் தொடரும்?

இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. எந்தக் கட்சி இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்கிறதோ அவர்களுக்கு எங்கள் ஓட்டு என்று உறுதியான ஒரு முடிவை அறிவித்தோம் என்றால் ஏதோ எறும்பு கடித்தது போல உணர்ந்து ஏதாவது உருப்படியான முயற்சிகள் மேற்கொள்ளலாம். அப்படியும் அடித்த காசில் தேர்தல் தினத்தன்று மக்கள் கையில் கொஞ்சம் பேப்பரில் சிரிக்கும் காந்தியை அழுத்தி கவனித்து முன்னேறிவிடுவார்கள்.எல்லை தாண்டினார்களா இல்லையா என்பது முக்கிய விவாதம் அல்ல. கடல் அன்னை இயற்கையின் வரம். சுட்டு வீழ்த்த மீனவர்கள் தீவிரவாதிகளோ கடத்தல்காரர்களோ இல்லை. தங்கள் பிள்ளை குட்டிகளின் பசிப்பிணி போக்க கடலிறங்குகிரார்கள். இதில் எங்கே வந்தது வேட்டையாடும் படலம். "சோனியாஜி.... மன்மோகன்ஜி..... ராகுல்ஜி... இது தமிழன்ஜி... மீனவன்ஜி... பச்சாவ்..." (நம் ஆட்சியாளர்களிடம் கேட்டாலும் அவர்களும் அங்கே சென்று இப்படித்தான் கெஞ்சுவார்கள்) என்று அவர்கள் பாஷையில் புரியும்படி சொன்னாலாவது செவி சாய்ப்பார்களா என்று பார்ப்போம்.

பதிவர் : RVS

No comments:

Post a Comment