Monday, January 31, 2011

'மீனவ நண்பனாக' என்னென்ன செய்யலாம் - கருணாநிதி?

கடந்த 35 வருடங்களாக சுமார் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு மீனவ கிராம்த்தில் சராசரியாக 200 குடும்பங்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், சுமாராக மூன்று மீனவ கிராமங்களே தமிழகத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றன!

தான் சுட்டதாக இலங்கை ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் சுடப்பட்டு இறந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதொரு நிஜம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கபில் சிபல் போன்றோர்கள் கூறுவதை புறம் தள்ளிவிட்டு அப்பிரச்சினையை அணுகுவது போல், இவ்விஷயத்தில் செத்து மடிவது நம் இனம் மட்டுமே என்பதால், இலங்கை சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டு, இலக்கில்லாமல் கூப்பாடு போடுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு சாவு கூட இங்கு விழக்கூடாது என்ற எண்ணத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசர அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. இந்திய இலங்கை கடல் எல்லையில் தான் இப்பிரச்சினை நடக்கிறது. ஆக இப் பிரச்சினையின் முழுப்பொறுப்பும் மத்திய அரசாங்கத்தையே சார்ந்தது. மாநில அரசு தனது காவல் துறையை அனுப்பி மீனவர்களுக்கு பாதுகாப்பாக எல்லையில் நிறுத்த முடியாது. அதேபோல் தமிழக முதல்வர் இலங்கை அதிபரை அழைத்தோ அல்லது அங்கு சென்று பேசியோ இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது - உண்மை தான் ஏற்றுக் கொள்வோம். அதனால் தமிழக முதல்வர் கருணாநிதி இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை, பாவம் அவர் என்ன செய்வார்? என்று கேட்பது - சரியல்ல!

சரி இதற்கு விடிவு காண என்ன தான் செய்ய வேண்டும் கருணாநிதி?


* இந்தியாவிலேயே மிக நீண்ட கடற்கரை மற்றும், சுமார் 18 மைல் தொலைவிலேயே அண்டை நாட்டை கொண்டிருக்கும் ஒரு மாநிலத்திற்கு அதன் மக்களை, குறிப்பாக மீனவர்களை பாதுகாக்க இரு நாட்டு கடல் எல்லையில் நிரந்தர கடல் பாதுகாப்பு படையை நிறுத்த் வேண்டும்.

* அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் உள்ள நாடு இந்தியா என்று உலக நாடுகளுக்கு காட்டிக் கொள்ள வேண்டிய இக்கட்டான கால கட்டத்தில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை ஒரு நொடியும் தாமதிக்காமல் மீட்டெடுக்க வேண்டும்.

* அண்டை நாட்டின் ஆபத்து உள்ள எல்லையோர மாநிலம் என்ற அடிப்படையில், காஷ்மீரைப் போன்று (அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும்) சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக தமிழகத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியைப் பெற வேண்டும்.

* அந்த நிதியைக் கொண்டு சிறியதும், பெரியதுமான உலகத்தரத்திலான இருபது மீன்பிடி துறைமுகங்களை அமைத்து, ஒவ்வொரு நாளும் கிடைக்கும் கடல் உணவுப் பொருட்களை, ஓரிடத்தில் சேமிக்கும் கடல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி, அங்கிருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்.

* ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டால், அதற்கு நீதிமன்ற விசாரணையின் மூலம் தான் தண்டனை அளிக்கப்பட வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் 'ஒரு' தமிழக மீனவனின் உயிர் பறிக்கப்பட்டால் கூட இலங்கையை எதிரி நாடாக அறிவித்து, சர்வதேச அரங்கில் இதற்கான தீர்வைக் காண வேண்டும்.

இவ்வளவுதான்! மீனவர்கள் பாதுகாப்பு பற்றி பேசும் பொழுது மீன்பிடி துறைமுகம், ஒருங்கிணைந்த கடல் போக்குவரத்து வசதி, ஏற்றுமதி எல்லாம் எங்கு வருகிறது? ஏன் வருகிறது? என்ற கேள்வி எழலாம். ஆனால் மத்திய அரசு நிதி உதவியில், கண்காணிப்பில் கிழக்கு கடற்கரை முழுதும் அடுத்தடுத்து நவீன மீன்பிடி துறைமுகங்கள், அவற்றையெல்லாம் இணைக்கும் நீண்ட தூர கடல் போக்குவரது செயல்பாடுகள், அதற்கும் மேலாக கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கென்றே பிரத்தியேகமான துறைமுகம்..... நினைத்துப் பாருங்கள், இதில் ஒரு அன்னிய நாட்டவன் உள்நுழைந்து தாக்குவது என்பது இந்திய தொழிற்துறையையே தாக்கியதாகாதா...?!

