Saturday, January 29, 2011

தமிழ் மீனவர்கள் கொலையும்- தமிழ் ட்விட்டர்களின் முயற்சியும், வெற்றியும்

ஒரே நேரத்தில் பலரது முகத்திரை கிழியும் சமயம் இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும். இந்திய அரசின் முகம், தமிழக அரசின் முகம், ஊடகங்களின் முகம், ஓட்டுக் கட்சிகளின் முகம், பொறுப்புணர்ச்சி அற்ற பிரதமரின் முகம், மௌனம் காக்கும் தமிழக முதல்வரின் முகம் என அத்தனை பேரின் முகமூடிகளும் உதிர்ந்து விழுந்து அவர்களின் போலி முகங்கள் தெரிய வந்திருக்கிறது.

இந்திய அரசின் மெத்தனம்/அக்கறையின்மை/கையாலாகதத்தனம்/கூட்டுக் களவாணித்தனம் அத்தனையும் சேர்ந்து இதுநாள் வரை தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியிருக்கிறது. பலிவாங்கியவன் சிங்கள கடற்படையைச் சேர்ந்தவன். துப்பாக்கியால் சுட்ட போது சத்தம் வந்ததால் இப்போது குரல்வளையை நெறித்துச் சாகடிக்கிறான்.
முள்ளிவாய்க்காலில் குடித்த ரத்தத்திற்குப் பிறகும் பசியடங்காமல் நம் கடற்கரையோரம் வந்திருக்கிறது இலங்கையின் புத்தப்படை.

தமிழக மீனவர்களைச் சிங்களப்படை கொல்வது இன்று, நேற்று நடப்பதல்ல, குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு முந்தைய நிகழ்வு கூட அல்ல, ஏறக்குறைய முப்பதாண்டுகளாக நடக்கும் நிகழ்வு, இந்நிகழ்வின் துவக்கப்புள்ளியைத் தேடினால், இலங்கையில் தமிழர்கள் தன்னுரிமையை பேசத்துவங்கிய போது சிங்களவரின் மனதில் தமிழர்கள் மீது தோன்றிய வெறுப்பின் மிச்சம் இன்று வரை நெருப்பாய் கடல் கடந்தும் பொழிந்து கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துகிறார்கள் என்ற பெயரில் முன்பு தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்ல ஆரம்பித்தார்கள், இன்றும் ஆயுதம் கடத்துகிறார்கள் என்று சுடுகிறார்களா? ஆனால், இறந்த மீனவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து தமிழர்களிடையே சுரனை என்னும் ஆயுதத்தைக் கடத்தியிருக்கிறார்கள். இன்று உண்மையாக உயிராயுதம் கடத்தியிருக்கிறார்கள்.

ஐநா சபையில் தனக்கு ஜால்ரா தட்ட அன்றைக்கு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது கச்சத்தீவு. கச்சத்தீவோடு சேர்த்து சில ஒப்பந்தங்களையும் வழங்கினார்கள் இந்தியக் கர்ண வம்சத்தினர். மகா வம்சத்தினரோ ஒப்பந்தங்களை கச்சத்தீவின் தரையைத் துடைக்க இலவசமாய் கிடைத்த துடைப்புக் காகிதங்களாகப் பயன்படுத்திக்கொண்டு, கச்சத்தீவில் தன்னுடைய கடற்படையின் பயிற்சித்தளத்தின் வேலைகளை தீவிரமாக்கினார்கள். அன்றிலிருந்து தமிழக மீனவன் கண்ணில் பட்டால், எல்லைத் தாண்டிவிட்டான் சுடு அவனை என்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளார்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள். கடைசியாக சென்ற புதன் கிழமை நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் அரசுகளும், ஊடகங்களும் இத்தனை நாள் கள்ள மௌனமே சாதித்தன. மௌனம் சாதித்த இவர்களோடு கூட நேற்று தன்னுடைய தலையங்கத்தில் ஹிந்து குறுக்குச் சால் ஓட்டியது. மீனவர்கள் எல்லைகளை மதித்து மீண் பிடிக்கச் செல்ல வேண்டும், என்று தோளில் குறுக்குக் கயிற்றை இழுத்து மாட்டிக் கொண்டு கீதா உபதேசம் செய்ய புறப்பட்டுவிட்டார் நவீண கிருஷ்னைப் போல என்.ராம். இலங்கையின் அரசும், கப்பற்படையும் மீனவர்களைக் கொல்வதற்கு எதைச் சொல்லி நியாயப்படுத்தினார்களோ, அதையே தானும் ஒரு முறை சொல்லிப்பார்த்தார். வாங்கிய “இலங்கா ரத்ன” விருதுக்கு இவ்வளவு கூட கூவாமல் போனால் என்ன செய்வது. இன்னொரு நாட்டு கடல் எல்லைக்குள் பிற நாட்டு மீனவர்கள் மீன்பிடி படகுகளைச் செலுத்துவதும், அந்நாட்டு கப்பற்படை அவர்களை கண்டிப்பதோ, கைது செய்வதோதான் நடைமுறை. கைதுக்குப் பின்னும் பெரும்பாலும் மீனவர்கள் தண்டிக்கப்படுவதில்லை,மீண்டும் சொந்த நாட்டிடமே ஒப்படைக்கப்படுவார்கள். தனக்கென தனி சட்டம் வைத்துக் கொண்டு, எல்லை தாண்டி நுழைந்தவனை, சுடுவதும், கயிற்றால் கழுத்தை நெரிப்பதுமான புதுவகையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் இலங்கை முன்னோடியாக நிற்கிறது. அவர்களுக்கு ஊதுகுழல் ஊத கோவனம் அவிழ்வது கூடத் தெரியாமல் பின்னால் ஓட காத்திருக்கிறது ஹிந்துவும், ராமும்.

