Saturday, January 29, 2011

இணையத்தால் என்ன சாதிக்கலாம்? #tnfisherman

இணைய தளம்
டுவிட்டர்
ஃபேஸ்புக்
கடந்த சில நாட்களாகவே டுவிட்டர் பொங்கி குமுறிக் கொண்டிருக்கிறது, ப‌ல பத்தாயிரம் டுவிட்டுகளைக் கடந்துகொண்டிருக்கிறது. சற்றேறக்குறைய அனைத்து தமிழ் பதிவர்களும் சளைக்காமல் டுவிட்டர் தகவல்களை அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். தமிழ் இணைய உலகம் ஒருமுகமாக ஒன்றிணைந்து அரசுகளை எதிர்த்து குரல் கொடுப்பது இதுவே முதல் முறை எனக் கருதுகிறேன். மட்டுமல்லாது இணையப்பயன்பாடு இல்லாதவர்களுக்கும் கூட இது சென்று சேர்ந்து ஒரு அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இணையத்தால் என்ன சாதிக்கலாம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. ஆனால் கொதிக்கும் பாலில் பொங்கும் நுரை போல கொதிப்பு அடங்கியதும் வலுவிழந்து போகும். ஏனென்றால் இது உணர்ச்சி வேகத்தில் ஒருமுகப்படும் ஒரு அலை.ஆனால், நம் கோபம் நியாயமானது. இந்த எழுச்சியின் அடிப்படையான பாதிக்கப்பட்டோருக்காக‌ குரல் கொடுப்பது என்பது இன்றியமையாத் தேவையானது. இந்த நியாயமும் தேவையும் உணர்ச்சி வேகத்தின் மீதும், இரக்க உணர்ச்சியின் மீதும் ஏறிப் பயணிப்பது இலக்கைச் சேர உதவாது என்பதை நாம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். அறிதலின் மீது, தேடலின் மீது, உண்மையின் மீது பயணப்படாத வேகம் அடங்கிப் போவது இயல்பானது. சில‌ டுவிட்டுகளை அனுப்பிவிட்டு, சில நாட்கள் பேசிவிட்டு நகர்ந்துவிட்டோமென்றால் நேற்றைய ஜெயக்குமார், நாளைய ஜெயக்குமாரகவும் தொடரும்.இது மீனவர்களின் சோகம் மட்டுமேயல்ல. அரசின் அலட்சியம் என முடித்துக்கொள்வதும் அல்ல. இது திட்டமிட்டு நிகழ்த்தபடுபவை என்பதை நாம் உணர வேண்டும். இந்தக் குரல் தமிழ்நாட்டை தாண்டி ஒலிக்கவில்லை, நாங்கள் இந்தியர்கள் இல்லையா? என இன்று கேட்பவர்களில் எத்தனை பேர் தண்டகாரண்யாவில் கொல்லப்படும் இந்தியர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? காஷ்மீரில் கல்லெறிந்த குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டனரே, இந்தியாவில் எப்படி பிரிவினைவாதம் பேசலாம் என எண்ணியவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? கொன்றால் மட்டும் தானா? தண்ணீர் வரவில்லை என்று சாலை மறித்தபோது திரைப்படத்திற்கு நேரமாகிறது என்று திட்டியவர்கள் எத்தனை பேர்? விலைவாசி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சம்பளம் வாங்கவில்லையா என வக்கணை பேசியவர்கள் எத்தனை பேர்? தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும்போது இன்னும் என்னதான் வேண்டும் இவர்களுக்கு என ஏகடியம் பேசியவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அல்லது அந்த பாதிப்புகள் உங்களுக்கு இல்லையா? எல்லாவற்றையும் தனித்தனியே பார்த்து தவிர்க்க காரணம் தேடிய அனைவருக்கும் இந்த டுவிட்டர் பாட்டுகள் இன்னுமொரு பொழுது போக்கு.இவை அனைத்திலும் ஊடாடும் இழை ஒன்றுண்டு. காஷ்மீரில் கல்லெறிந்தவர்களுக்கு சுதந்திர தாகமுண்டு. அவர்களின் சுதந்திரத்தை துப்பாக்கிகளால் துளைப்பது இந்திய அரசு. அவர்களின் வாழ்வுரிமையில் காட்டும் அதே அலட்சியம் தான் இலங்கையால் சுடப்படும் மீனவர்களின் வாழ்வுரிமையிலும் காட்டப்படுகிறது. காஷ்மீரிகளைச் சுடுவது இந்திய அரசு, மீனவர்களைச் சுடுவது இலங்கை அரசு. அரசுகள் வேறு ஆனால் அவைகளின் நோக்கம் ஒன்று. ஆஸ்திரேலியாவில் சிலர் கொல்லப்பட்டவுடன் வெடித்தெழுந்த அரசு, ஐநூற்றுக்கும் அதிகமாக மீனவர்கள் செத்து வீழ்ந்த பின்னரும் தன் உறக்கம் கலைய மறுக்கிறது என்றால் காரணம் என்ன? அமெரிக்காவில் ஒரு இந்தியன் விபத்தில் மரணமடைந்தாலும் ஆதங்கப்படும் அரசு, வளைகுடாப் பாலையில் வறுபட்டு விழும் இந்தியர்களுக்காக சொட்டுக் கண்ணீரும் வடிப்பதில்லை என்றால் காரணம் என்ன? ஆளும்வர்க்க நலன்களுக்கு உகந்தவர்களுக்காக மட்டுமே அசைந்து கொடுப்பது தான் அரசு. மற்ற அனைவரும் தேர்தலுக்கான புள்ளிவிபரம் மட்டுமே.மீனவர்களை கடலிலிருந்து மட்டுமல்ல கடற்கரையிலிருந்தும் அகற்ற நினைக்கிறது இந்திய அரசு. சிரமப்பட்டு ஏன் மீன்பிடிக்க வேண்டும் என சுய உதவிக்குழுக்கள் மூலம் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக்கொடுக்கிறது. மறுபுறம் கடலில் சுட்டுக்கொல்ல அனுமதி கொடுக்கிறது. நினைத்துப்பாருங்கள், இந்தியாவின் இராணுவ பலத்திற்கு முன்னால் இலங்கை சுண்டைக்காய். அந்த சுண்டைக்காய் இந்தியாவை எதிர்த்து ஐநூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்திருக்க முடியுமா? இந்தியாவின் அனுமதி இல்லாமல் துப்பாக்கியை தூக்கத்தான் முடியுமா?இந்த இந்தியாவை எதிர்த்து காஷ்மீரில் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்று எப்படி கூறுவீர்கள்? வடகிழக்கில் போராடுபவர்களை எப்படி தீவிரவாதிகள் என்பீர்கள்? அவர்கள் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்றால் இலங்கை கடற்படை மட்டும் எப்படி உங்களுக்கு எதிரியாகும்? இலைகளைக் கிள்ளிப் போட்டு நச்சுமரத்தை வீழ்த்திவிட முடியுமா? வேரோடு வெட்டி வீழ்த்த வேண்டும். அதற்கு தமிழக மீனவர்களை கொல்கிறார்களே என்று இரக்கப்படுவது மட்டும் போதுமானதல்ல. அதிகாரவர்க்கத்தின் நலன்கள் என்ன? அதை ஆட்டுவித்துப் பலனடைவது யார் என்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் வரை எதுவும் இங்கு சாதியமில்லை. கண்டு கொள்வோம். வங்கக்கடலின் நீரிலிருந்து பொங்கி எழட்டும் ஒரு நெருப்பு அலை.தொடர்புடைய இடுகைகள்


