Saturday, January 29, 2011

மலர்தூவும் ஹெலிகாப்டரும் மாண்டுபோன மீனவனும்...!

குடியரசுத் தினம்
கொண்டாடப்படுவது - இது
அறுபத்தியிரண்டாம் முறை.
குறையொன்றுமில்லை
மன்மோகன் கண்ணா!

டெல்லி ராஜ பாட்டையில்
இந்தியாவின் 'டெவலப்மெண்ட்'
குதூகலத்தோடு கொப்பளித்தது.
ஆயினும் ஒரு குறை :
அடிக்கடி வந்துபோகிற
அண்டை நாட்டு விருந்தாளி
ராஜபக்ஷே காணப்படாததால்
ராஜபாட்டையில் ராஜகளையில்லை.
இருந்தாலும் -
குறையொன்றுமில்லை
மன்மோகன் கண்ணா!

'ஸ்விஸ்' கருப்புப் பண
முதலைகளின் பெயர்களை
கடவுளே கேட்டுக்கொண்டாலும்
வெளியிடவே மாட்டோம்' என்று
மனித உரிமைக்கு மரியாதை கொடுக்கும்
நல்லெணம் கொண்டோரே;
ஆயினும் ஒரு குறை :
வயதில் மூத்த, மூத்த குடிமகள்
ராணுவ மரியாதைக்கு
அவ்வளவு நேரமும் 'சல்யூட்' அடிப்பது
மனித உரிமை மீரல் ஆகாதா?
அதற்குப் பதில் அடுத்தமுறை
சோனியாவையே கொடியேற்றிக்
கொண்டாட வைக்க
சட்டத் திருத்தம் கொண்டுவந்தால்
சகலருக்கும் சந்தோஷம்.
மற்றபடி -
குறையொன்றுமில்லை
மன்மோகன் கண்ணா!

இருந்தாலும் ஒரு குறை;
சுழன்றடிக்கும் புயலுக்கும்,
நொறுக்கிப் போடும் பூகம்பத்துக்கும்,
நாசமாய்ப் போகும் சுனாமிக்கும்,
புல்லுமேட்டுச் சாவுக்கும்,
போட்டுத் தள்ளப்பட்ட மீனவனுக்கும்
எட்டிப் பார்க்காத
ராணுவத்து எலிகாப்டர்கள்
உங்கள்மீது
பூத்தூவ மட்டும்
நேரந்தவறாமல்
பளபளப்பு மாறாமல் வந்துவிடும்
ராணுவத்தின் ரகசியம்தான் என்ன?
அழகுக்காக அமைக்கப்பட்ட
அந்த எலிகாப்டரில்
பூகம்பத்தின் புழுதி படுமோ
அல்லது
சுனாமி உப்பால் துருப்பிடிக்குமோ
அல்லது அதில்
பிணங்களை ஏற்றினால்
இந்த நாட்டு கவுரவம்
பாழாய்த்தான் போகுமோ? -
(மந்திரியின் மெர்சிடெஸ் காரில்
முனியாண்டியையும் மூக்காத்தாளையும்
உட்கார வைத்தால்
மெர்சிடெஸ் மரியாதை
மயிராய்ப் போகும் என்பதைப் போல).
எலிகாப்டர்களை மீண்டும் துடைத்து
பரணையில் வைத்துவிடுங்கள்.
மற்றபடி
குறையொன்றுமில்லை
மன்மோகன் கண்ணா!

ராணுவக் குதிரைகளுக்கும்
ஒய்யார ஒட்டகங்களுக்கும்
ராஜ பாட்டையில்
சாணி போடக் கூடாது என்று
எப்படிப் பழக்கி விட்டீரோ
அது போல,
உலா வந்த ராணுவத் தளவாடங்களுக்கும்
வடக்கு நோக்கி மட்டும்தான்
சுட வேண்டும் என்று
எப்படிப் பழக்கினீர்கள்?
இதைத் தவிர
குறையொன்றுமில்லை
மன்மோகன் கண்ணா!

இந்த ராணுவ அணிவகுப்பில்
அண்டை அயலார்
பயந்து பேதி பிடுங்கிப் போயிருப்பார்களா
என்பது தெரியாது.
ஆனால் - குறைந்தபட்சம்
குட்டி நாடு இலங்கையாவது
பயந்து போயிருந்தால்
அது இன்றிலிருந்து
நம் மீனவர்களைக் கொல்லாது
என்று கொள்ளுவோம்!.
மற்றபடி -
குறையொன்றுமில்லை
மன்மோகன் கண்ணா!

எங்கள் செந்தமிழ் நாட்டிலோ -
முதுகு வலியால் அவதியுண்ட
எமது முதல்வர்
போன முறை குடியரசை
புறந்தள்ளினார்.
அதற்கு முன்னரும்
வேறு பல வலிகளால்
குடியரசு விழாக்களை
குப்புறத் தள்ளியிருக்கிறார்.
இந்த முறை
வந்து, இருந்து,
வாழ்த்திவிட்டுப் போனார்.
ஏனென்றால் -
இம்முறை அவருக்கு
முதுகு வலியும் இல்லை;
வேறெந்த வலியுமில்லை;
அவருக்கும் -
குறையொன்றுமில்லை.
மன்மோகன் கண்ணா -
எங்களுக்கும் குறையொன்றுமில்லை.
வாழ்க குடியரசு!

- புதிய பாமரன்

No comments:

Post a Comment