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய விஷயமாயிற்றே, இதை கருணாநிதியால் எப்படி சாத்தியமாக்க முடியும் என்பது தானே கேள்வி? அதையும் பார்ப்போம்.

எதை வைத்துக் கொண்டு மத்திய அரசில், மூன்று கேபினெட், நான்கு இணை அமைச்சர் பதவிகளைப் பெற்றார்? எதை வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழலை ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்? அதே மந்திரத்தை வைத்துக் கொண்டுதான் மேற்கூறிய அனைத்தையும் சாத்தியமாக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் பாண்டியை சேர்த்து மொத்தம் 40 பாரளுமன்ற உறுப்பினர்களில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்டுகளை தவிர்த்து, மீதமுள்ள 29 எம்.பி களும் ஓரணியில் நின்றாலே போதும் - மேற்சொன்ன விஷயங்கள் சாத்தியம் தான். அதற்கு கருணாநிதி செய்ய வேண்டியது ஒன்று தான். மேற்கூறிய ஐந்து கோரிக்கைகள் அடங்கிய ஒரே மனு. அதை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஒரு குழு. அதற்கு தலைமையேற்க வேண்டியது எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா. போராட்டத்தை வடிவமைப்பது வைகோ மற்றும் நெடுமாறன். மேற்படி போராட்டத்தில் எடுக்கப்படும் எந்த விதமான முடிவுகளுக்கும் தி.மு.க வின் 18 எம்.பி களும் கட்டுப்படுவார்கள்! இதை கருணாநிதியே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!

அவ்வளவு தான்(!). இப்படி ஒரு நிலைப்பாடு எடுக்கப் பட்டால், மீதமுள்ள தேசிய கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி களும் போராட்டக்குழுவின் முடிவுகளுக்கு உடன்பட்டாக வேண்டும். அப்படி உடன்படாதவ்ர்கள், அவர்கள் மட்டுமன்றி அவர்கள் பரம்பரையைச் சேர்ந்த எவருமே தமிழகத்தில் இனி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற இயலாத நிலையை உருவாக்க வேண்டியது, வைகோ, நெடுமாறன், சீமான் வகையறாக்களின் பொறுப்பு!

இது நடந்தால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வருமா? வராதா? -  கண்டிப்பாக வரும். ஆனால் பிரச்சினையே, மேற்சொன்ன மாதிரி ஒரு ஒற்றுமையான சூழ்நிலை உருவாக வேண்டும். அதை உருவாக்கும் பொறுப்பை முன்னெடுக்க வேண்டியது யார்? கருணாநிதியா? வைகோ வகையறாவா? அல்லது பொது மக்களா?

பொது மக்கள் எக்காலத்திலும் இதை முன்னெடுக்க மாட்டார்கள். பின்ன கருணாநிதியா? இப்பிரச்சினை தனக்கு விழும் ஓட்டை எந்த விதத்திலும் பாதிக்காது என்கிற போது அவரும் இதை முனெடுக்க மாட்டார். அப்படியானால் இவ்விஷயத்தில் அதிக பிரயத்தனப்படும் வைகோ உள்ளிட்டவர்கள் தான் இதை முன்னெடுக்க வேண்டும். சாத்வீகமான முறையில் கருணாநிதியை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயல வேண்டும். வெற்றி கிட்டும் வரை முயல வேண்டும்.

ட்விட்டரில் எழுதுவது, வலைப்பூவில் திட்டுவது - இதெல்லாம் வேலைக்கு ஆகாது. மக்கள் எழுச்சியுற வேண்டும், தமிழகத்தின் அனைத்துக் கட்சி தலைவர்களும், எம்.பி களும் ஒன்றிணைய வேண்டும்...!

திஸ்கி: ஏய்... ஏய்... யாரப்பா...?  நல்ல கனவு, திடீர்னு எழுப்பி கெடுத்திட்டியே.. பாவி! ...ஏய் என்ன ஏம்ப்பா திட்டுற? நல்ல கனவுன்னா.. அடிக்கடி இதே மாதிரி கனவு காணு, உனக்கு தெரிஞ்சவங்கள எல்லாம் இதே போல கனவு காண சொல்லு. நெசத்துலயே நடக்காமயா போயிடப் போவுது?!

No comments:

Post a Comment