Monday, January 31, 2011

வறிய மீனவர்களின் உயிர்கள் மலிவானவையா?!


திருகோணமலை துறைமுகத்தில் தரித்துநின்ற கடற்படையினரின் இரு மோதல் படகுகளை விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பிரிவு 1995 ஏப்பிரல் மாதத்தில் தாக்கியழித்தது. குறித்த தாக்குதலுடன் 3ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது. எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கின்றது. அன்று இரவு யாழ்ப்பாணத்தின் வடமராட்சிக் கிழக்கு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நான்கு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நான்கு குடும்பங்கள் தங்களுடைய குடும்பத்தலைவர்களை இழந்தன. அந்தக் குடும்பங்களின் சில பிள்ளைகள் கல்வி முன்னெடுப்பை விட்டு, தொழில் செய்ய வேண்டி ஏற்பட்டது.

1990களின் ஆரம்பத்திலிருந்து 2009 மே மாதம் வரையில் வடக்கு- கிழக்கு கடற்பகுதிகளில் தங்களுடைய வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்து வந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு, விடுதலைப் புலிகள் என்ற காரணமும் கூறப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், வடக்கு- கிழக்கு கரையோரங்களில் வாழும் மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களில் கணவன்மரை, பிள்ளைகளை தொழிலிலுக்கு அனுப்பி பறிகொடுத்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். இலங்கை மோதல்களுக்குள் தங்களுடைய கணவன்மாரை பறிகொடுத்தவர்களில் அதிகமானோர் மீன்பிடி சமூகத்துக்குள்ளேயே இருக்கின்றார்கள்.

கடலில் போராடி தங்களுடைய வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளும் மீனவ சமூகம் இறுதிவரை அதற்க்காக போராட வேண்டியிருக்கிறது. கடல் கொந்தளிப்பு, மழை, சூறாவளி, அதிகாரங்களின் துப்பாக்கிகள் என்று எதனையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மீண்டும் மீண்டும் கடலலைகளுக்கு மத்தியில் போராடி வேண்டியிருக்கிறது.

இதே பரிதவிப்பை தமிழ்நாட்டு மீனவர்களும் 1984களில இருந்து சந்தித்து வருகிறார்கள் என்பது மிகவும் கவலைக்கிடமானது. என்ன இலங்கை மீனவர்கள் சந்தித்த உயிர் இழப்புடன் ஒப்பிடுகையில் இது குறைவு அவ்வளவே. எனினும், இதுவரை சுமார் 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இறைமைதங்கிய(?) துப்பாக்கிகளினால் பலிவாங்கப்பட்டிருக்கிறார்கள்;. மனித உரிமைகள், விழுமியங்கள் பற்றியெல்லாம் இவர்கள் எப்படி வாய் கூசாமல் பேசுகின்றார்கள் என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. ஆனாலும், வெளியில் பேசிவிடவா முடியும்.

தமிழக சட்ட மன்ற தேர்தல்கள் அண்மித்துள்ள நிலையில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுகின்றமை அரசியற் தலைவர்களினால் மிகப்பெரிய அளவில் நோக்கப்படுகின்றது. தேர்தல் காலங்கள் வந்தால் தான் எல்லாப் பிரச்சினைகளும் மேடைக்கு வருகின்றன. இல்லாவிட்டால் சில தந்திகள், அறிக்கைகளுடன் அவை கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. இது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும்.

ஆனாலும், தங்களின் வாழ்வாதாரத்தை பெற்றுத் தருபவர்களை இழந்து விட்டு வறிய தமிழக மீனவக் குடும்பங்கள் அல்லற்படுவது தொடர்ந்து வருவதை அனுமதிக்க முடியாது. நலிந்த வடக்கு- கிழக்கு மீனவ சமூகம் சந்தித்து நிற்கின்ற பிரச்சினைகளையே தமிழக மீனவ சமூகமும் சந்தித்து நிற்கின்றது. பெரியண்ணனால், தன்னுடைய தம்பியை கட்டுப்படுத்த முடியவில்லையா? அல்லது அதற்கு முயற்சிக்கவில்லையா?? என்று விளங்கவில்லை.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் (இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவர்) நிருபமா ராவ் இலங்கை வந்திருக்கிறார். பேசியிருக்கிறார். அறிக்கைவிடுவார். போய்விடுவார். ஆனால், தமிழக மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதை தடுப்பதற்கான முழு உத்தரவாதத்தை அவரால் வழங்கமுடியுமா??? பதில் அனைவருக்கும் தெரியும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் என்று.

இந்திய பாரிய ரோலர் படகுகளின் அத்துமீறல்.

இலங்கை- இந்திய பாக்கு நீரிணைக் கடற்பகுதியில் தொடர்ந்தும் பிரச்சினை நிலவி வந்திருக்கிறது. ‘கச்சதீவு’ கையளிப்புக்கு முன்னர் இருந்து. அடிப்படையில் 1990களுக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பாரிய படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் இந்திய ரோலர் படகுகள் எந்தவித இடையூறும் இன்றி இலங்கை கடற்பகுதிகளுக்கு வந்து மீன்களை அள்ளிச் சென்றிருக்கின்றன. அதனையே, இப்போதும் செய்ய முனைகின்றன.

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்தொழில் சங்கங்கள் இணைந்து பாரிய ரோலர் இழுவைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதற்கு தடை விதித்தன. எனினும், வல்வெட்டித்துறையில் 17 பாரிய இழுவைப் படகுகள் தொடர்ந்தும் தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து, பாரிய இழுவைப் படகுகளைக் கொண்டு மீன் பிடிப்பதற்கு தடைவிதிக்குமாறு யாழ்ப்பாண கடற்றொழில் சங்கங்கள் இணைந்து இலங்கை அரசாங்கத்தை கோரின. இதனைக் கருத்திற்கொண்டு பாரிய இழுவைப் படகுகளில் மீனிபிடிப்பதற்கு அரசு தடை விதித்தது.

இது, மீனவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில், ஆழம் குறைந்த பாக்கு நீரினைப் பகுதியில் பாரிய ரோலர் இழுவைப் படகுகளின் மூலம் மீன்கள் பிடிக்கப்படும் போது அந்தப் பகுதியிலுள்ள பவளப்பாறைகள் சிதைக்கப்படுகின்றன. இதனால், மீன்களுக்கு தேவையான பிளாந்தன்கள் உற்பத்தி தடைப்படுகின்றன. இதனால், அந்தப் பகுதியில் மீன்வளம் குறைவடைகின்றன. இதுவே, அதற்கான அடிப்படைக் காரணமாகும்.

எனினும், இந்திய பாரிய ரோலர் இழுவைப் படகுகள் தொடர்ந்தும் இலங்கை மீனவர்களின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்து வருகின்றனர். அத்துடன், இலங்கை மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை தடுப்பதற்கு யாழ்ப்பாண மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழக மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் பேச்சுக்கள் அவ்வப் போது நடந்து வருகின்றன. ஆனாலும், அத்துமீறல் தொடர்கின்றன.

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இந்திய ரோலர்களின் அத்துமீறலும் வேறுவேறானவை. இரு விடயங்களும் தனித்தனியாக பேசித்தீர்க்கப்பட வேண்டும். அதனைவிடுத்து, இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எளியவர்களின் உயிர்கள் என்னவோ மலிவானவை என்று துப்பாக்கிகள் மட்டுமல்ல, பலரின் புத்திகளும் சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!
 
பதிவர்:

No comments:

Post a Comment