தமிழக மீனவர்களை கொல்லச்சொல்வது இந்திய அரசுதான்

மீனவர்கள் வலையில் சிக்காத கச்சத்தீவுநான் அனுப்பிய டுவிட்டுகள்


காஷ்மீரில் போராடுபவர்கள் பிரிவினைவாதிகள் வடகிழக்கில் போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்றால் இலங்கை கடற்படை மட்டும் எப்படி எதிரி? #tnfishermanஈழப் போராட்டம் இறையாண்மை, காவிரியில் தண்ணீர் வராது தேசிய ஒற்றுமை மீனவனைக் கொல்வது மட்டும் எல்லை தாண்டிய பிரச்சனையா? #tnfishermanஎகிப்தில் இந்தியர்கள் ஷேமம், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் ஷேமம், தமிழ் மீனவர்கள் இந்தியர்களில்லை போட்டுத்தள்ளு #tnfishermanதொகுதி பேசத்தான் கருணாநிதி டில்லி போகிறார் என்று பொய் சொல்லாதீர்கள், மீனவர்களைக் காக்கவே செல்கிறார் #tnfishermanமீனவர்களும் மக்களும் ஆயுதம் ஏந்தினால் அதை வன்முறை என வரையறை செய்ய முடியுமா?#tnfishermanகடல் எல்லை தாண்டுவது உலகெங்கும் நடப்பது. சுட்டுக்கொல்வது இங்கு மட்டும் நடப்பது. இதன் பொருள் அரசுக்கு இதில் உடன்பாடு என்பது. #tnfishermanhttp://www.PetitionOnline.com/TNfisher/ நண்பர்களே, இதிலும் உங்கள் கையெழுத்தை பதிவு செய்யுங்கள் #tnfishermanகாஷ்மீர் கல்லெறி வன்முறையா? மீனவர் படுகொலைக்கு இரங்குவதா? தவறு. போராடவேண்டும்#tnfishermanமத்திய மாநில அரசுகளிடம் மனுக்கொடுக்க நாம் ஒன்றும் பிச்சைக்காரர்களல்லவே #tnfishermanபன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கான அனுமதியை புரிந்து கொள்ளாமல் மீனவர் படுகொலைகளையும் புரிந்துகொள்ள முடியாது #tnfishermanமீனவர்கள் கொல்லப்படுவதும் அதை எதிர்த்து குரல் கொடுப்பதும் தனிப்பட்ட பிரச்சனைகளால்ல‌ #tnfisherman


பதிவர்: செங்கொடி

No comments:

Post a Comment