Saturday, January 29, 2011

#tnfisherman

உங்களுக்குச் (இலங்கை ராணுவம்) சுட்டு விளையாட பொம்மை வேண்டுமென்றால் சொல்லுங்கள். எங்கள் பிரணாப் முகர்ஜி நிறைய வாங்கித் தருவார். எங்கள் மீனவர்களை விட்டுவிடுங்கள். அசல் ராணுவத்தையே அனுப்பித் தந்தவர்களுக்கு பொம்மைகள் வழங்குவதில் ஒரு கஷ்டமும் இருக்காது. என்ன எங்கள் வரிப்பணம்தான் விரயமாகும். இந்தியனின் உயிருக்கே மதிப்பில்லாதபோது இந்தியனின் வரிப்பணம் பற்றிக் கவலைப்பட யாருக்கும் நேரம் இருக்கப் போவதில்லை.

உழைக்கச் செல்லுமிடத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற மீனவனின் சோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டும்.

Between the devil and the deep sea என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அது எங்கள் மீனவனின் தின வாழ்வில் நடக்கும் நிதர்சனம். அட்சரம் அட்சரமாக அத்தனையும் உண்மை. ஒருபுறம் கடல், மறுபுறம் இலங்கை ராணுவம். ஒருவேளை எம் மீனவன் படும்பாட்டைக் கருத்தில் கொண்டுதான் அந்தப் பழமொழியே வந்ததோ என்னவோ?

பட்ஜெட் இன்னும் இரண்டொரு வாரங்களில் வந்துவிடும். மத்திய நிதியமைச்சர் மீனவர் நஷ்ட ஈடு என்று ஒரு புதுத் தலைப்பில் சில பல கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கலாம். அதற்கு அவையில் பலத்த கரகோஷம் எழலாம். இதெல்லாம் நடந்தால் நான் நிச்சயம் ஆச்சரியப்பட மாட்டேன்.

கொழுத்த மீனை வெட்டும்பொது வரும் ரத்தத்தைப் பார்க்கையில் என் தமிழனின் ரத்தம் குடித்துக் கொழுத்த மீனோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

இப்போதெல்லாம் மீனை உண்ணும்போது தொண்டையில் முள் குத்துவதில்லை. ஆனால் மீனைப் பற்றி நினைத்தாலே நெஞ்சில் ஆயிரம் நெருஞ்சிமுள் ஒரே நேரத்தில் தைக்கும் வலி.

இலங்கை, இந்திய அரசாங்கங்களே, you are mean


சுட்டி   : #tnfisherman
பதிவர் : R கோபி  

No comments:

Post a Comment