Saturday, January 29, 2011

கடலும், கடல்சார்ந்த கொலைகளும்!

கரைவரைக்கும் நம்நாடு
கரைகடந்தால் யார் நாடு?
கேள்விக்குப் பதிலின்றிக்
குமுறிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்....

யாருடைய உயிர்போனால்
எனக்கென்ன வந்ததென்று,
பல்லிடையில் மாட்டிக்கொண்ட
முள்ளெடுத்துக் கொண்டிருக்கிறது
மையமும் மாநிலமும்...

இருந்தாலோ ஆயிரம்தான்
செத்தாலோ லட்சமென்று
உயிர் விலைபேசி
ஊர்வாயை அடைத்துவிட்டு,

அயிரைமீன் குழம்புவைத்து
அடுத்தவேளை சோறுதின்று,
அகலவாய் திறந்து
ஏப்பமிடுகிறது அரசியல்...

முதலைவாயில் நுழையக்கூடப்
பயப்படாத வீரவர்க்கம்
கவலைவாயில் நுழைந்ததாலே
கலங்கிப்போய் நிற்கக்கண்டு,

கொல்லப் பணங்கொடுத்த
கூற்றுவப் பிறவிகளிடம்,
நல்லதோர் நியாயம்கேட்டு
நாதியற்று நிற்கிறது தமிழினம்...

இனிமேல்,
வெல்லுவோம் விதியையென்று
வீறுகொண் டெழுந்துவிட்டால்
மெல்லப் பகைமைசாயும்
வீரமே, விழித்தெழு நீ!

பதிவர் - எல்.கே

No comments:

Post a Comment