தமிழ் ஊடகங்கள், வழக்கமாக செய்திகள் பிரசுரித்தன. தமிழ்நாட்டில் இருக்கும் பிற வடநாட்டு ஊடகங்கள்

வெறும் செய்தியாகப் பிரசுரித்தன. மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையாகவோ, உயிராதார பிரச்சினையாகவோ கூட அவை பார்க்கத் தவறின. குறைந்தபட்சம் தேச அவமானப் பிரச்சினையாகவோ கூட அவை பார்க்கவில்லை. குடியரசு தின விழா கொண்டாடப் போய்விட்டார்கள்.
மீனவன் செத்தானா? அது வழக்கம். மீனவன் கொல்லப்பட்டானா? ஓ குற்றவாளி யார், பார்ப்போம். சிங்களக் கடற்படை மீனவனைக் கொன்றார்களா? ஓ அது வழக்கமான செய்தி, மூன்றாம் பக்கத்தில் இடம் இருந்தால் போடு, இல்லாமல் போனால் வெளியிட வேண்டாம் எந்த இழப்பும் இல்லை. இவர்கள் முக்கியத்துவமெல்லாம், உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதைப்பற்றியும், அவற்றைப் பற்றிய சிக்கல்களையும், நடிகைகளின் மேணிகளில் பாய்வதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

அவர்கள் ஆட்சியில் நீங்கள் மூன்று வேளைதான் உண்டீர்கள், எங்கள் ஆட்சியில் நீங்கள் ஒரு வேளை உண்ணுகிறீர்கள், மூன்றிலிருந்து ஒன்றுக்கு முன்னேற்றியிருக்கிறோம் என்று அரசுகள் கூவத் தொடங்கியிருக்கின்றன. இங்கு யார் கூவியது எனபதை விட யார் இருந்தாலும் இதைப் போல்தான் பேசுவார்கள், பேசியிருப்பார்கள், அவர்கள் நிலை அப்படி, தேர்தல் சமயம் வேறு. குற்றமிழைத்தவனை கூப்பிட்டு விசாரிக்காமல், நான் விசாரிக்கப் போறேன், நான் விசாரிக்கப்போறேன் என்று கையாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள் மைய்ய அரசாங்கத்தினர். இப்போதுதான் மெல்ல வடநாட்டு ஊடகங்கள் திரும்பிப்பார்க்கின்றன.
இந்நிலையில், தமிழ் ட்விட்டர்கள், ஊடகங்களின் மௌனங்களைத் தாண்டி செய்தியை, நம் சிக்கலை உலகுக்குத் தெரிவிக்க, ட்விட்டரில் கடந்த சில நாட்களாக, சிங்கள கடற்படையின் அடாவடித் தனத்தை கண்டித்தும், இந்திய/தமிழக அரசுகளின், ஊடகங்களின் மௌனங்களைக் கண்டித்தும். நம் சிக்கல்களை உண்மையாக உலகுக்கு எடுத்துச் சொல்ல #tnfisherman என்ற ஹேஷ் டேகைப் பயன்படுத்தி இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட பொருளாக மாற்றியிருக்கிறார்கள், உலகளவில் பேசப்படும் பொருளாக எடுத்துச் செல்லும் வரையிலும், தமிழக மீனவர்கள் கொல்லபடுவதற்கான, சிக்கல் கிடைக்கும் வரையிலும் இந்த இயக்கத்தை விட்டுவிடுவதில்லை, பணி தொடர்வோம் என உறுதியுடன் உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி வருகின்றனர். ட்விட்டருக்கு அடுத்தபடியாக http://savetnfisherman.org மற்றும் http://savetnfishermen.org என்ற இருதளங்களிலும் கட்டுரைகளையும், தகவல்களையும் திரட்டியும் வருகின்றனர். தமிழ் ட்விட்டர்களின் இந்த அயராத முயற்சிக்குப் பிறகே தெஹல்கா, ஐபின் லைவ், என்டிடிவி போன்ற ஊட்கங்கள் தமிழக மீனவர்கள் பிரச்சினையைப் பேசத் துவங்கின. அதுவும் நம்முடைய ஹேஷ்டேகை அவர்களும் உபயோகித்துப் பேசினர். இந்த வகையில் தமிழ் ட்விட்டர்கள் செய்த மிகப்பெரிய சேவை இது, பாராமுகமாய் இருந்தவர்களை பேசச்செய்ததும், அவர்கள் கவனத்தை நம் பக்கம் திருப்பியதும் வரவேற்கத் தக்கதே.

இன்னும் தொடர்ந்து பேசுவோம். நம் மீனவர்களுக்கு விடிவு கிடைக்கும் வரை, நம் குரலை தளர விடாமல் நம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் முன்னெடுப்போம்.

ப‌திவ‌ர்:  த‌மிழினிய‌ன்

No comments:

Post a Comment